வேதா டி, ஸ்ரீதரன்
நண்பர் ஒருவர் வருடாவருடம் மார்கழி மாதத்தின்போது திருப்பாவைப் பிரதிகளை அச்சிட்டு இலவசமாக விநியோகிப்பது வழக்கம். இது சம்பந்தமாக அவர் என்னைத் தொடர்பு கொண்டார். “இந்த முறை திருப்பாவையைப் பொருளுடன் அச்சிட்டால் நன்றாக இருக்கும் என்று நிறையப் பேர் விரும்புகிறார்கள். ஏதாவது நூல்களில் இருந்து எளிமையான பொருள் விளக்கம் எடுத்துத் தர முடியுமா?” என்று கேட்டார்.
நல்ல விஷயம்தானே, செய்யலாமே என்று எனக்குத் தோன்றியது. திருப்பாவைக்கான சில விளக்க உரைகளை வாங்கிப் படித்துப் பார்த்தேன். எவ்வளவு பொருள்பொதிந்த பாடல்கள் அவை! ஆண்டாளின் இதயத் துடிப்புக்கும் எண்ண வீச்சுக்கும் ஏற்ற விதத்தில் அவளுடைய எழுதுகோல் நாட்டியமாடியது என்றே சொல்லலாம்.
திருப்பாவையில் இருந்து இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
முதலாவதாக, ‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ என்ற பாசுரத்தில் (ஐந்தாவது பாசுரம்) அவள் கையாண்டுள்ள இரண்டு நாமங்கள். முதலாவது நாமம் ‘மாயன்’. இரண்டாவது நாமம் ‘தாமோதரன்’. மாயன் என்றால் மாயாவி. அதாவது, இருப்பதை மறைத்து இல்லாததைக் காட்டுபவன், வேடிக்கை விநோதன், பொய்யன், உண்மையைத் திரிப்பவன் என்றெல்லாம் பொருள்.
கிருஷ்ணனை மிகவும் தோழமையுடன், கிண்டலாக மாயாவி என்று வர்ணித்து இந்தப் பாசுரத்தைத் தொடங்குகிறாள், ஆண்டாள். நான்காவது வரியில் ‘தாமோதர’ வருகிறது. அந்த விளிப்புக்கு அவள் கொடுத்துள்ள அடைமொழி ‘தாயைக் குடல்விளக்கம் செய்த’ என்பது. இந்த வரியை மேம்போக்காகப் பார்த்தால் ‘அவதார புருஷனைத் தாங்கிய அந்தத் தேவகியின் வயிறு விளக்கப்பட்டுத் தூய்மை அடைந்தது’ என்று பொருள் கிடைக்கும். ஆனால், அந்தப் பரமாத்மாவையே தன் கர்ப்பத்தில் சுமக்க வேண்டுமென்றால், அந்தத் தாய் எப்பேர்ப்பட்ட புண்ணியவதியாக இருந்திருப்பாள்? பகவான் அவளைத் தூய்மைப்படுத்த வேண்டிய அவசியம் எங்கிருந்து வரமுடியும்?
உண்மையில், அவளது கர்ப்பம் எவ்வளவு பெருமைக்குரியது என்பதை உலகம் முழுவதற்கும் விளக்கிக் காட்டுவதற்காகத்தான் அவன் தேவகியின் வயிற்றில் வந்து உதித்தான் என்பதே இதன் பொருள்.
யசோதையைப் புறந்தள்ளலாமா?
அது மட்டுமல்ல, சரியாக இந்த இடத்தில் பகவானின் ‘தாமோதரன்’ என்ற நாமத்தைப் பயன்படுத்துகிறாள், ஆண்டாள். இதுவும் மிகவும் ஆழ்ந்து நோக்கப்பட வேண்டிய விஷயம். தேவகியின் வயிற்றில் அவதரித்தவன் கிருஷ்ணன் என்பது சரி. தேவகிதான் அவனது தாய். ஆனால், யசோதை? அவள் அவனுக்குத் தாய் இல்லையா? அவதாரத்துக்குப் பிறப்புக் கொடுத்தவள் என்ற பொருளில் தேவகியை மட்டும் சொல்லி யசோதையைப் புறந்தள்ளலாமா?
அந்தக் குறை நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த இடத்தில் அவனை வெறுமனே ‘தாயைக் குடல்விளக்கம் செய்தவன்’ என்று மட்டும் சொல்லாமல் ‘தாமோதரன்’ என்றும் சேர்த்தே சொல்கிறாள். தாமோதரன் என்றால் வயிற்றில் கட்டை உடையவன் என்று பொருள். யசோதை அவனை உரலில் கட்டிப் போட்டாள், அல்லவா? அதனால்தான் அவனுக்கு இந்த நாமம்.
அண்ட சராசரத்தையும் அடக்கியவன்
தாமோதர என்ற பெயருக்கு வேறு சில விளக்கங்களும் உண்டு. தாமம் என்றால் இருப்பிடம் என்று பொருள். உதரம் என்றால் வயிறு. அதாவது, ஜீவாத்மாக்கள் உறையும் இடமாகிய இந்தப் பிரபஞ்சத்தையே தனக்குள் (வயிற்றில்) அடக்கியவன் என்பது ஒரு விளக்கம். அண்ட சராசரத்தையும் தனக்குள் அடக்கியவன், தன்னை ஒரு தாயின் வயிற்றுக்குள் அடக்கிக்கொண்டான், இன்னொரு தாயோ அவனைக் கயிற்றால் கட்டிப் போட்டாள்.
