எஸ்ஆர். நஃப்பீஸ் கான்
இறைத்தூதரின் மனைவி கதீஜா, சிறிய தந்தை அபூ தாலிப் ஆகிய இருவரும் இறந்த பிறகு, நபிகள் மிகுந்த துயரத்துடன் இருந்தார். அந்தக் காலத்தில் இஸ்லாமியர்களும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.
பொ.ஆ. 620-ல், ஒரு நாள் இரவு, இறைத்தூதர் ஜன்னத்துக்கு (சொர்க்கம்) அழைத்துச்செல்லப்பட்டார். இறைத்தூதர், எருசலேமில் இருக்கும் மஸ்ஜித் அல்-அக்ஸா வழியாக ஜன்னத்துக்குச் சென்றதாக மக்கள் பேசிக்கொண்டனர்.
இறைத்தூதரின் பயணம் தொடர்பாக எழுந்த சந்தேகங்களை மக்கள் அபூபக்ரிடம் சென்று விசாரித்தனர். அவர்களைத் தனது பேச்சால் அமைதிப்படுத்திய அபூபக்ர், இறைத்தூதர் சொல்வது அனைத்தையும் தான் நம்புவதாகத் தெரிவித்தார். அதனால் அவருக்கு ‘அல்-சித்தீக்’ என்ற பெயர் வழங்கப்பட்டது. ‘அல்-சித்தீக்’ என்றால் வலிமையான, நேர்மையான தோழன் என்று அர்த்தம்.
இறைவனின் மலக்கு
ஒரு நாள் இறைத்தூதருடன் அமர்ந்திருந்தபோது, அபூபக்ரை ஒருவர் அவமானப்படுத்திப் பேசினார். அதைக் கேட்ட பிறகும், அபூபக்ர் அமைதியுடன் இருந்தார். அந்த நபர் மீண்டும் அபூபக்ரை அவமானப்படுத்தினார். அப்போதும் அபூபக்ர் அமைதியுடன் இருந்தார். ஆனாலும், அந்த நபர் வசைப்பாடுவதை நிறுத்தவேயில்லை. ஒரு கட்டத்துக்குமேல் பொறுக்க முடியாமல், அபூபக்ர் அவருக் குப் பதிலளித்தார். அதைக் கேட்டவுடன், இறைத்தூதர் உடனடியாக அந்த இடத்திலிருந்து செல்வதற்காக எழுந்தார்.
‘நீங்கள் ஏன் இங்கிருந்து செல்கிறீர்கள் நபிகளே?’ என்று கேட்டார் அபூபக்ர். “நீங்கள் அமைதியாக இருந்தவரை, உங்களுக்காக இறைவனின் மலக்கு பதிலளித்துக்கொண்டிருந்தது. ஆனால், நீங்கள் கோபப்பட்டவுடன், மலக்கு இந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டது. அதனால், நானும் இங்கிருந்து செல்கிறேன்,” என்றார் இறைத்தூதர்.
போர் மூண்டது
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, பாரசீகர்களுக்கும் பைசாந்தியர்களுக்கும் போர் மூண்டது. இந்தப் போரில் குரைஷ் இனத்தவர்கள் பாரசீகர்களுக்கும், இஸ்லாமியர்கள் கிறித்துவர்களான பைசாந்தியர்களுக்கும் ஆதரவாக இருந்தனர். அப்போதுதான் கிறித்தவர்கள் வெல்லும் நாள் வரும் என்று கணித்த குர்ஆனின் முப்பதாம் அத்தியாயமான ‘சுரா அர்-ரம்’ (30:4) வெளிப்பட்டது. சில இஸ்லாமியர்களுக்குக்கூட இது பற்றிய சந்தேகம் அப்போது இருந்தது. ஏனென்றால், பாரசீகர்கள் அப்போது மிகவும் வலிமையுடன் இருந்தனர். ஆனால், இந்தத் தீர்க்கதரிசனம் பலிக்கும் என்பதில் அபூபக்ர் உறுதியாக இருந்தார்.
யார் வெல்வார்கள்?
குரைஷ் தலைவர் உபை பின் கல்ஃப், பாரசீகர்கள்தாம் வெல்வார்கள் என்று அபூபக்ரிடம் பந்தயம் கட்டினார். தோற்பவர் நூறு ஒட்டகங்கள் அளிக்க வேண்டும் என்று பந்தயம் கட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை இருவரின் வம்சாவழியினரும் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டது. ஒன்பது ஆண்டுகளுக்குப்பிறகு, தீர்க்கதரிசனம் உண்மையானது. உபை பின் கல்ஃபின் வாரிசுகள் தந்தையின் ஒப்பந்தத்தை நிறைவேற்றியதுடன் தீர்க்கதரிசனத்தில் இருந்த உண்மையை அறிந்து இஸ்லாம் மார்க்கத்தையும் தழுவினர். பந்தயத்தில் கிடைத்த ஒட்டகங்களை அபூபக்ர் ஈகையாகக் (சத்கா) கொடுத்துவிட்டார்.
ஹதீஸ் மொழி
ஒருவர் நன்கொடை நல்கிவிட்டோ அல்லது சன்மானம் அளித்துவிட்ட பின்னர் அதனையவர் திரும்பப் பெற்றுக் கொள்வது அவருக்கு ஆகுமானதல்ல. ஆனால் தந்தை தன் மைந்தனுக்கு அளித்து விட்டதைத் திரும்பப் பெறுவது ஆகுமானதாகும்.
- தொடரும்
தமிழில்: கனி
(நன்றி: குட்வர்ட் பதிப்பகம்)