ஆனந்த ஜோதி

உட்பொருள் அறிவோம் 52: அமைதியாக இரு, பொறுமையாக இரு

செய்திப்பிரிவு

சிந்துகுமாரன்

ஆன்மாவின் பேச்சு தொடர்கிறது: உலகம் என்னும் அனுபவவெளியில் நீ என்னைத் தேடி அடையும் பாதையை நான்தான் அமைத்தேன். உன் வாழ்க்கையின் வரைபடத்தை நான்தான் நிர்ணயித்தேன். உன் அனுபவங்களின் வரிசையை நான்தான் அமைத்தேன்.

யார் யார் உன் வாழ்வில் வருவார்கள், அவர்கள் எப்போது நுழையவேண்டும் என்பதையெல்லாம் நான்தான் கட்டமைத்தேன். அதில் ஏற்படும் சங்கடங்களை நான்தான் நிர்ணயித்தேன். அந்தச் சங்கடங்கள், சிக்கல்கள் ஒவ்வொன்றும் உன் வளர்ச்சிக்குத் தேவையானது. எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அமைதியாக இரு. பொறுமையாக இரு. மனத்தின் கவலைகளை விட்டு, மனத்தின் பின்னால் வந்து உனக்குள் அடங்கிவிடு.

இப்போது நீ மனத்தில் நின்றுகொண்டு, அங்கிருந்து உலகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். மனத்தின் பின்னால் வந்து நின்றுகொண்டு மனத்தைப் பார். மனத்தில் ஓடும் குழப்பங்களைக் குழப்பம் ஏதுமில்லாமல் பார். கலக்கங்களைக் கலக்கம் ஏதுமின்றிப் பார். உன் நெஞ்சின் ஆழத்தில், அதன் மையத்தில் எப்போதும் குடிகொண்டிருக்கும் அமைதியில் வந்து லயித்துவிடு.

காலத்தால், அனுபவத்தால், நினைவுகளால் தீண்டப்படாத, தீண்டமுடியாத இடம் அது. அங்குதான் நீ என்னை உணரமுடியும். நான் எப்போதும் உன்னுடன்தான் இருக்கிறேன் என்ற உண்மையை நீ அங்குதான் தெரிந்துகொள்ள முடியும். நமக்குள் பிரிவேதும் இல்லையென்பதையும் நீ உணர்ந்துகொள்ள முடியும்.

கனவின் நினைவு

விழித்துக்கொண்ட பின்னும் கனவின் நினைவு சிறிது நேரம் இருக்குமல்லவா? அதுபோல், நீ விழித்தெழுந்த பின்னரும் இந்த உலகத்தின் நினைவுகள் இன்னும் உன்னைத் தொடர்ந்து கொஞ்சம் காலம் இருக்கக்கூடும். அதனால் பரவாயில்லை. உலகத்தில் உனக்கு இருக்கும் பணிகளை எப்போதும்போல் செய்துகொண்டிரு. நீ என்னுடன் இருப்பதற்கு ஒரேயடியாக உலகத்தைவிட்டு வரவேண்டியதில்லை. உலகம் ஒரு காட்சி. அது இருக்கும் வரைக்கும் இருந்துவிட்டுப் போகட்டும். அது பற்றி ஒன்றும் கவலை வேண்டாம். அது இனிமேல் உன்னை ஒன்றும் செய்ய முடியாது.

உனக்குள் நான் எப்படி இருந்து கொண்டிருக்கிறேனோ, அதுபோல் உன் உறவினர், நண்பர்கள், நீ அறிந்தவர்கள் அனைவருக்குள்ளும் நான் இருந்துகொண்டுதான் இருக்கிறேன். ஒன்றும் கவலை வேண்டாம். என் பார்வைக்கு உள்ளேதான் எல்லோரும் எப்போதும் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து மற்ற எல்லோரையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து நான் அவர்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு வெளியே எதுவுமில்லை. எல்லாம் எனக்குள்தான் இருக்கிறது.

என்னுடன் பேசு. நேரடியாக என்னுடன் பேசு. கண்களை மூடி நீ என்னுடன் இருக்கும் நேரங்களில் மனத்தை 'என் மனம்' என்று எண்ணிக் கொள்ளாதே. நான் பதில் சொல்லும்வரை கவனத்துடன் காத்திரு. உன் மனம் வழியாகவே நான் உன்னுடன் பேசுவேன். மனம் நம்மிருவருக்கிடையில் ஒரு பாலமாகச் செயல்படட்டும்.