அண்ட சராசரத்தையும் தனக்குள் அடக்கியுள்ள அந்தப் பரமாத்மா, கட்டுண்டுக் கிடப்பவனாகத் தன்னைக் காட்டிநிற்கிறானே! இவனை மாயாவி என்று சொல்லாமல் வேறு எப்படி அழைப்பதாம்? எவ்வளவு பொருத்தமாக இந்தப் பாசுரத்தை அவள் ‘மாயனை’ என்று தொடங்கி இருக்கிறாள்? ஆண்டாளின் திருப்பாவையும்கூட தேவகியின் கர்ப்பத்துக்கு ஒப்பானதுதான். ‘கர்ப்பம்’ என்றால் உள்ளார்ந்த, உள்ளடங்கிய என்று பொருள். இவளுடைய பாசுரமும் அப்படித்தான்.
இற்றைப்பறை கொள்வான் அன்று
அடுத்ததாக, ‘சிற்றஞ்சிறுகாலே’ பாசுரத்தில் (29-வது பாசுரம்) வரும் ‘இற்றைப்பறை கொள்வான் அன்று’ என்ற வரி.
ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவள் என்றாலும், அவள் தன்னை ஆயர்குலத்து கோபிகையாகவே பாவித்தவள். எனவே, கிருஷ்ணனை அவள் தனது தோழனாகவே கருதினாள்.
கிருஷ்ணனை அடைவதற்காக கோபிகைகள் காத்யாயினி நோன்பு மேற்கொண்டதுபோல், ஆண்டாள் பாவை நோன்பு மேற்கொள்கிறாள். அவளுடன் அவளது சகவயதுத் தோழிகளும் நோன்பு மேற்கொள்கிறார்கள்.
நோன்பு முடிவில் ஆயர்பாடிக் கண்ணனைத் துயில் எழுப்பி அவனிடம் பறை (வரம்) கேட்கிறாள். இதுதான் திருப்பாவையின் சுருக்கம்.
இப்போது ‘இற்றைப்பறை கொள்வான் அன்று’ என்ற வரியைக் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கலாம். ‘இற்றைப்பறை கொள்வான் அன்று’ என்றால் ‘சாதாரணமான வரத்தை யாசிப்பதற்காக நாங்கள் வரவில்லை’ என்று பொருள். அதாவது, ‘மிக உயர்ந்த வரத்தை யாசித்து வந்திருக்கிறோம்’ என்கிறாள், ஆண்டாள். அது என்ன உயர்ந்த வரம் என்பதை ‘மாலே மணிவண்ணா’ பாசுரத்தில் (26-வது பாசுரம்) இருந்து படிப்படியாக விளக்கிக்கொண்டு வந்து ‘சிற்றஞ்சிறுகாலே’ பாசுரத்தில் முடிக்கிறாள்.
இவற்றில் ஒன்று ‘நாடுபுகழும் பரிசு’ என்பதாகும் (‘கூடாரை வெல்லும் சீர்’ பாசுரத்தில் வரும் வரி). நாடுபுகழும் என்று சொன்னால் நாட்டில் உள்ள மாந்தர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் என்று பொருள் கொள்ளக் கூடாது. ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு’. எனவே, நாட்டில் உள்ள உயர்ந்தோர்கள் - அதாவது மகான்கள், சான்றோர்கள் - போற்றும் வகையிலான பரிசு (வரம்) என்பதுதான் இதன் பொருள்.
ஆக, ‘இற்றைப்பறை கொள்வான் அன்று’ என்றால் ‘மகான்களால் ஏற்கப்படாத விஷயங்களை யாசிப்பதற்காக நாங்கள் வரவில்லை’ என்று பொருள்.
மகான்களால் ஏற்கப்படும் விஷயம் எது, ஏற்கப்படாத விஷயம் எது?
இறைவனின் திருவடிகளை அடைவதுதான் மனிதப் பிறவியின் நோக்கம். எனவே, இறைவனை அடைவதற்கான வழிகள் அனைத்தும் மகான்களால் ஏற்கப்படும் விஷயங்கள். அதாவது ஆன்மிக வழி. இறைவனிடமிருந்து நம்மை விலக்கும் அனைத்தும் மகான்களால் ஏற்கப்படாத விஷயங்கள். அதாவது உலகாயதத் தேடல்கள்.
அதாவது, ‘எத்தனை பிறவி எடுத்தாலும் சரியப்பா, அத்தனை பிறவியிலும் நாங்கள் உனக்கு உற்றவர்களாகவே (உறவினர்கள்,வேண்டியவர்கள்) பிறக்க வேண்டும், உன்னால் நாங்கள் ஆட்கொள்ளப்பட வேண்டும், இதைத்தவிர எங்களிடம் வேறு எந்த நாட்டமும் இருக்கக் கூடாது என்ற வரத்தைத் தா’ என்று வேண்டுகிறாள்.