டேவிட் பொன்னுசாமி
ஆப்பிரிக்கக் கண்டத்தில் மனுஷகுமாரன் இயேசுவின் நற்செய்தியைப் பரப்பிய டேவிட் லிவிங்ஸ்டனைத் தொடர்ந்து அங்கே திருச்சபை ஊழியராகச் சென்றவர்களில் முக்கியமானவர் மேரி ஸ்லெஸ்சார்.
ஆப்பிரிக்காவின் காடுகளுக்கு நடுவேயுள்ள கிராமங்களில் தொற்று நோய்களால் மரணத்துக்குள்ளான எண்ணற்ற குழந்தைகளைத் தன் குழந்தைகளாகக் கருதி மேரி காப்பாற்றினார். சமைக்கவும் துணிகளைத் தைத்து உடுத்தவும் அந்த மக்களுக்கு அவர் கற்றுத் தந்தார்.
அவர் ஆப்பிரிக்காவில் ஈடுபட்டிருந்த திருச்சபைப் பணியில் ஒரு தருணத்தில் ஆயுததாரிகள் அவரைத் தாக்கிக் கொல்வதற்கு முயன்றபோது, “ நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். ஆனால் கடவுளின் வார்த்தையை உங்களிடம் சொல்லி உங்களை மாற்றுவதற்காக நான் இங்கே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று தைரியமாகக் கூறினார் மேரி.
1848-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி, ஸ்காட்லாந்தில் மேரி பிறந்தார். மது அடிமையாக இருந்த தந்தையின் கொடுமைகளை சிறுவயதிலேயே அனுபவித்த ஏழைச் சிறுமி அவர். 11 வயதில் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தொழிற்சாலை வேலைக்குப் போனார். வேலை இடைவேளைகளில் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தார். இயேசு கிறிஸ்துவை தனது ரட்சகனாக அவர் மனம் ஏற்றுக்கொண்டது.
மேரியின் அண்ணன்தான் முதலில் ஆப்பிரிகாவுக்கு ஆசிரியர் பணிக்குப் போவதாக இருந்தது. மேரி தனது அண்ணன், அப்பா இருவரையும் விபத்தில் பறிகொடுத்தார். இந்தப் பின்னணியில் ஸ்காட்லாந்தில் திருச்சபை ஊழியருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, டேவிட் லிவிங்ஸ்டனின் மரணச் செய்தி வந்து சேர்ந்தது.
1876-ம் ஆண்டு கடல்வழியில் பயணித்து மேரி ஆப்பிரிக்கா சென்று சேர்ந்தார். அங்கேயுள்ள மக்களையும் மொழியையும் கற்பதற்காக நான்கு ஆண்டுகளைச் செலவழித்தார். அதற்குப் பின்னர் தேவ ஒளியைப் பரப்புவதற்காக மலைவாழ் மக்களிடம் சென்றார்.
முதலில் ஆப்பிரிக்க மக்களிடம் எதிர்ப்பைச் சந்தித்த அவர், படிப்படியாக ‘வெள்ளை ராணி’ என்று அந்த மக்களாலேயே நேசத்துடன் அழைக்கப்பட்டார். ஆப்பிரிக்க பருவநிலையும் அங்கே நிலவிய வாழ்க்கைச் சூழலும் மேரியின் உடலைப் பலவீனப்படுத்தின. அவர் திரும்பி வருவதற்கு ஸ்காட்லாந்து திருச்சபை வலியுறுத்தியது.
உடலைத் தேற்றிக் கொள்வதற்காக மேரி ஸ்காட்லாந்து திரும்பினார். ஆனால், அவரை ஆப்பிரிக்காவுக்குத் திரும்பவும் அனுப்ப விரும்பாத சூழல் இருந்தது. “என்னை மீண்டும் ஆப்பிரிக்காவுக்கு அனுப்புங்கள். நீங்களாக அனுப்பாவிட்டால், நான் கடலில் நீந்தியாவது சென்று சேருவேன். ஏனெனில் அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் கிறிஸ்துவின் ஒளிபடாமல் இறந்து போகும் நிலையில் உள்ளனர்" என்றார்.
வயோதிகத்தின் தளர்ச்சியிலும் மிதிவண்டியில் அடிமைச் சந்தைகளுக்குச் சென்று கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்பினார். 1915-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி அங்கேயே மறைந்தார்.
தனது சேவையால் அவர் நித்தியத்தின் தங்க மணிக்கூண்டுக்கான சாவியைப் பெற்றார்.