நஃப்பீஸ் கான்
இறைத்தூதரின் இறப்புக்குச் சில வாரங்களுக்குமுன், சிரியா பயணத்துக்கான (பொ.ஆ. 632) திட்டமிடல்கள் செய்யப்பட்டன. விடுதலை பெற்ற அடிமை ஒருவரின் மகனான உஸாமா இபின் ஜயீத் தலைமையில் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இறைத்தூதர் இறப்புக்குப் பிறகு, அபூபக்ரும் இஸ்லாமியர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுவந்ததால், பலரும் இந்தப் பயணத்துக்கு எதிராக இருந்தனர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உள்நாட்டுப் போர் மூளும் சூழல் அப்போது இருந்தது. அந்தச் சூழலை எதிர்கொண்டு, மதினாவைப் பாதுகாப்பதற்காக படைகள் அங்கே இருக்க வேண்டியிருந்தது.
இஸ்லாம் மார்க்கத்தின் தீவிரமான நம்பிக்கை இல்லாத இனத்தவர்கள் பலர் அதை விட்டு வெளியேறுவதற்காகத் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துவந்தனர். இறைத்தூதரின் இறப்பு, இஸ்லாமை முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்று கருதப்பட்டது. அதனால், பெரும்பாலானோர் ‘ஜகத்’க்குப் பணம் வழங்க விரும்பவில்லை. அடுத்த இறைத்தூதர் நான்தான் எனக்கூறிக்கொண்ட போலிகள் பலர் உருவாகியிருந்தனர்.
அல்லாவின் மீது அபூபக்ர் நம்பிக்கைவைத்து தன் நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். அவருடைய அசைக்கமுடியாத நம்பிக்கை இஸ்லாமை வாழ்க்கைக்கான மார்க்கமாக நிரூபித்தது. அவர் இஸ்லாமின் அனைத்து அடிப்படை நம்பிக்கைகளையும் பாதுகாக்க வேண்டுமென்று உறுதியாக இருந்தார். அத்துடன், திட்டமிட்டபடி சிரியா செல்வது என்றும் முடிவெடுத்தார். ‘என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். இறைத்தூதரின் கட்டளையை நான் திரும்ப பெறமாட்டேன்,’ என்று அவர் தெரிவித்தார்.
அபூபக்ர், உஸாமாவைச் சிரியாவுக்கு அனுப்பும்போது, போருக்கான நன்னடத்தைக் கோட்பாடுகளைச் சொல்லி அனுப்பிவைத்தார். அந்தக் கோட்பாடுகள் இன்றளவும் உதாரணமாகத் திகழ்கின்றன:
‘உண்மையாக இரு. யாரையும் ஏமாற்றாதே. உனக்குக் கீழேயிருக்கும் நபர்களிடம் கருணையுடன் இரு. யாரையும் சிதைக்காதே. வயதானவர்கள், பெண்கள், குழந்தைகளைக் கொல்லாதே. பேரீச்சை, பனைகளை எரிக்காதே, பழ மரங்களை வெட்டாதே. உணவுக்காக அன்றி, வேறு எதற்காகவும் விலங்குகளை வெட்டாதே. மடாலயங்களில் நீ துறவிகளை எதிர்கொள்ளலாம். அவர்களை எதுவும் செய்யாதே! எதிரிகளின் தலைவர்களிடம் மரியாதையாக நடந்துகொள். எப்போதும் அல்லாவுக்கு பயப்படு,’ என்று சொன்னார் அபூபக்ர்.
உஸாமா தன் பயணத்தில் வெற்றி பெற்று, இஸ்லாம் எப்போதும் வாழும் என்பதை நிரூபிக்கும்படி, நாற்பது நாட்களுக்குப் பிறகு திரும்பினார். உஸாமா, திரும்பிவந்தவுடன், அபூபக்ரே இஸ்லாமை மறுக்கும் இனத்தவர்களுக்கு எதிராக ஊர்வலம் சென்றார். சில மாதங்களில், இஸ்லாமுக்கு இருந்த எதிர்ப்பு அடங்கிப்போனது.
- தொடரும்
தமிழில்: கனி
(நன்றி: குட்வர்ட் பதிப்பகம்)