கேள்வி என்பது தேடலின் வார்த்தை வடிவம். அகமோ புறமோ பயணமின்றித் தேடல் இல்லை. கேள்வி, தேடல், பயணம் இவற்றுக்கெல்லாம் விடை அல்லது முடிவு என்ற ஒன்று இல்லை என்று ஜென் கூறுகிறது.
ஜென் மடாலயங்களில் கோவான் என்ற புதிர்கள் சீடர்களுக்குத் தரப்படுகின்றன. இவை பெரும்பாலும் கேள்வி வடிவில் இருக்கும். ஒரு வண்ணத்துப் பூச்சியைப்போல் அதை சீடரின் கையில் பொத்தித் தருகிறார் குரு. கையைத் திறந்தவுடன் வண்ணத்துப் பூச்சி பறக்கிறது. பின்னாலேயே சீடன் துரத்திக்கொண்டு ஓடுகிறான். அது உட்காரும் பூவருகே மெல்ல நடந்து செல்கிறான். அடுத்த கணம் விரலிடுக்கில் வண்ணத்துப்பூச்சி பிடிபட்டுவிடும். அதாவது விடை தெரிந்துவிடும். அடடா! சட்டென்று பறந்துவிட்டதே.
இப்படித்தான் புதிர்களுக் கான விடையை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டதாக உணரும் வேளையில் விடை நழுவி விடுகிறது. இதுவல்ல இதுவல்ல என்று வேறு விடைதேடிக் கேள்வியை வைத்துக்கொண்டு அலையும் சீடனைப் பார்த்து குரு புன்னகைக்கிறார். வண்ணத்துப் பூச்சியைப் பிடிப்பதல்ல நோக்கம். பறப்பதைக் கவனித்தாலே பிடிபட்டுவிட்டதாகப் பொருள்.
தேடலிலேயே தேடல் பூரணத் துவம் பெறுகிறது. இதைத்தான் முதல்படியே கடைசிபடி என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி.
உபநிடதங்களில் ஆன்மா, உடல், மரணம், மரணத்துக்குப்பின் என்பது பற்றியெல்லாம் கேள்வி-பதில் வடிவங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. உபநிடதங்களை தமிழில் வசன கவிதையாக எழுதிப் பார்த்த பாரதியும் கேள்வி ரூபமாக முன்வைக்கும் வேதாந்த ரீதியிலான சிந்தனைகள் படிப்பதற்கு ரசமானவை.
பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான்
குழலிலே இசை பிறந்ததா? தொளையிலே பிறந்ததா?
பராசக்தியைப் பாடுகின்றோம்
இவள் எப்படி உண்டானாள்? அதுதான் தெரியவில்லை
இவள் தானே பிறந்தவள்!
அப்புறம் இந்திரனுக்கும் நாரதருக்கும் நடக்கும் உரையாடல்
இந்திரன் : நீரும் கழுதையும் சமானந்தானா?
நாரதர் : ஆம்
இந்திரன் : ஞானமும் அஞ்ஞானமும் சமானமா?
நாரதர் : ஆம்!
இந்திரன் : அதெப்படி?
நாரதர் : சர்வம் விஷ்ணுமயம் ஜகத்.
அஷ்டாவக்கிரரிடம் ஒரு கேள்வி
முன்னொரு காலத்தில் ஜனக மன்னர் அரண்மனைப் பண்டிதர்களுடன் தத்துவ விசாரம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு வேதாந்த நூலில் எழுதியிருந்த கருத்து அரசரை வெகுவாக ஈர்த்தது.
குதிரையேறும் ஒருவன் சேணத்தின் ஒரு கவட்டில் காலூன்றி மற்றொன்றில் கால் எடுத்து வைக்கும் நேரத்துக்குள் பிரம்ம ஞானம் எய்தலாம். இமைப்பொழுதில் ஞானம் எய்தலாம் என்ற கருத்து மன்னரை வசீகரித்தது. உடனே பண்டிதரிடம் குதிரை கொண்டுவரச் சொல்லட்டுமா என்று கேட்டார்.
பண்டிதர்கள் பயந்து போனார்கள். அவர்களால் மன்னருக்குப் பதில் அளிக்க முடியவில்லை. அனைவரும் சிறையில் தள்ளப்பட்டனர். அவர்களை மீட்க அஷ்டாவக்கிரர் வந்தார்.
வயதில் சிறியவரும், ஞானம் மிகப் பெற்றவரும், உடம்பெல்லாம் எட்டு கோணல்களும் உடையவரான அஷ்டாவக்கிர முனிவர் மன்னரின் சந்தேகத்தை தீர்த்துவைக்க முன்வந்தார். முனிவர் விருப்பப்படி பண்டிதர்கள் விடுவிக்கப்பட்டனர். “குதிரையைக் கொண்டுவரச் சொல்லவா?” என்று அரசன் கேட்டான்.
“இங்கே அந்த ஞானத்தை உபதேசிக்க முடியாது. கானகத்தில் உமது பரிவாரம் ஏதுமின்றி நாம் இருவரும் தனித்திருக்க வேண்டும்” என்றார் அஷ்டாவக்கிரர்.
மன்னரும் திகைத்தார். கானகத்தில் குதிரையின் சேணத்தில் ஒருகாலும் தரையில் மறுகாலுமாக நின்றபடி, ‘தாமதிக்காமல் உண்மையை அருளவேண்டும்’ என்றான் மன்னன்.
