ஆனந்த ஜோதி

தெய்வத்தின் குரல்: ஞான பண்டிதன் முருகன்

செய்திப்பிரிவு

பரமாத்மாவை அடைய நாலு மார்க்கங்கள் ஞானம், பக்தி, கர்மம், யோகம் இருக்கின்றன. சரீரம், மனம், இதற்கெல்லாம் ஆதாரமாக இருக்கிற ஆத்மா என்ன என்கிற விவகாரத்திலேயே, எப்போதும் இருந்து கொண்டிருந்தால், கடைசியில் அதுதானே பளிச்சிடுகிறது. இதுதான் ஞானம். அங்கே, அறிகிற ஜீவாத்மாவுக்கும் அறியப்படுகிற பரமாத்மாவுக்கும் பேதமே இல்லை. எல்லாம் ஒரே சாந்த சமுத்திரமாக அடங்கிவிடுகிறது.

சுப்ரமணியர் ஞானம், பக்தி, கர்மம், யோகம் எல்லாவற்றுக்கும் முடிவான பரம சத்தியமாக இருக்கிறார். முருகன் என்றால் ஞான பண்டிதன், ஞானோபதேசம் என்பது நினைவுக்கு வந்துவிடுகிறது. அத்வைத ஞான சொரூபமாகவே, அவரைத் திருப்புகழிலும் கந்தரனுபூதியிலும் அருணகிரிநாதர் சொல்லியிருக்கிறார்.

நான் வேறு எனாதிருக்க, நீ வேறு எனாதிருக்க

ஏகபோகமாய் நீயு நானுமாய்

இறுகு வகை பரம் சுகமருள்

யானாகிய என்னை விழுங்கி வெறும்

தானாய் நிலை நின்றது தற்பரமே

பக்தி மார்க்கத்தில் முருகன் முடிவாக இருப்பதைச் சொல்லவே வேண்டாம்! அடியார்களின் பக்தியையும் அவர்களிடம் கருணையையும்தான் புராணக்கதைகள், சம்ஸ்கிருத ஸ்தோத்திரங்கள், தமிழ்த் துதி நூல்கள் எல்லாம் விஸ்தாரமாகச் சொல்கின்றன.

கர்மா என்று எடுத்துக்கொண்டாலும், குமாரிலபட்டராகவும் ஞானசம்பந்தராகவும் அவதரித்து அவரே, இந்த மார்க்கத்தை ஸ்தாபித்திருக்கிறார். அப்பர் ஸ்வாமிகள் ‘தாஸமார்க்கம்’ என்ற வழியில் எப்போதும் லோக க்ஷேமத்துக்காக ஊழியம் செய்துகொண்டே இருந்தவர்.

அவர் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று சொன்னவர். இந்த வரி வருகிற செய்யுளின் ஆரம்பம் நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன் என்பது! கடம்ப மாலையை விரும்பி அணிகிற முருகன்தான் கடம்பன். ‘முருகனைப் பெற்ற அம்பாளைத் தன் பாகத்தில் கொண்ட பரமேசுவரன்’ என்ற ஸோமாஸ்கந்த மூர்த்தமாக இங்கே அப்பர் சொல்கிறார். நிஷ்காம்யமாகப் பணி செய்து கிடக்கிற பான்மையை முருகன் விசேஷமாக அருள்வான் என்கிற மாதிரி ‘நம் கடம்பன்’ என்று ஆரம்பத்திலிருக்கிறது!

கடைசியில் ‘யோகம்’ எனறு சொன்னேன். இது பிராண மூலத்தைக் கண்டுபிடித்து, அதோடு சேர்கிற வழி. பிராண சக்தி என்பது சரீரத்தில் மூலாதாரம் என்கிற இடத்தில், குண்டலினி என்கிற சர்ப்ப ரூபத்திலேயே இருக்கிறது. நமக்கெல்லாம் அதன் மகாசக்தி தெரியவேயில்லை. அது குண்டலாகாரமாகச் சுருட்டிக்கொண்டு தூங்குகிற பாம்பாகவே இருக்கிறது. தூங்கும் பாம்பைத் தட்டி எழுப்புவதற்குத்தான் யோக சாதனைகள் இருக்கின்றன. சுப்ரமண்யர் யோக விஸ்வரூபம். அதனால்தான் அவரை எப்போதும் பாம்போடேயே சேர்த்துச் சேர்த்துச் பேசுகிறோம்.

