ஆனந்த ஜோதி

81 ரத்தினங்கள் 33: கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!

செய்திப்பிரிவு

உஷாதேவி

காசியப முனிவருக்கு கத்ரு, வினதை ஆகிய இரு மனைவியர். கத்ருவுக்கு ஆயிரம் நாகங்கள் புதல்வர்கள். வினதைக்கு கருடன், அருணன் எனும் இரு புதல்வர்கள். கத்ரு வினதையை அடிமையாக்க நினைத்து ஒரு போட்டியில் அவளைத் தோற்கடித்தாள். அடிமைப்பட்ட வினதையின் மகன் கருடன் தனது தாயை விடுவிக்க நினைத்தான்.

அந்த அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்காக தேவலோகத்தில் இருக்கும் அமிர்தகலசத்தை எடுத்துவருமாறு கத்ரு கட்டளை இட்டாள். அப்போது நாராயணனனுக்கும் கருடனுக்கும் யுத்தம் உருவானது. கருடனின் வீரத்தைப் பார்த்து பின்னர் சமாதானமும் ஏற்பட்டது. இந்தச் சமாதானத்தை அடுத்து நாராயணனுக்கு வாகனமாகவும் கொடியாகவும் கருடன் ஆனான்.

கருடாழ்வாரைப் பெரிய திருவடி என்று அழைப்பார்கள். இறைவனுக்கு பிரம்மோற்சவம் நடைபெறும்போது முதல் நாளாக த்வஜாரோகணம் எனும் கொடி ஏற்றத்தில் கருடக் கொடியே ஏற்றப்படுகிறது. இறைவனைச் சுமந்து வரும்போது கருட சேவை நிகழ்வு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இறைவன் ஆதிமூலமே அபயம் என்று அழைத்த கஜேந்திரனுக்கு, வரமருள வரும்போதும் கருட வாகனத்திலே விரைந்து வந்து மோட்சம் தந்தார்.

இப்படியாக பகவானுக்குச் சேவை செய்ததோடு மட்டுமல்லாமல் பக்தனுக்கும் உதவி செய்த பெருமை கருடனுக்கு உண்டு. ஒருமுறை பாம்பொன்று கருடனுக்குப் பயந்து நாராயணனிடம் அடைக்கலம் புகுந்தது. ‘கருடனே, என் பக்தனைக் காப்பாற்றும் பொறுப்பை உன்னிடம் தரப்போகிறேன்’ என்று உத்தரவிட அந்தப் பொறுப்பை ஏற்று கருடன், தனது எதிரியான பாம்பையே தனது காலில் வைத்து காப்பாற்றினார்.

பெருமாள் கோயிலுக்கு செல்லும் போதெல்லாம், இறைவனுக்கு எதிரே உள்ள கருடாழ்வாரை முதலில் சேவிப்பதே வழக்கம். பிறகு இறைவனை சேவிக்க வேண்டும். கருடனைப்போல இறைவனை சுமக்கும் வரம் எனக்கு கிடைக்கவில்லையே சுவாமி என்கிறாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.

( ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

SCROLL FOR NEXT