ஆனந்த ஜோதி

முல்லா கதை: முல்லா உருவாக்கிய உண்மை

செய்திப்பிரிவு

‘இந்த மாதிரி சட்டங்கள் எல்லாம் மக்களைச் சிறந்தவர்களாக மாற்றிவிடாது. தங்களுக்குள் இருக்கும் உண்மையைத் தெரிந்துகொள்ள அவர்கள் குறிப்பிட்ட சில விஷயங்களைப் பயிற்சி செய்யவேண்டும். இந்த வடிவத்தில் இருக்கும் உண்மை, தெளிவான உண்மையை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை’ என்று அரசரிடம் சொன்னார் முல்லா.

மக்களை உண்மையைப் பேச வைக்க முடியும் என்று உறுதியாக நம்பினார் அரசர். உண்மையைக் கடைப்பிடிக்கவும் வைக்கமுடியும் அவர் நினைத்தார். அதை முல்லாவிடம் நிரூபிக்கவும் நினைத்தார்.

அவர் ஆண்ட நகரத்துக்குள் ஒரு பாலத்தின் வழியாகத்தான் அனைவரும் வர முடியும். அந்தப் பாலத்தில் அவர் ஒரு தூக்குமேடையை அமைத்தார். அடுத்த நாள் காலை, பாலத்தின் கதவுகள் திறக்கப்பட்ட போது, அரசரின் படைத் தளபதி படைகளுடன் வாசலில் நின்றிருந்தார். பாலத்தில் நுழைபவர்கள் அனைவரையும் விசாரணை செய்ய மன்னர் ஏற்பாடு செய்திருந்தார்.

‘ நகரத்துக்குள் நுழையும் அனைத்து மக்களும் விசாரிக்கப்படுவார்கள். உண்மையைச் சொல்பவர்கள் நகரத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பொய் சொல்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்,’ என்பதுதான் அந்தச் செய்தி .

அப்போது தனது கழுதையுடன் முல்லா பாலத்தின் மீது ஏறினார்.

‘எங்கே செல்கிறீர்கள்,’ என்று முல்லாவைக் கேட்டார் படைத்தளபதி.

‘நான் தூக்கிலிடப்படுவதற்காகச் சென்று கொண்டிருக்கிறேன்,’ என்று சொன்னார் முல்லா.

‘நீங்கள் சொல்வதை நம்ப மாட்டோம்!’ என்றார் படைத்தளபதி.

‘நான் பொய் சொல்லியிருந்தால், என்னைத் தூக்கிலிடுங்கள்’ என்றார் முல்லா.

‘ஆனால், நாங்கள் உங்களைப் பொய் சொன்னதற்காகத் தூக்கிலிட்டால் நீங்கள் சொன்னது உண்மையாகிவிடுமே!’ என்றார் படைத்தளபதி.

‘அது சரிதான். உங்களுடைய உண்மை எப்படிப்பட்ட உண்மையென்று தெரிகிறதா?!’ என்றார் முல்லா.

- யாழினி

SCROLL FOR NEXT