கோ. முத்துசாமி
அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான ருத்ரபசுபதி நாயனார் பிறந்த பெருமையுடைய ஊர் திருத்தலையூர். இத்தகைய பெருமை பெற்ற ஊரின் இன்னொரு சிறப்பு, அரசலாற்றின் கிளையாறான நாட்டாற்றின் கரையில் பாலேஸ்வரர், பார்வதி தேவியார் குடியிருக்கும் ஆலயம் அமைந்துள்ளது.
கிழக்கு திசையை நோக்கியவாறு கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கருநீலக்கல்லாலான சிவலிங்கம் புகழ்பெற்றது. மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் கருவறை தொடங்கி அர்த்த மண்டபம்வரை கருங்கல்லாலேயே அமைக்கப்பட்டுள்ளது.
நெடிதாக நீண்டு செவ்வக வடிவில் அமைந்துள்ள அழகிய மகாமண்டபத்தை மராட்டிய மன்னர்கள் கட்டினார்கள். நடுவில் தெற்கு நோக்கியவாறு அம்பாள் பார்வதிதேவியின் சன்னதி அமைந்துள்ளது. அம்பாள் சன்னதிக்கு முன்பாக நந்திதேவர் தனிமேடையில் இறைவனைப் பார்த்தபடி அமைந்துள்ளார்.
சுதை, செங்கல்லால் அமைக்கப்பட்ட மூலவர் விமானம் சுமார் நாற்பதடி உயரம் உடையது. மூலவரின் பின்புறம் தனியே விநாயகரும், வள்ளி - தெய்வானை உடன்நின்ற நிலையில் சுப்ரமணியரும் கிழக்கு நோக்கியவாறு சன்னிதிகளாகக் காட்சி தருகின்றனர். இந்த ஊரின் நாயகனான நாயன்மார் ருத்ரபசுபதியாருக்கு தனி சன்னிதி நிறுவப்பட்டுள்ளது. சோழர் காலப் பாணியிலான நின்ற நிலையில் வணங்கியபடி தனிச்சிலையாக உள்ளது.
ருத்ரபசுபதி நாயனாரின் பெருமை, திருத்தொண்டர் தொகையில் சுந்தர மூர்த்தி நாயனாராலும் நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருஅந்தாதியிலும் பாடப்பட்டுள்ளது. மழை இல்லாமல் வறட்சி காலத்தில் விவசாயிகள் தவித்தபோது, ருத்ரபசுபதி நாயனார், உடல் முழுவதும் திருநீறு பூசி இந்த ஆலயத்தின் திருக்குளத்தில் இறங்கி தனது இருகரங்களைக் கூப்பி வணங்கியபடி ஸ்ரீருத்ரத்தை ஜெபித்தார். மழையே இல்லாமல் இருந்த அந்த ஊரில் கருமேகங்கள் திரண்டு கனமழை பெய்யத் தொடங்கியது.
இக்கோயிலின் தலவிருட்சமான வில்வ மரம் திருச்சுற்றுக்கும் அம்மன் சன்னிதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சண்டேசுவரர் சன்னிதியின் பின்புறம் கோயில் கிணறு அமைந்துள்ளது. வில்வ மரத்தை அடுத்துப் பசுமையான வேப்ப மரமும் திருச்சுற்றுக்குள்ளேயே அமைந்துள்ளது.