நஃப்பீஸ் கான்
இஸ்லாமின் சிறந்த இளம் தளபதியான கலித் இபின் அல்-வாலித், இஸ்லாம் மார்க்கத்தின் மீதான எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்குவகித்தார். அவரது திட்டங்களும் துணிச்சலும் வியக்கவைக்கும் விளைவுகளை ஏற்படுத்தின. இஸ்லாம் மார்க்கத்தை அரேபியாவில் நிலைநிறுத்தியது மட்டுமல்லாமல், அதன் எல்லைகளை வெற்றிகரமாக விரிவடையச் செய்தார்.
பொ.ஆ. (கி.பி)633-ல், யமாமாவில் தீவிரமாக நடைபெற்ற போரில், தன்னைத்தானே இறைத்தூதர் என்று அறிவித்துக்கொண்ட முஸேலிமா என்பவர் தோற்கடிக்கப்பட்டார். இந்தப் போரின்போது திருக்குர்ஆனை மனனம் செய்திருந்த தோழர்கள் பலரும் வீரமரணம் அடைந்தனர். அப்போது, திருக்குர்ஆனை எழுத்து வடிவத்தில் எழுத வேண்டிய அவசியத்தை உணர்ந்தார் உமர். திருக்குர்ஆன் எழுதபடவில்லையென்றால், அது மாற்றப்படுவதற்கோ, மறக்கப் படுவதற்கோ வாய்ப்பிருப்பதை நினைத்து அவர் பயந்தார். தொடக்கத்தில், இந்தப் பணியை ஆரம்பிக்க அபூபக்ர் தயக்கம் காட்டினார். இறுதியில், உமர் முன்வைத்த தர்க்க வாதங்களை ஏற்றுக்கொண்ட அவர், திருக்குர்ஆனை எழுத்துவடிவத்தில் உருவாக்க ஒப்புக்கொண்டார்.
இறைத்தூதரின் எழுத்தராக இருந்த ஜயீது பின் தபித்திடம் அந்த உன்னதப் பணி ஒப்படைக்கப்பட்டது. இறைத்தூதர் தன் வாழ்நாட்களின்போது வாய்மொழியாக உரைத்த திருக்குர்ஆன் வரிகளை எழுத்து வடிவத்தில் சேகரித்து வைத்திருந்தவர்களிடமிருந்து ஜயீது திரட்டத் தொடங்கினார். அபூபக்ர், உமர், மூத்த தோழர்கள் ஒன்றாகச் சேர்ந்து எழுத்து வடிவத்தின் துல்லியத்தன்மையை உறுதிசெய்தனர்.
அபூபக்ர் தன் அறுபத்தி மூன்றாம் வயதில் (பொ.ஆ. 634) உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். தான் இறுதிநாட்களில் இருப்பதை அவர் உணர்ந்தார். இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகு, இஸ்லாமியர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை மீண்டும் அவர்கள் எதிர்கொள்ளக் கூடாது என்று அவர் நினைத்தார்.
உமருடன் தொடர்ந்து அபூபக்ர் ஆலோசனையில் ஈடுபட்டுவந்தார். அவர் மூத்த தோழர்கள் முன்னிலையில், உமரை அடுத்த கலீஃபாவை நியமிக்கத் திட்டமிட்டார். “என் சகோதரர்களே, என் உறவினர்களில் யாரையும் கலீஃபாவாக நியமிக்கவில்லை. உங்களில் சிறந்த தகுதியுடன் விளங்கும் ஒருவரையே நான் நியமிக்கிறேன். அவரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?” என்று அபூபக்ர் கேட்டார். பெரும்பாலானவர்கள் அபூபக்ரின் கருத்தை ஏற்றுக்கொண்டனர்.
அபூபக்ரின் இறுதியாத்திரையை உமர் முன்னின்று நடத்தினார். மதினாவில் தன் வாழ்நாள் தோழர் இறைத்தூதரின் அருகிலேயே அபூபக்ர் புதைக்கப்பட்டார். தன் வாழ்நாளின்போது இறைத்தூதருடன் இருந்த அபூபக்ர், மரணத்துக்குப் பிறகும் அவருக்கு அருகிலேயே இருக்கிறார்.
- தொடரும்
தமிழில்: கனி
(நன்றி: குட்வர்ட் பதிப்பகம்)