டேவிட் பொன்னுசாமி
கிறிஸ்துவின் மீது அசைக்க முடியாத விசுவாசமும் சமயப்பற்றும் கொண்ட ஏழைப் பெற்றோர்களுக்கு மகனாகப் பிறந்தவர் டேவிட் லிவிங்ஸ்டன். 25 வயது வரை பஞ்சாலையில் 14 மணி நேரங்களைச் செலவழித்துப் பணியாற்றிய அவர், சீனாவுக்கு மருத்துவ சேவைக்காகச் செல்லும் திருச்சபைப் பணியால் ஈர்க்கப்பட்டார்.
இயல்பாகவே வீட்டில் சமயக் கல்வியைப் பெற்றிருந்த அவர் ஒன்பது வயதிலிருந்து தனது சுயமுயற்சியால் கிரேக்கத்தையும் லத்தீனையும் முழுமையாகக் கற்று இருபது வயதிலேயே வேதாகமத்தில் நிபுணராகவும் மாறியிருந்தார். இச்சூழ்நிலையில் இறையியலில் பட்டப்படிப்பையும் பெற்றார். ஓபிய வணிகம் சார்ந்த மோதல்கள் தொடர்பில் சீனா தன் கதவுகளை மூடியிருந்தது.
அப்போது தென் ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்து திரும்பியிருந்த திருச்சபைப் பணியாளரான ராபர்ட் மாஃபட், இருண்ட கண்டம் என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதியில் தேவைப்படும் சேவையை வலியுறுத்தினார். நரமாமிசம் சாப்பிடுபவர்கள் வாழும் கண்டம் என்று அக்காலத்தில் கருதப்பட்ட ஆப்பிரிக்க கண்டத்துக்கு கிறிஸ்துவின் செய்தியுடன் பயணிப்பதற்கு டேவிட் தீர்மானித்தார். அந்த காலகட்டத்திலேயே ராபர்ட்டின் மகள் மேரியைத் திருமணம் செய்தார்.
தனது மூத்த திருச்சபை பணியாளரும், ஆப்பிரிக்காவுக்கு அழைத்தவருமான ராபர்ட் மாஃபட் பணியாற்றும் பகுதியான கரிமன் பகுதிக்கு 700 கிலோமீட்டர் தூரம் மாட்டுவண்டியிலேயே கடந்தார். அந்தப் பயணத்தில்தான் அந்த இருண்ட கண்டத்தின் ஒளிபுகாத அடர்காடுகள் அவருக்கு அறிமுகமாயின. ஆப்பிரிக்க பூர்வகுடிகளுடன் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில்தான் அவரது தோளை சிங்கம் ஒன்று தாக்கியது. இதனால் அவரது ஒரு கை நிரந்தரமாகச் செயலிழந்தது.
காட்டுமிராண்டிகளாக உலகுக்குத் தோற்றமளித்த ஆப்பிரிக்க மக்களை தனது நேசத்தால் டேவிட் ஈர்த்தார். அவருடைய திருச்சபை பணியின்போது அவர் வேலை செய்த பிராந்தியத்தை கொடும் வறட்சி தாக்கியது. இந்தச் சூழ்நிலையில் அவர் ஒரு பாலைவனத்தைக் கடந்து இன்னொரு பகுதிக்குப் பயணிக்க வேண்டியிருந்தது. அப்படி ஐநூறு மைல்கள் கடந்து அவர் கண்டுபிடித்த ஏரிதான் ஜகமி. டேவிட் தனது திருச்சபை பயணத்தில் 9,000 மைல்களைக் கால்களால் நடந்து கடந்தவர்.
ஆப்பிரிக்காவில் அப்போது நிலவிய அடிமை வர்த்தகத்தை ஒழித்ததில் டேவிட் ஆற்றிய பணி இன்றும் உலகெங்கும் நினைவுகூரப்படுகிறது. டச்சு வர்த்தகர்களின் எதிர்ப்பையும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது. ஆப்பிரிக்காவில் அடிமை வர்த்தகத்துக்கு எதிராக தொடர்ந்து பணியாற்ற வேண்டிய சூழ்நிலையைக் கருதி தனது மனைவி மேரியையும் குழந்தைகளையும் இங்கிலாந்துக்கு அவர்அனுப்பி வைத்தார்.
அடிமை வர்த்தகத்துக்கு ஒத்துழைக்காத கருப்பின மக்களின் கிராமங்களுக்குள் புகுந்து குடிசைகளைத் தீவைக்கும் கொடிய வழக்கங்களும் நிலவின. டேவிட் அந்தக் கிராமங்கள் வழியாகப் பயணித்தபோது பார்த்த கொடூரக் காட்சிகளை டைரிக் குறிப்புகளாகப் பதிவுசெய்துள்ளார்.
ஆப்பிரிக்க டைபாய்ட் என்று சொல்லப்படும் விஷக்காய்ச்சல் டேவிட் மீது 31 முறை தாக்குதல் தொடுத்தும் அதிலிருந்து தப்பித்தார். ஆப்பிரிக்காவின் அடர்காடுகளுக்குள் அமைந்திருந்த கிராமங்களில் சேவை செய்த டேவிட்டைத் தேடி புகழ்பெற்ற செய்தித்தாள் நிறுவனமான ‘நியூ யார்க் ஹெரால்ட்’, ஹென்றி ஸ்டான்லி என்ற பத்திரிகையாளரை அங்கே அனுப்பி வைத்தது. டேவிட்டை நெடுநாட்கள் தேடிச் சந்தித்த அவர், இங்கிலாந்துக்கு வருமாறு அழைத்தார். தேவனின் பணிகள் எஞ்சியுள்ளன என்று கூறி வரமறுத்துவிட்டார்.
அடிமை வர்த்தகத்தை ஒழித்தவர்
கிறிஸ்துவின் செய்தியைப் பரப்புவது, அடிமை வர்த்தக ஒழிப்புப் பணி ஆகியவற்றோடு அவர் செய்த பயணங்களால் அறியப்படாத பல புதிய பகுதிகளையும் கண்டுபிடித்து ஆப்பிரிக்க நிலவியலுக்கும் பங்களிப்பு செய்தார். விக்டோரியா அருவியை உலகின் பார்வைக்குக் கொண்டுவந்தவர் அவர்தான்.
1841-ம் ஆண்டில் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவுக்கு சென்றபோது, இருண்ட கண்டமென்றும் வெள்ளையர்களின் சவக்குழி என்றும் ஐரோப்பாவில் கருதப்பட்டிருந்தது. லிவிங்ஸ்டன் அந்தக் கண்டத்தின் வரைபடத்தின் மீது வெளிச்சத்தை ஏற்றினார். அங்குள்ள அடிமை வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவர பெரும்பணியாற்றினார்.
‘நித்தியத்தின் அடிவானிலிருந்து திரும்பிப் பார்க்கும்போது, நீ அவமதிப்பாக உணரமாட்டாய்’ என்ற மந்திர வார்த்தைகள்தான் அவரை அத்தனை மைல்கள் நடக்கவைத்தன. 1875-ம் ஆண்டு மே மாதம், டேவிட் லிவிங்ஸ்டன் தனது குடிசையில் ஜெபம் செய்வதற்காக மண்டியிட்டார். பிரார்த்தனையிலேயே அவர் மரித்துப் போனார்.