தஞ்சாவூர்க்கவிராயர்
மெளனமே கடவுளின் மொழி; மற்றவை மோசமான மொழிபெயர்ப்புகள் என்கிறார் பாரசீகக் கவிஞரும் சூஃபி ஞானியுமான ஜலாலுதீன் ரூமி. கடவுளுடன் பேச முனிவர்களுக்கு வாய்த்த மொழி மெளனமே.
ரமண மகரிஷியின் மெளனம் அவரது பேச்சைவிடப் பிரசித்தமானது. பால் பிரண்டன் என்ற ஆங்கிலேய எழுத்தாளர் சித்தர்களையும் ஞானிகளையும் தேடிக் கொண்டு இந்தியா வந்தார். எங்கெங்கோ அலைந்தார். மனம் அமைதி பெறவில்லை. தன்னை வாட்டிய சந்தேகங்களைக் கேள்விகளாக எழுதி ஒரு பட்டியல் வைத்திருந்தார். எங்கும் திருப்தியான பதில் கிடைக்கவில்லை.
ரமணமகரிஷியைத் தேடிவந்தார். பகவானின் முன்னிலையில் மற்ற சீடர்களுடன் அமர்ந்தார். பகவான் எதுவுமே பேசவில்லை. பேச்சற்ற மெளனத்தில் நேரம் போய்க் கொண்டே இருந்தது. பகவானின் பார்வை பால்பிரண்டன் மீது சற்றே பட்டு விலகியது. அவ்வளவுதான். பால்பிரண்டன் மனம் தெளிந்தது. இனம்புரியாத அமைதி மனத்தில் அமர்ந்தது. அவர் கேட்க விரும்பிய கேள்வி களின் அபத்தம் புரிந்தது. கேள்விகளைத் தாண்டிய ஞானம் உள்ளே புகுந்தது. அதுவும் கேள்வியாக இருந்தது. நான் யார் என்ற கேள்வி.
அகத்தேடலை நோக்கிய பயணத்தில் மெளனம் ஒரு தோணி. நான் யார் என்ற கேள்வி ஒரு துடுப்பு. உள்முகமாக கேட்டுக்கொண்டே போனால் ‘நான்’ நசிக்கும் துடுப்பை எறிந்துவிட நேரும். மெளனம் கடந்து மனம் பாழில் நிலைக்கும். அப்போது என்ன நேரும்? என்னதான் நேராது? அதுவே இறை அனுபூதி.
அவ்வாறு வந்தவர்களில் சேஷாத்ரி சுவாமிகள், முருகனார் காவ்ய கண்ட கணபதி முனிவர் போன்றோர் வெளியுலகம் அறிந்த பெரியவர்கள். அறியப்படாத ஞானியர்களாக பகவான் ரமணரை அண்டியிருந்து வாழ்ந்து மறைந்தவர் பலர். அவர்களில் ஒருவர்தான் திண்ணை சுவாமிகள்.
திண்ணையில் தியானம்
திண்ணை சுவாமிகள், ஓர் அன்பரின் வீட்டுத் திண்ணையிலேயே மெளனித்து இருந்தபடி 40 ஆண்டுகளைத் தியானத்தில் கழித்தார். ஹென்றி ஜேம்ஸ் என்ற வெள்ளைக்காரர் எழுதிவைத்துப் போன சிறிய குறிப்பு ஒன்றே இவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பாக உள்ளது.
திருமணமாகி நான்கு குழந்தைகளும் பிறந்த பிறகு 35-வது வயதில் அலுவலகம் சார்ந்த ஒரு சம்பவம் அவர் மனத்தைச் சஞ்சலப்படுத்த, அமைதியைத் தேடி திருவண்ணாமலை வந்தார். பகவானைச் சந்தித்தார். திரும்புவதற்கு மனமில்லை. இதை மனைவிக்கும் கடிதம்வழி தெரிவித்தார். குடும்பத்தார் வந்தனர். மனைவி மட்டும் தனது கணவருக்குப் பணிவிடை செய்வதற்காகத் திருவண்ணாமலையிலேயே தங்கினார். பின்பு அவரும் கிளம்பிச் சென்றார்.
சுவாமியின் மனத்தில் சஞ்சலம் தீரவில்லை. தான் புதிய வேலை ஒன்றைத் தேடி புதுவைக்குச் செல்லும் விருப்பத்தைத் தெரிவித்தார். ரமணர் நீண்டநேரம் பேச வில்லை. அவர் வாயிலிருந்து ஒற்றைச் சொல் மட்டும் பூப்போல உதிர்ந்தது.
