ஆனந்த ஜோதி

81 ரத்தினங்கள் 34: இளைப்புவிடாய் தீர்த்தேனோ நம்பாடுவானைப் போலே

செய்திப்பிரிவு

உஷாதேவி

திருக்குறுங்குடி என்னும் திவ்யதேசத்தில் நம்பாடுவான் எனும் பக்தன் இருந்தான். சுந்தர பரிபூரணநம்பியிடம் (திருக்குறுங்குடி பெருமாள்) அளவில்லாத பக்தி கொண்டு, ஒவ்வொரு ஏகாதசிக்கும் உபவாசம் இருந்தான். திருக்குறுங்குடி கோயில் வாசலிலே நின்று இரவு முழுவதும் இசையோடு பாடுவான். கார்த்திகை மாதம் ஏகாதசி அன்று மாலை வேளையில் கோயிலுக்கு செல்லும் வழியில், பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுவானைப் பிடித்துக்கொண்டு என் பசிக்குப் புசிக்கப் போகிறேன் என்றது.

நம்பாடுவான் அந்த ராட்சசனிடம், இன்று ஏகாதசி என்பதால் கோயிலுக்குப் போய் இறைவனைப் பாடி வணங்கி வந்துவிடுகிறேன் என்றும் பிறகு உணவாக்கிக் கொள்ளுமாறும் வேண்டினார். நம்பாடுவான் இறைவன் மீது சத்தியம் செய்து தன்னை விடும்படி மன்றாடியதும் பிரம்ம ராட்சசன் நம்பாடுவானை விடுவித்தான்.

கோயில் வாசலில் மெய்மறந்து நின்று கைசிகப் பண் கொண்டு பாடினான். சுந்தர பரிபூரண நம்பியாகிய இறைவன் காட்சி தந்து திரும்ப அவ்வழி செல்லாதே, ராட்சசன் உன்னை பிடித்துக் கொள்வான் என்கிறார். நம்பாடுவானோ, "உன் பக்தன் வாக்கு தவற மாட்டான், நான் வாக்கு தவறினால் உனக்குப் பழி வரும்” என்று கூறி பிரம்ம ராட்சசனிடம் தன்னைப் பலிகொடுக்கச் சென்றான்.

திரும்பி வந்த நம்பாடுவானைப் பார்த்த பிரம்ம ராட்சசன், எனக்கு பசி போய்விட்டது என்று கூறியது. நம்பாடுவானைப் பார்த்த பின்னர் தன்னை நீண்டநாளாக வருத்திய பசி தீர்ந்தது என்றும் கூறியது. நம்பாடுவானின் ஏகாதசி விரதபலனைத் தனக்குக் கொடுத்து மோட்ச கதியடைய உதவ வேண்டுமென்றும் கோரியது.

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என (சொர்க்க வாசல் திறப்பு) சிறப்புறுவது போல், கார்த்திகை மாத ஏகாதசி நம்பாடுவான் பாடிய கைசிகப் பண்ணின் பெயரைக் கொண்டிருப்பதால் கைசிக ஏகாதசி என சிறப்புற்றது.

நம்பாடுவான் (நன்மைகளைப் பாடுபவன்) போல் இறைவனைப் பாடும் பக்தி எனக்கில்லையே சுவாமி என மனமுருகுகிறாள் நம் திருக்கோளுர் பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

SCROLL FOR NEXT