ஆனந்த ஜோதி

உட்பொருள் அறிவோம் 49: முழுமையான விழிப்புநிலை

செய்திப்பிரிவு

சிந்து குமாரன்

இப்போது நமக்கு இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் மனத்தளம் எழுந்து வெளிப்பட்டதால் ஏற்பட்டவைதாம். அப்படியானால் மனம் என்பது தவறானதா? அப்படியல்ல. மனிதனின் உண்மையான சுய அடையாளம், கடந்த காலத்தின் நினைவுப்பதிவுகள் சார்ந்த மனச்சுயம் அல்ல. ‘நான்’ என்னும் அடிப்படைத் தன்னுணர்வுதான்.

இந்தத் தன்னுணர்வு, அறிவுணர்வு செயல்படும் மூன்றாம் தளமான உயர்தளத்தில்தான் மையம் கொண்டிருக்கிறது. மனத்தில் நாம் அனுபவம் கொள்ளும் ‘நான்’ உணர்வு, உயர்தள அறிவுணர்வு ஒளியின் வெறும் பிரதிபலிப்பு மட்டுமே. அறிவுணர்வில் நிலைகொண்ட தன்னுணர்வில் சாதி, மத, நாடு, மொழி, இனம் என்ற பிரிவுகளின் நிழல் சிறிதும் கிடையாது.

தனக்குள் தானே ஒருங்கிணைந்து, துண்டுதுண்டாகப் பிரிந்திராத ஒற்றை உயிராய், விண்டு போகாத தனிச்சுயமாய். தன்னில் தானே ‘நான்’ எனத் தன்னில் வேர்கொண்டு, திடமாக நிலைத்துநின்று, வாழ்க்கையின் சோதனைகளால் அரண்டுபோகாமல் நிமிர்ந்து நிற்கும் உண்மைச் சுயம்.

மனிதப் பிரக்ஞை என்று ஒன்றுதான் இருக்கிறது. அதுதான் நம் அனைவரின் மனங்களின் வழியாகவும் செயல்படுகிறது. அதனால் ‘என் மனம்’ என்று தனியாக ஒன்று கிடையாது. ஒவ்வொரு மனிதனும் இந்தப் பிரக்ஞையைத் தன் தனிப்பிரக்ஞையாகத்தான் அனுபவம் கொள்கிறான். தனிமனிதனின் மூளை ஒரு அலைபரப்பி (Transmitter)போல்தான் செயல்படுகிறது. தகவல்களை வாங்கிக்கொள்கிறது; மீண்டும் அலைபரப்புகிறது.

தொலைக்காட்சி மையத்தில் ஒரு இசைக்கச்சேரி நடந்துகொண்டிருக்கிறது. நம் ஒவ்வொருவர் வீட்டிலும் அது நம் தொலைக்காட்சிப் பெட்டியில் ஒளிபரப்பாகிறது. ஒரு வீட்டில் பெட்டி உடைந்துபோய்விட்டால் அந்தப் பெட்டியில் அது ஒளிபரப்பாகாது. ஆனால், கச்சேரி தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கும். ஒரு தனித் தொலைக்காட்சிப் பெட்டியைப் போல்தான் ஒரு தனிமனிதனின் மூளை. என் மனத்திலிருந்து எதுவும் வருவதில்லை. என் மனம் வழியாக வருகிறது; அவ்வளவுதான்.

மனிதப் பிரக்ஞை இன்னும் மனத்தளத்தில் மையம் கொண்டிருக்கும் காரணத்தால், துன்பத்தில் சிக்கி வாழ்கிறது. இதை ஒவ்வொரு தனி மனமும், ஒவ்வொரு தனி மனிதனும் அனுபவம் கொள்கிறான். மனிதன் இந்தத் துன்பத்திலிருந்து மீளும் வழியைத் தேடுகிறான். சமூகம் பல வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அவையெல்லாமே துன்பத்திலிருந்து தப்பிக்கும் வழிகள்; மீளும் வழிகள் அல்ல.

இந்த வழிகளையெல்லாம் பின்பற்றித் தோற்றுப்போன பிறகுதான் மனம் தப்பிக்கும் முயற்சியைக் கைவிடுகிறது. அதன் பின்தான் தான் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதை மனம் பார்க்கிறது. தான் செய்யும் செயல்கள் அனைத்தும் இயல்பாக இருக்கும் அமைதியைக் குலைக்கும் விதமாகவே இருப்பதை அது முதல்முறையாகப் பார்க்கிறது.

இப்போதுதான் கவனம் விழித்துக்கொள்கிறது. கவனம் அறிவுணர்வு ஒரு புள்ளியில் குவியும்போது தோன்றுகிறது. இதுவரை உடல்-மனத்தளவில் மட்டுமே வாழ்ந்து அனுபவம் கொண்டிருந்த மனிதன் முதன்முறையாகக் கவனத்தில் விழிக்கிறான். கவனத்தில் விழித்து லயிக்கும்போது தனக்குள் ஆழமான அமைதி எழுவதை அவன் அறிந்துகொள்கிறான்.