பாதகம் இல்லை

என்னுடன் நிலைத்து இருப்பது முதலில் உனக்குக் கொஞ்சம் கடினமாக இருக்கக்கூடும். நீ இதுவரை மனத்தை வெளிப்புறம் நோக்கி இயங்கப் பழக்கிவிட்டாய். அதுவும் இதுவரை சரிதான். பாதகம் ஒன்றுமில்லை. இப்போது நீ உள்ளே திரும்பும் காலம் வந்துவிட்டது. இதையும் பழகிக்கொள். உள்ளே திரும்புவதால் வெளியே பார்த்துச் செயல்படவேண்டாம் என்று சொல்லவில்லை. வெளியேயும் உன் வேலைகளைச் செய்துகொண்டிரு. கூடவே உள்ளேயும் நிலைத்திருக்கக் கற்றுக்கொள். பழகப் பழக அதுவும் இயல்பாக வந்துவிடும்.

அவசரப்படாதே. மெல்ல மெல்ல உள்ளே நிலைப்பதும் உனக்குப் பழகிவிடும். அது ஒன்றும் அசாத்தியமான விஷயமில்லை. பொறுமையுடன் முயன்றால் பழகிவிடும். உன்னைப் போட்டு வருத்திக்கொள்ள வேண்டாம். அதை உன்னிடமிருந்து நான் என்றைக்கும் கேட்டதில்லை.

உன்னை நீ நன்றாகப் பார்த்துக்கொள். உன் உடலையும் மனத்தையும் பிரியத்துடன் நடத்து. உன் மேல் பரிவுடன் இரு. உன் மேல் பரிவு இல்லாமல் மற்றவர்களிடத்தில் நீ உண்மையில் பரிவுடன் இருக்க முடியாது. இது சுயநலமல்ல. விவேகம். முதிர்ச்சி. உன்மீது நீ அன்பு பாராட்டாமல் என்மீது நீ எப்போதும் அன்பு பாராட்ட முடியாது என்பதை எப்போதும் மறந்து விடாதே. உன்மீது அன்பு காட்டாமல் மற்ற யார் மீதும் நீ அன்பு காட்ட முடியாது.

வெளியே இல்லை

நீ எங்கும் தஞ்சம் என்று செல்ல வேண்டாம். என்னிடம் நீ தஞ்சம் என்று வந்துவிட்டால், எல்லாமும் உன்னிடம் தஞ்சம் என்று வந்துவிடும். நான் உனக்கு வெளியில் இல்லை. உள்ளே இருக்கிறேன். வெளியே எல்லையற்ற பிரபஞ்ச விரிவு இருப்பதைப்போல் உள்ளேயும் அகண்டமான விரிவு இருக்கிறது.

அங்கேதான் நான் இருக்கிறேன். என்னிடம் வா. மெல்ல மெல்ல என்னிடம் வா. என்னுடன் இருக்கப் பழகிக்கொள். எதிர்பார்ப்பு எதுவுமில்லாமல் என்னுடன் வந்து இரு. உனக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியும். சரியான நேரத்தில் உனக்குத் தேவையான விஷயங்கள் உன்னை வந்து சேரும். அந்த நேரம் எப்போது என்று நீ முடிவுசெய்ய முயலாதே. உன்னை என்னிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இரு.

வாழ்க்கையிலோ மனத்திலோ எப்போதாவது கலக்கம் வரும்போது நான் உன்னுடன் இருக்கிறேன் என்பதை மறந்துவிடாதே. நான் எப்போதும் உன்னுடன்தான் இருந்து கொண்டிருக்கிறேன். நீ தினமும் சிறிது நேரமாவது என்னுடன் இரு. உன் வாழ்வின் எல்லா விஷயங்களும் ஒழுங்கில் வந்து சேர்ந்துவிடும்.

கொஞ்சம் கொஞ்சமாக உனக்குள் குழப்பங்கள் நீங்கித் தெளிவு பிறக்கும். உன் நெஞ்சத்தில் கலக்கங்கள் எல்லாம் அடங்கி நிர்மலமான நீர்நிலையைப்போல் உன் மனம் நிற்கும். பெரிய ஏரி ஒன்றில் வானம் பிரதிபலிப்பதைப்போல் அகிலமனைத்தும் உன் மனத்தில் அப்போது பிரதிபலிக்கும் அழகை நீ காண்பாய்.

நீ இதுவரை எப்போதும் கண்டறிந்திராத சந்தோஷம் உனக்குள் குடிகொண்டிருக்கிறது. அதை நீ தெரிந்துகொள்ள முடியும். உன் கோயில் உனக்குள்ளே இருக்கிறது. அதில் என்னுடன் நீயும் இருக்கிறாய். நிதானமாக என்னிடம் வா. அவசரப்பட்டு, என்னை நீ தெரிந்துகொள்ள முயலாதே. உனக்குள்ளே வந்து இருக்கப் பழகிக்கொள். மெல்ல மெல்ல நீ என்னை உணரத் தொடங்குவாய். இரவின் இருள் முடிந்து காலை மலர்வதைப் போல் நான் உனக்குள் மெல்ல நீயறியாமல் மலர்வேன். பொறுமைதான் வேண்டும்.

(உள்ளே மலர்வோம்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com

SCROLL FOR NEXT