“இரு”
பக்கத்தில் நின்றிருந்த முருகனார் காதிலும் விழுந்தது. அவ்வளவுதான். “இரு” என்ற ஒற்றைச் சொல்லே அவரை திருவண்ணமலையில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தியது. சுவாமிகளின் மனம் முழுவதும் ‘இரு’ என்ற சொல்லே ரீங்கரித்தது.
எங்கும் போகாது இங்கேயே இரு என்று தூலமான பொருளை அது குறிக்கவில்லை. அது அகமாற்றம் குறித்த மந்திரம் என்று அவருக்குப் புரிந்தது.
பகவான் கூறியதைக் கேட்டு வாயடைத்து நின்ற சுவாமிகள் அன்று முதல் மெளனியானார். உடல் பற்றிய கவலை ஒழித்து நீண்டு புரளும் சிகையுடன் திருவண்ணாமலை தெருக்களில் பிச்சைவாங்கி உண்டவரைக் கண்டு பயபக்தியோடு வணங்கினார்கள் மக்கள்.
கோடையில் பெய்த மழை
கோடை நாள் ஒன்றில் கொளுத்தும் வெயிலில் நடந்தவர் அன்பர் நாதன் என்பவர் வீட்டின் முன் நின்றார்
“அம்மா மழை பெய்கிறது. இங்கே திண்ணையில் ஒதுங்கிக்கொள்ளலாமா?” என்று கேட்டார்.
அவர் சொல் பலிக்காமல் போகுமா? சட்டென்று வானம் இருட்டியது. எங்கிருந்தோ கருமேகம் சூழ்ந்தது. மழை பெய்யலாயிற்று.
வீட்டார் வியந்தனர். சுவாமிகள் திண்ணையில் ஒதுங்கி அமர்ந்தார். அந்தத் திண்ணையே அகத்தேடலின் தோணியாக ஆயிற்று. ஆண்டுக்கணக்கிவ் திண்ணையிலேயே மெளனத்தில் அவரது பயணம் தொடர்ந்தது.
திண்ணையிலிருந்து இரண்டே முறை எழுந்து வீட்டின் சுற்றுச்சுவர் தாண்டி குத்துக்காலிட்டு அமர்ந்திருக்கிறார் அவ்வளவுதான்.
நாதனின் வாடகை வீட்டைக் காலி செய்யும் நிலை ஏற்பட்டபோது கவலைப்பட்ட நாதனைப் பார்த்து உனக்கு மூன்று சாதுக்கள் சேர்ந்து வீடு கட்டித் தருவார்கள் என்று சொல்லி மெளனமானார்.
அந்தச் சொல்லும் பலித்தது. சாது ஓம் சுவாமிகள், தேசூர் ரமணாநந்தா, சுவாமிகள் சங்கரானந்தா ஆகியோர் நாதனுக்கு வீடு கட்டித் தந்தனர். அதில் சுவாமிகள் வீற்றிருக்கத் திண்ணையும் கட்டப்பட்டது.
இந்தத் திண்ணையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக மெளனத்தில் அமர்ந்திருந்தார் சுவாமிகள். மனம் அடங்கி உடல் ஒடுங்கி ஓரிடத்தில் வீற்றிருக்கும் காடசி கண்டு தரிசிக்க பக்தர்கள் வந்தனர். ஆனால் யாரோடும் பேசுவதில்லை. பேச்சற்ற மெளனமே அவர் தந்த பிரசாதம். அருணாசலம் போன்றே அசைவற்று வீற்றிருந்த திண்ணை சுவாமிகள் மகா சமாதி அடைந்தது கார்த்திகைத் திருநாளில் திருவண்ணாமலைமீது தீபம் ஏற்றும் நாளாக அமைந்ததில் வியப்பில்லை.
மௌன விருட்சம்
சுவாமிகளிடம் 50 ஆண்டுகளுக்கு மேலாக கனிந்த மெளனம் அவரோடு புதையுண்டு போகவில்லை. இன்றும் திருவண்ணாமலையில் திண்ணை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்த இடத்துக்குச் செல்பவர்கள் அங்கே, மெளனம் முளைத்தெழுந்து பெருமரமாக நிற்பதை உணர்கிறார்கள்.
(தேடல் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com