கரு.ஆறுமுகத்தமிழன்
சடங்குகளையே முன்வைக்கும் வைதிக மரபில், சடங்குகளைத் தாண்டி மெய்யியல் பேசுவன உபநிடதங்கள். முழு ஈடுபாட்டுடன் பக்கத்தில் உட்கார்ந்து சீடர் கேட்க, அவருக்காகக் குரு உபதேசித்தவற்றின் தொகுப்பே உபநிடதம். வேதங்களின் அந்தமாக, அதாவது கடைசிப் பகுதியாக இருக்கும் உபநிடதங்களுக்கு வேதாந்தம் என்றும் பெயர்.
உபநிடதங்களின் எண்ணிக்கை நூற்றெட்டு என்கிறது முக்திகோபநிடதம். ரிக் வேதச் சார்பில் பத்து, சுக்ல, யஜூர் வேதச் சார்பில் பத்தொன்பது, கிருட்டிண யஜூர் வேதச் சார்பில் முப்பத்திரண்டு, சாம வேதச் சார்பில் பதினாறு, அதர்வ வேதச் சார்பில் முப்பத்தொன்று, ஆகமொத்தம் நூற்றெட்டு. இவற்றில் முதன்மையானவை பத்து. இந்தப் பத்தில் ஒன்று சாந்தோக்ய உபநிடதம் — சாமவேதச் சார்புடையது.
சாந்தோக்ய உபநிடதத்தில் குருவாக உத்தாலகரும், சீடனாக அவர் மகன் சுவேதகேதுவும் இருக்கிறார்கள். தன் மகன் சுவேதகேதுவை வேறு குருவிடம் படிப்பதற்காக உத்தாலகர் அனுப்புகிறார். படிப்பை முடித்துத் திரும்பும் சுவேதகேது தந்தை உத்தாலகரிடம் ‘அனைத்தையும் கற்றுவிட்டேன்’ என்றான். ‘அனைத்தையும் அறிந்துகொண்ட என் மகனே! அறிவுக்கு அப்பாற்பட்டது எதுவோ அதை அறிந்தாயா?’ என்று உத்தாலகர் கேட்டார். ‘அது எது?’ என்றான் சுவேதகேது.
அது நீதான்
உத்தாலகர் சுவேதகேதுவுக்கு உபதேசிக்கத் தொடங்குகிறார்: ‘பரம்பொருள் ஒன்று இருக்கிறது. அந்தப் பரம்பொருளிலிருந்து வந்ததே இந்த உலகம். பரம்பொருளின் தொடர்பில்லாத பொருள் ஏதும் இவ்வுலகில் இல்லை. இருக்கின்ற எல்லாவற்றிலும் உயிருக்கு உயிராக அது இருக்கிறது. அது எது என்றால், அது நீதான் (தத்வமசி) சுவேதகேது’ என்றார் உத்தாலகர்.
‘அது நீதான்’ (‘தத் துவம் அசி’) என்னும் இச்சொற்றொடர் வைதிக மரபில் ‘மகாவாக்கியம்’ என்று போற்றப்படுவது; பெரும் மெய்யியலாளர்கள் அனைவரும் தத்தம் கொள்கைக்கு ஏற்றவாறு பொருள் விளக்க முனைந்த பெருமைக்கு உரியது. திருமூலரும் இந்த மகாவாக்கியத்தைத் தன் கொள்கைக்கேற்பப் பொருள் விளக்க முனைகிறார்:
தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோடு எய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும்; பிறப்புஅற
ஏன்றன மாளச் சிவமாய் இருக்குமே.
(திருமந்திரம் 2437)
தொம் (துவம் / நீ) எனும் பதம், தத் (அது) எனும் பதம், அசி (ஆதல்) எனும் பதம், இம்மூன்றையும் உரிய வகையில் கூட்டிப் பொருள் உணர்ந்தவன் பராபரம் ஆவான்; தன்மேல் ஏறியிருக்கும் மூன்று மலங்களும் நீங்கிச் சிவமாகி இருப்பான்.
‘தத் துவம் அசி’ (அது நீதான்) என்ற தொடரின் சொல் வரிசை மாற்றித் ‘துவம் தத் அசி’ (நீ அது ஆதல்) என்று ஆக்குகிறார் திருமூலர். இரண்டுக்கும் என்ன பெரிய வேறுபாடு? ‘அது நீதான்’ என்பதைக் காட்டிலும்‘நீ அதற்கு நிகர் ஆதல்’ என்பது தன் கொள்கைக்குப் பொருத்தம் என்று திருமூலர் நினைத்தார் போலும். ‘நீ அது ஆதல் எப்படி?’ என்று கீழ்வருமாறு விளக்குகிறார் திருமூலர்:
தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்பது அசிஅத்துள் நேரிழை யாள்பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை இன்றிக் கலந்துநின் றானே.
(திருமந்திரம் 2439)
‘அது’ (தற்பதம்) என்பதையும் ‘நீ’ (துவம் பதம்) என்பதையும் இணைக்கும் பதம் ‘ஆதல்’ (அசி) என்னும் பதம். ‘நீ’ என்னும் உயிரையும், ‘அது’ என்னும் சிவத்தையும் இணைத்து, உன்னை அதுவாக ஆக்க உதவுவது ‘அசி’ என்னும் நேரிழையாள் ஆகிய சிவசக்தி. சொற்பதங்களால் சொல்ல முடியாத சிவத்தைக் கற்பனை இல்லாமல் உண்மையாகவே கலந்து நிற்க வைப்பது எது என்றால் சிவசக்தியாகிய சிவனின் அருளே.
‘எல்லாமே ஒன்றுதான்; அந்த ஒன்று நீதான்’ என்னும் வேதாந்த மரபுக்கு மாறாக, அதன் மகாவாக்கியத்தையே எடுத்துப் பொருள்விளக்கி, ‘எல்லாமே ஒன்றில்லை. இறை தனி; உயிர் தனி. இறை மேலே; உயிர் கீழே. இறையருள் இருந்தால், உயிர் தகுதிபெற்று இறையோடு ஒன்றிக் கலக்கலாம்; நீ அது ஆகலாம்’ என்று சித்தாந்த மரபு பேசுகிறார் கொள்கைப் பிடிப்புள்ள திருமூலர்.
(அருள் உயிர் பெறுவோம்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : arumugatamilan@gmail.com