அஷ்டாவக்கிரர் சொன்னார் “நாம் இருவரும் குரு சிஷ்ய பாவத்தில் இருக்கவேண்டும். உண்மையான சீடன் என்ற முறையில் உன்னையும் உன் உடமைகளையும் குருவாகிய எனக்கு அர்ப்பணம் செய்துவிடு”
ஜனகரும் “அவ்வாறே செய்கிறேன் இதோ நானும் என் உடமைகளும் உமக்கே அர்ப்பணம்” என்றார். “அவ்வாறே ஆகட்டும்” என்று சொல்லி அஷ்டாவக்கிரர் மறைந்து போனார்.
ஜனகர் அப்படியே சிலைபோல் நின்றார். ஒரே கேள்வி அவரை ஞானத்தில் உறைய வைத்தது. மறுநாள் இரவே ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் ஞானத்தை முழுமையாக உபதேசித்தார். அதுவே அஷ்டாவக்கிர கீதையாகப் புகழ்பெற்றது.
உன்னை உணராமையால் உலகு தோன்றுகிறது. உன்னை உணர்ந்தால் உலகு தோன்றாது. கயிற்றைக் காணாததால் அரவு தோன்றும்; கயிற்றைக் கண்டால் அரவு (பாம்பு) தோன்றாது. இதுவே அஷ்டாவக்கிர கீதையின் சாரம்.
நசிகேதனின் கேள்விகள்
கடோபநிஷத்தில் நசிகேதனின் கதை சொல்லப்பட்டிருக்கிறது. வாசஸ்சிரவஸர் என்ற முனிவர் விச்வஜித் என்ற யாகத்தைச் செய்தார். இந்த யாகத்தை அவர் முறையாகச் செய்யவில்லை. பால் கறக்காத மாட்டையும் வறண்ட பூமியையும் அவர் தானமாகக் கொடுத்தார். அவர் மகன் நசிகேதனுக்கு தந்தையின் செயல் பிடிக்கவில்லை. என்னை யாருக்கு தானமாகக் கொடுக்ப் போகிறீர்கள் என்று பக்கத்தில் நின்றபடி மும்முறை கேட்டு நச்சரித்தான். எரிச்சலுற்ற தந்தை வாசஸ்சிரவஸர், உன்னை எமனுக்குத் தந்தேன் என்றார். தந்தையின் சொல் பலித்தது. அவன் எமலோகம் சென்றான். மூன்று நாட்கள் எமனுக்காக காத்திருக்க நேர்கிறது. எமன் நசிகேதனை மூன்று வரங்கள் கேட்குமாறு கூறுகிறான். நசிகேதன் கேட்ட முதல் இரண்டு வரங்கள் முக்கியமில்லை. மூன்றாவது வரம் அதிமுக்கியமானது. மரணத்துக்குப் பின்னர் வாழ்வு உண்டா இல்லையா என்று கேள்விக்கு பதில் கேட்கிறான். பூவுலகில் மனிதர் பெறுவதற்கு அரிதான பேறுகளை உனக்கு அளிக்கிறேன். இதை மட்டும் கேட்காதே என்கிறார் எமதர்மன். நசிகேதன் எமதர்ம ராஜா தருவதாகச் சொன்னவற்றை எல்லாம் வேண்டாம் என்று மறுத்து தனது கேள்விக்கு மட்டும் விடை வேண்டுகிறான். கடோபநிஷத்தில் இருவருக்கும் இடையில் நிகழும் வாதப் பிரதிவாதம் வாழ்வு,மரணம், உலகில் இன்பம், இறைத் தத்துவம் பற்றிய பல நுட்பமான பார்வைகளை முன்வைக்கிறது. கடைசியில் அழிவது உடல் மட்டுமே. ஆன்மா பிறப்பு இறப்பற்றது என்று விடையற்ற விடையொன்றினை எமதர்மன் கூறுகிறான்.
சார்வாகன் என்ற புனைபெயரில் அபூர்வமான படைப்புகளைத் தமிழுக்குத் தந்த ஹரினிவாசன் ‘பிராயச்சித்தம்’ என்ற சிறுகதையில் கடவுளை எதிர்த்துக் கேள்விகேட்ட சிறுவனாக பிரகலாதனைச் சித்தரித்திருப்பார். கற்பனைதானே என்று இக்கதையை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது. கடவுள் தன்மையையே அசைத்துப் பார்க்கும் சிறுவனான பிரகலாதனின் கேள்விக்கு கடவுளால் பதில் சொல்ல முடியவில்லை.
“என் தந்தை ஹிரண்யகசிபுவைக் கொன்றாயே. அதனால் அவர் மமதை அடங்கிற்றா? இல்லவே இல்லை. மமதைக்குமேல் மமதையையும் கொலைக்குமேல் கொலையையும் காட்டினாய் நீ. உன்னை அவர் பணிந்தாரா? இல்லை. நீ அவரைக் கொன்றாயே தவிர, வென்றாயோ? நீதான் தோற்றாய் என் தந்தையிடம். தந்தையைக் கொன்றால் தர்க்கத்தில் வென்றுவிடலாம் என்று நினைத்தாயே! நீயா கடவுள்?”
கடவுளைக் காண மட்டுமல்ல. கடவுளை மீறவும் கேள்விகளால் முடியும்.
(கேள்விகள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com