தன் அமைதி, தன் நிம்மதி, தன் சந்தோஷம் தனக்குள்ளிருந்தே எழுந்து விரிவதை அவன் முதல்முறையாகக் கண்டுகொள்கிறான். இதுவரை தானே தன் தவறான சிந்தனையால் தன் அமைதியையும் நிம்மதியையும் குலைத்துவந்திருக்கிறோம் என்னும் உண்மை அவனுக்குப் புரிகிறது.

தொடர்ந்து அவன் கவனத்தில் மையம் கொள்கிறான். மனத்தின் கட்டுகளிலிருந்து அவனுடைய தன்னுணர்வு படிப்படியாக விடுபட்டுக் கவனத்தில் நிலைகொள்கிறது. தொடர்ந்த பயிற்சியின் விளைவாகப் பிரயத்தனமற்ற கவனம் நிலைகொள்வதை உணர்கிறான். முடிவில் மனத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து அவன் முற்றிலுமாக விடுபடுகிறான். மனம் இப்போது புறவுலகில் வாழ்ந்து இயங்குவதற்கு ஒரு கருவியாக மட்டுமே செயல்படுகிறது.

மனிதப் பிரக்ஞை என்பது ஒன்று என்னும் காரணத்தால், இவனிடம் ஏற்பட்ட மாற்றம் மனிதப் பிரக்ஞையையே பாதிக்கிறது. ஒட்டுமொத்த மனிதப் பிரக்ஞையே இம்மியளவு மனக்கட்டுகளிருந்து விடுபடுகிறது. இவனைக் கண்ட மற்றவர்களும் தமக்குள் கவனத்தை நிலைப்படுத்தும் விதமாகச் செயல்முறையில் இறங்குவார்கள்.

அதன் விளைவாக, கொஞ்சம் கொஞ்சமாக மனிதப்பிரக்ஞை தனக்குள் விழித்தெழுகிறது. ஒட்டுமொத்தப் பிரக்ஞையே விழித்துக்கொள்வதால், இந்த செயல்முறை மேலும் மேலும் எளிதாக ஆகிவிடுகிறது. பேரளவு மனிதர்கள் விழித்துக்கொள்ளும்போது ஒரு கட்டத்தில் மனிதப் பிரக்ஞை மனக்கட்டுகளிலிருந்து முழுமையாக விடுபட்டுப் புதிய சுதந்திரத்தை அனுபவம் கொள்கிறது. அது இன்னும் எதிர்காலத்தில்தான் இருக்கிறது.

துன்பத்திலிருந்து தப்பிக்கும் முயற்சி அனைத்தையும் கைவிடும்போது, துன்பமே படிப்படியாகத் தன் எல்லைக்கு மனத்தைக் கூட்டிச் செல்லும். அங்கே தன் எல்லைக்கப்பால் விரியும் இருட்பெருவெளியை எதிர்கொண்டதும், துன்பத்தின் கட்டமைப்புக்குள் உறைந்திருக்கும் சக்தியே துன்ப மண்டலத்தின் எல்லைச்சுவரைக் கரைத்து, அண்டப்பெருவெளிக்குள் மனத்தைக் கூட்டிச் செல்லும்.

துன்பமண்டலம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போய், ஒட்டுமொத்த மனிதப் பிரக்ஞையே விழிப்பு நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கியிருக்கிறது. அந்தத் திசையில் நாம் நகரத் தொடங்கியாகிவிட்டது. இந்தச் செயல்முறை ஒரே நேரத்தில் தனிமனத்திலும் முழுப் பிரக்ஞையிலும் நடப்பதுதான் பிரபஞ்சத்தின் அற்புதம். மனிதன் வேறு, பிரபஞ்சம் வேறு அல்ல என்னும் உண்மை இங்கு வெளிச்சமாகிறது.

ஒளியை அறியில் உருவும் ஒளியும்

ஒளியும் உருவம் அறியில் உருவாம்

ஒளியின் உருவம் அறியில் ஒளியே

ஒளியும் உருக உடன் இருந்தானே

என்கிறார் திருமுலர். காலமெல்லாம் உண்மையைத் தேடி, கடவுளைத் தேடி, தன்னைத் தேடி அலைந்து திரிந்த மனச்சுயம், கடைசியில் தன்னையே உண்மையென, தான் என்பதே கடவுள் என்னும் பிரபஞ்சத் தன்னொளியின் சிறு கீற்றென, தானே அகிலத்தில் ஒரே ‘நான்’ என அறிந்து,

அதனுடன் கலந்து ஒன்றிணைந்து, இரண்டும் ஒன்றெனப் பிரிவற்று, காலமற்று நிற்கும் நிலைதானே முழுவிழிப்புநிலை?

தன்னைத்தானே முழுவதும் அறிந்துகொண்ட மனிதனும், தான் இருப்பதைத் தானே முழுமை யாக அறிந்துகொண்ட பிரபஞ்சமும் ஒன்றுதான்.

(பயணம் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com

SCROLL FOR NEXT