பழந்தமிழர்களின் வாழ்வியல் என்று சொல்லப்படும் ஆசீவகம் குறித்த நல்ல அறிமுக நூல் இது. ஆய்வறிஞர் ஏ. எல். பாஷத்தின் ஆய்வை முன்வைத்து தமிழகத்தில் ஆசீவகத்தின் வேர்களைத் தேடுகிறது இந்நூல். பொ. ஆ.மு மூன்றாம் நூற்றாண்டில் ஆசீவகம் வடநாட்டில் செல்வாக்கை இழந்த நிலையில், அதன் தாக்கம் தமிழ் இலக்கியங்களில் 14-ம் நூற்றாண்டுவரை தொடர்ந்திருக்கிறது.
‘ஆசீவகம்’ என்ற சொல்லின் வேரில் தொடங்கி, ஆசீவக மதச் சின்னங்கள், கடுந்தவ முறைகள், ஆசீவகத் தத்துவங்கள் ஆகியவற்றைப் பற்றி இந்த நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. அவைதிக சமயங்களான பவுத்தம், சமணம் ஆகியவற்றுக்கும் ஆசீவகத்துக்கும் இடையிலான ஒற்றுமைக்கூறுகளையும் நூலாசிரியர் சி. பி. சரவணன் விவரிக்கிறார்.
ஆசீவர்களின் வண்ணக் கோட்பாட்டுக்கும், அகந்தையின் ஏழு திரைகள் என்று ஏழு வண்ணங்களில் குறிப்பிடும் வள்ளலாரின் கோட்பாட்டுக்கும் உள்ள பொது அம்சங்களை நிறுவுகிறார். ஆசீவகர்கள் காட்டும் நிறங்கள் ஆறு.
தமிழகத்தில் காணப்படும் கல்வெட்டுகளிலிருந்து ஆசீவகம் பற்றிய குறிப்புகள் இந்த நூலில் விரிவாகப் பேசப்பட்டிருப்பது சிறப்பு.
வைகை நதிக்கரையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழாய்வு மூலம் சங்க காலத் தமிழர்களின் நாகரிக வாழ்க்கைக்கான சான்றுகள் தெரியவந்துள்ளன. இந்த நிலையில் தமிழர்களின் வாழ்க்கை நெறியாக இருந்த ஆசீவகம் பற்றிய இந்த நூல் நமது தத்துவ மரபையும் தெரிந்துகொள்ள உதவுகிறது.