அவரே யோகத்தின் நிறைவு

ஞானமும் யோகமும் முடிகிற இடத்தில் ஒர் ஆட்டம், அசைவு இல்லை. லோகமே இல்லை. உணர்ச்சிகளே இல்லை. இதெல்லாம் பட்டுப்போன இடம் அது. இப்படிப் பட்டுப்போன நிலையில் ஈசுவரனை ‘ஸ்தாணு’ என்று சொல்வது வழக்கம்; ‘பட்ட கட்டை’ என்று அர்த்தம். சுசீந்திரத்தில் ‘ஸ்தாணுமாலயன்’ என்று கேட்டிருப்பீர்கள்.மும்மூர்த்தியும் சேர்ந்த ஸ்வரூபம். அதில் ‘ஸ்தாணு’ என்பது பரம வைராக்கியமான பரமேச்வரன்தான். உணர்ச்சியில்லாவிட்டால், ‘மரத்து’ப் போகிறது என்கிறோமல்லவா? அப்படிக் காய்ந்து மரமாக இருக்கிறவர் ஸ்தாணு.

அதே மாதிரிதான் அம்பாளும், கருணாமயமான அவரும் பரம விரக்தியாக இருக்கிற ஒர் அவஸ்தை (நிலை) உண்டு. அவள் எப்போதும் ஈசுவரனையே பற்றிப் படர்ந்திருப்பவள். அவர் மரமாக இருந்தால், இவள் கொடியாகச் சுற்றிக்கொண்டிருப்பாள். ஸ்ரீசைலத்தில் அவர் அர்ஜுன (மருத) மரமாக இருக்கிறார்; இவள் மல்லிகைக் கொடியாகச் சுற்றிக்கொண்டிருக்கிறாள்; அதனால்தான் அவருக்கு மல்லிகார்ஜுனர் என்று பெயர். அது நல்ல பசுமையோடு இருக்கப்பட்ட மரம். பட்ட மரமாக அவர் இருக்கும்போது அம்பாள் என்ன செய்கிறாள்?

பரமேசுவரன் பச்சைப் பசேலென்று கப்பும் கிளையுமாக ஒரு மரம் மாதிரி இருந்தால், அம்பாள் ஒரு பசுங்கொடியாக அவரைச் சுற்றிக் கொண்டிருப்பாள். அவர் பட்ட மரமாக, காய்ந்த கட்டையாக இருக்கும்போது, அவள் என்ன செய்கிறாள்? அப்போதும் அவரைச் சுற்றிக்கொண்டிருக்கிறாள். ஆனால், பச்சைக் கொடியாக இல்லை. இலையே இல்லாமல் நார் மாதிரியான கொடியாக, அவரைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அபர்ணா என்று அவளுக்கு ஒரு பெயர்.

ஈசுவரனும் அம்பாளும் இருந்தால் ஸோமாஸ்கந்தமாக அங்கே சுப்ரமண்யரும் இருக்க வேண்டும் அல்லவா? ஈசுவரன் ‘ஸ்தாணு’வாகவும், அம்பாள் ‘அபர்ணா’வாகவும் இருக்கும்போது முருகன் எப்படியிருக்கிறார்? ‘விசாக’ ராக இருக்கிறார் என்று சொல்லலாம். ‘சாகை’ என்றால் கிளை என்று அர்த்தம். வேதத்தில் பல கிளைகள் உண்டு. அது ஒவ்வொன்றுக்கும் இன்ன வேத சாகை என்றே பெயர் சொல்வார்கள்.

‘வி’ என்பது பல அர்த்தங்களில் வரும். சில சமயங்களில் ஒன்றை உயர்த்திக் காட்ட ‘வி’ சேர்ப்பதுண்டு. உதாரணமாக, ஜயம் – விஜயம். ஆனால் ‘வி’க்கு எதிர்மறை (Negative) பொருளும் உண்டு. ‘தவா’ என்றால் புருஷனை உடையவள்: ‘விதவா’ என்றால் புருஷன் இல்லாதவள். இந்த ரீதியில் ‘வி-சாக’ என்றால் ‘கிளை இல்லாத’ என்று அர்த்தம். அப்பா பட்ட கட்டையாகவும், அம்மா இலை இல்லாத கொடியாகவும் இருக்கும்போது, குழந்தை முருகனும் கிளையே இல்லாத கீழ்க்கன்றாக இருக்கிறார். அது பரம வைராக்கிய சொரூபம்.

சுப்ரமண்யர் பரம வைராக்கியமாக, ஞானியாக, ஆண்டியாக, தண்டாயுதபாணியாக இருக்கிறார். அவரே வள்ளி தேவசேனா சமேதராகக் கல்யாண சுப்ரமண்யராகவும் இருக்கிறார். இம்மை மறுமை இரண்டுக்கும் உதவுபவராகவும், வழிகாட்டுபவராகவும், அவர் இருப்பதையே இந்த இரண்டு கோலங்களும் காட்டுகின்றன.

பரமேசுவர ஸ்வரூபமான அவருக்கு, ‘அரன் நாமம் சூழ்க’ என்று அவரே ஞானசம்பந்தராக வந்து சொன்னதற்கேற்ப, ‘அரஹரோ ஹரா’ சொல்லி நம் பாவத்தையெல்லாம் எரித்துப் பரமானந்த ஜோதியாக இருப்போமாக.

(தெய்வத்தின் குரல் ஒன்றாம் பாகம்)

SCROLL FOR NEXT