ஆனந்த ஜோதி

ஜென் துளிகள்: எலியின் மனம்

செய்திப்பிரிவு

பூனையின் மீதிருந்த பயத்தால், எலி ஒன்று எப்போதும் துயரத்துடன் காணப்பட்டது. அந்த எலியின் மீது பரிதாபப்பட்ட மந்திரவாதி ஒருவர், அதைப் பூனையாக மாற்றினார். ஆனால், அது பூனையான பிறகு, நாயைக் கண்டு பயப்படத் தொடங்கியது. அதனால், மந்திரவாதி அதை நாயாக மாற்றினார்.

நாயான பிறகு, அது சிறுத்தையை நினைத்து பயப்படத் தொடங்கியது. உடனே, மந்திரவாதி அதை சிறுத்தையாக மாற்றினார். இப்போது அது வேட்டைக்காரனை நினைத்து பயப்படத் தொடங்கிவிட்டது. வெறுத்துபோன மந்திரவாதி, அதை மீண்டும் எலியாகவே மாற்றிவிட்டார். “நான் என்னச் செய்தாலும் அது உனக்கு உதவியாக இருக்கப் போவதில்லை. ஏனென்றால், உனக்கு ஓர் எலியின் மனம்தான் இருக்கிறது” என்று சொன்னார் மந்திரவாதி.

பகல் எப்போது தொடங்கும்?

ரப்பி இஸாதோர் என்ற விவேகமிக்க ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவரிடம் மாணவர் ஒருவர், “இரவு முடிந்து, பகல் தொடங்கும் துல்லியமான நேரத்தை ஒருவர் எப்படி அறிந்துகொள்வது?” என்று கேட்டார். “நாயையும், செம்மறி யாட்டையும் ஒருவர் தொலைவிலிருந்து வித்தியாசம் கண்டறிவது போன்றது அது,” என்று ஒரு மாணவர் பதிலளித்தார்.

மற்றொரு மாணவர், “அத்தி மரத்துக்கும், பேரீச்சை மரத்துக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டறிய முடியும்போது இரவுப் பொழுது முழுமையாக நீங்கிவிட்டது என்று அர்த்தம்,” என்று சொன்னார். “இல்லை, இவை எதுவுமே கிடையாது. ஓர் அந்நியனின் முகத்தில் உங்கள் சதோதரி அல்லது சகோதரனைப் பார்க்க முடியும்போது, ஒரு பகல் தொடங்கி விட்டதை உறுதிபடுத்த முடியும். அதுவரை, இருள் நமக்குள்ளேயே குடிகொண்டிருக்கும்,” என்று சொன்னார் ரப்பி.

செயலே முக்கியம்

ஒரு கரடிக் குட்டி எப்படி நடப்பது என்று தெரியாமல் குழம்பிப்போயிருந்தது. “நான் முதலில் என்ன செய்ய வேண்டும்?” என்று அது தன் தாயிடம் கேட்டது. நான் என் வலது காலை முதலில் எடுத்துவைப்பதா, இடது காலை முதலில் எடுத்துவைப்பதா? அல்லது என் முன்னங்கால்களை முதலில் எடுத்து வைக்கட்டுமா, பின்னங்கால்களை எடுத்துவைப்பதா? அல்லது இரண்டு கால்களை ஒருபக்கமாகவும், மற்ற இரண்டு கால்களை மறுபக்கமாகவும் எடுத்து வைக்கட்டுமா? ” என்று தன் தாயிடம் கேட்டது. “யோசிப்பதை நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கு” என்று சொன்னது தாய்க்கரடி.

கவனம்

ஒரு நாள், இக்யூவைத் தேடி மாணவர் ஒருவர் வந்தார். “குருவே, எனக்கு உயர்ந்த ஞானத்துக்கான சில விதிகளைக் கூறமுடியுமா?” என்று கேட்டார். இக்யூ, தன் தூரிகையை எடுத்து “கவனம்” என்று எழுதினார். “அவ்வளவுதானா?” என்று கேட்டார் அந்த மாணவர். “கவனம், கவனம்,” என்று எழுதினார் இக்யூ.

“நீங்கள் எழுதியதில் என்னால் உண்மையிலேயே ஆழத்தைப் பார்க்க முடியவில்லை”, என்று சொன்னார் அந்த மாணவர். இக்யூ மீண்டு அந்த சொல்லை மூன்று முறை எழுதினார்: “கவனம், கவனம், கவனம்.” கோபமடைந்த மாணவர், “கவனம்’ என்ற சொல்லுக்கு என்னதான் பொருள்?” என்று கேட்டார். இக்யூ, அமைதியாக, கவனம் என்றால் கவனம் என்று பதிலளித்தார்.

- கனி

SCROLL FOR NEXT