ஆனந்த ஜோதி

81 ரத்தினங்கள் 31: கடித்து அவனை கண்டேனோ திருமங்கையாரைப் போலே!

செய்திப்பிரிவு

உஷாதேவி

ஆழ்வார்களில் இளையவரான திருமங்கையாழ்வார், திருக்குறையரூரில் கள்ளர் குடியில் பிறந்தவர். கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் வியாழக்கிழமையன்று அவதரித்தார். இவர் சோழ மன்னனிடம் சேனாதிபதியாய் இருந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளுக்கு எமன் போன்றவன்) என்று புகழ்பெற்றார்.

சோழ அரசன் இவரை திருமங்கை நாட்டுக்கு மன்னனாக்கி தமக்கு கீழே சிற்றரசராக இருக்கும்படி செய்தான். அதனால் திருமங்கை மன்னன் என்று பெயர் பெற்றான்.

ஆடல் மா எனும் குதிரை ஏறி வலம் வந்தவர், குமுதவல்லி என்னும் மங்கையை மணக்க வேண்டி அவளின் வேண்டு கோளுக்கு இணங்கி தினமும் ஆயிரத்தி எட்டு வைணவருக்கு அன்னமிட்டும் உடம்பில் சங்கு சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு திருமணம் செய்துகொண்டார்.

ததி ஆராதனைக்கு அரண்மனைக் கருவூலத்தில் உள்ள செல்வங்களையெல்லாம் செலவழித்தார். சோழப் பேரரசுக்கு கப்பம் கட்டவும் பொருட்கள் இல்லாமல் கரூவூலத்தைத் துடைத்தார். ததி ஆராதனைக்கு பொருட்கள் வேண்டி வழிப்பறி செய்யவும் தொடங்கினார்.

இவருக்கு மோட்சம் நல்கும் வகையில் வயலாளி மணவாளனும் தாயாரும் திருமணக்கோலத்தில் திருமணங்கொல்லை எனும் ஊருக்கு வந்தனர். திருமங்கை யாழ்வார் வேத ராஜபுரத்தில் வழிப்பறி செய்யக் குதிரையில் காத்திருந்தார். திருமணக் கோலத்திலிருந்த பகவானின் நகைகளை எல்லாம் கழட்டச் சொல்லி கத்தியைக் காட்டி திருமங்கையாழ்வார் மிரட்டினார்.

இறைவனும் தாயாரும் அனைத்து நகையையும் கழட்டி கொடுத்தார்கள். பிறகு இறைவன் திருவடியில் அணிந்திருந்த மெட்டி மட்டும் கழற்றப்படாமல் இருக்க அதையும் திருமங்கையாழ்வார் கேட்டார். நீரே கழட்டிக் கொள்ளும் என்று இறைவன் கூற ஆழ்வாரும். கழட்டி பார்த்தால் அவராலும் முடியவில்லை. பிறகு குனிந்து தன் பற்களால் கடித்து இழுத்தார். உடனே இறைவன் அதையே தன் திருவடிப் பரிசமாக எடுத்துக் கொண்டு. நம் கலியன் நீர் என்று இறைவன் பெயர் கொடுத்தார்.

நாராயண மந்திரம்

எல்லா ஆபரணங்களையும் மூட்டையாக கட்டி தூக்கும் போது பாரம் தாங்காமல் எடுக்க முடியவில்லை. உடனே இறைவனைப் பார்த்து, சொர்ண மூட்டையை எடுக்க முடியாமல் ஏதாவது மந்திரம் போட்டுவிட்டீரோ எனக் கேட்டார். ஆம், என்னருகே வாரும் என்றார் இறைவன். திருமங்கை மன்னனின் காதில் ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரம் ஓதப்பட்டது.

உடனே கருட வாகனத்தில் காட்சியளித்தார். அந்தக் கணத்தில் அஞ்ஞான இருள் ஒழிந்து திவ்ய பிரபந்தங்களைப் பாட வல்லவர் ஆனார்.

‘வாடினேன் வாடி வருந்தினேன்’ என திவ்ய பிரபந்தங்களைப் பாடலானார்.

ஆளினாடன், களியன், மங்கை மன்னன் என்றெல்லாம் பெயர் பெற்று இறைவனாலேயே திருமந்திரம் ஓதப் பெற்றவர் திருமங்கையாழ்வார். அவர் போல சிரத்தை, பக்தி, ஞானம், வைராக்கியம் எதுவும் அற்றவளான நான் இறைவனின் எட்டெழுத்து மந்திரத்தை பெறவில்லையே என்று மனமுருகுகிறாள் நம் திருக்கோளுர் பெண் பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

SCROLL FOR NEXT