ஜோதிடச் சக்கரவர்த்தி ஏ.எம். ராஜகோபாலன்
நமது முன்னோர்கள் காலம் தொட்டு, நாம் பின்பற்றி வரும் இந்த மார்கழி விரதங்கள், பூஜைகள், அனுஷ்டானங்கள் அனைத்தும் வெறும் நம்பிக்கைகள் மட்டுமல்ல; இயற்கையையும் அறிவியலையும் அடிப்படையாகக் கொண்டவை என்பதை அழகாக உணர்த்துகிறது இந்த உற்சவம்.
உதாரணமாக, இரண்டாம் நாளன்று “நெய்யுண்ணோம், பாலுண்ணோம்” என்று கூறும் கோதை, கூடாரவல்லியன்று “முழங்கை வழி வார, பாற்சோறு மூட நெய் பெய்து” உண்கிறாளே. .அது ஏனென்றால், சமயத்தில் தை மாத அறுவடைக்கு முன் தானியங்கள் குறைவாயிருக்கலாம் என்பதால் உணவுப் பற்றாக்குறை ஏற்படாமல் நோன்பிருந்து தங்களை சூழ்நிலைக்கு ஏற்பத் தயார்படுத்திக் கொண்ட பக்தர்கள், அறுவடையைக் கொண்டாடத் தயாராகும்நாள் தான் இந்தக் கூடாரவல்லி என்கிறார்.
மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து நோன்பிருந்து வேக நடை நடந்து இறைவனைத் தொழுதால் அதுவே மனத்திலும் உடலிலும் ஒன்றி முழுமையாகப் பழகி குளிர்காலத்தில் நம்மைச் சுறுசுறுப்புடன் வைக்கும் என்று ஒரு ஆராய்ச்சியை முன்வைக்கிறார்.
பூமியில் எதிரும் புதிருமாக எப்போதும் இருக்கும் கருடனையும் ஆதிசேஷனையும் எந்த ஏற்றத்தாழ்வும் இல்லாமல் நம் இறைவன் எப்படித் தன்னுடன் சமமாக வைத்து இந்த உலகிற்கு அருள்கிறாரோ அதேபோல் தன்னுடைய பக்தர்கள் அனைவரும் உலகத்தினர் அனைவருடனும் வேற்றுமையிலும் ஒற்றுமை கண்டு வெறுப்பின்றி வாழவேண்டும் என்று விரும்புவதைச் சொல்லாமல் சொல்கிறார்.
இதுபோல் முப்பது பாசுரங்களிலும் இன்னும் நாம் அறியாத பல புதிய விஷயங்களை, அதன் தமிழ்ச் சுவையை, அதிலிருக்கும் அறிவியலை, அந்தப் பாடல்களின் தீர்க்க தரிசனத்தை இன்னும் பலவற்றை வெகு அழகாக எடுத்துரைக்கிறார், பெருமைமிகு நமது பெண்கள் சிறப்பு மருத்துவர் சசித்ரா.
மார்கழி உற்சவம்
சசித்ரா தாமோதரன்
ஒரு மருத்துவரின் திருப்பாவைப் பயணம்
சந்தியா பதிப்பகம்
விலை : ரூ. 210/-
தொடர்புக்கு : 044- 24896979
--------------------------------------------------
வைணவத் திருத்தலங்கள் 108
வைணவத்தின் தனித்துவங்களையும் திருத்தலங்களையும் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் வைணவம், 108 வைணவத் திருத்தலங்கள், பிற ஆலயங்கள் என்னும் முப்பெரும் பகுப்புகளைக் கொண்ட நூல் இது.
‘வைணவம்’ என்கிற முதற்பகுதியில் வைணவம், பன்னிரு ஆழ்வார்கள், வைணவ குரு பரம்பரை, பிற ஆச்சார்யர்களும் அடியவர்களும், வைணவத் தத்துவம், இறைவனின் பண்பும் வடிவும், வைணவ ஆகமங்கள், வைணவத்தின் மூன்று மந்திரங்கள், வைணவத்தில் வடகலை தென்கலை, வைணவத்தில் மந்திரமும் சடங்கும், வைணவத்தில் விழாக்களும் விரதங்களும், வைணவ ஆலய தின வழிபாடுகள் என 12 உட்தலைப்புகள் கொண்டு இப்பகுதி வைணவத்தை முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
இரண்டாம் பெரும்பகுதியில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்தருளப் பெற்ற 108 திருப்பதிகளைப் பற்றிய தொகுப்பு இடம்பெற்றுள்ளது. திருமால் மக்கட்குக் காட்சி கொடுத்து, அருள்புரிந்து தன் திருத்தலமாகிய வைகுந்தத்திற்கு அழைத்துக் கொள்ள ஐந்து நிலைகளில் எழுந்தருளினார் என்பர். அவற்றுள் சிலை நிலையில் இப்பூவுலகில் பெருமாள் எழுந்தருளிய திருப்பதிகள் அல்லது திவ்ய தேசங்கள் 106 ஆகும்.
வைணவத்தைப் பற்றிய முழுமையான செய்திகளை இந்நூலின் மூலம் அறியலாம்.
வைணவமும் வைணவத் திருத்தலங்களும்
முனைவர் எஸ். ஸ்ரீகுமார்
ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
விலை : ரூ. 420/-
தொடர்புக்கு : 044 - 24331510
----------------------------------------------------------------
உயிர் வளர்க்கும் திருமந்திரம்
208 பக்கங்கள்
விலை: ₹180
கரு.ஆறுமுகத்தமிழன்
‘இந்து தமிழ் திசை’ வெளியீடு
இந்த உலகில் பிறந்த உயிர்க்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தன் வாழ்வின் ஒரு தருணத்திலாவது சில கேள்விகள் எழும். தான் யார்? தனது இருப்பின் பொருள் என்ன? இந்த உலகில் தன் இடம் என்ன? தான்படும் அல்லல்களின் மூலம் என்ன? அதன் தளைகளை அறுத்து விடுதலை பெறுவதற்கான வழி என்ன என்பது போன்ற கேள்விகள்தாம் அவை. இருப்பின், ஆதாரங்களான உடல், மனம் சார்ந்த பல்வேறு புதிர்களைத் திறந்து மெய்நெறியை வழங்குவது திருமூலர் எழுதிய திருமந்திரம் ஆகும். சமயப் படைப்பு என்ற வரையறையைத் தகர்த்து தனித்துவமான மெய்யியல் நூலாகத் திகழும் திருமந்திரத்தைத் தழுவி, இக்காலத்தவருக்கும் இக்காலம் நம் முன் விடுக்கும் கேள்விகளுக்கும் பதிலாகவும் தீர்வுகளாகவும் இந்நூல் அமையும்.
--------------------------------------------------------------
ஆன்மா என்னும் புத்தகம்
என். கௌரி
`இந்து தமிழ் திசை' வெளியீடு
விலை: ₹130
உண்மை என்பது பாதைகளற்றது என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. அறிதல், மெய்ஞ்ஞானம், விடுதலை போன்றவையும் பாதைகளற்றவைதாம். ஏனெனில், அவரவர் தனது வாழ்க்கை அனுபவங்களின் வழியாக, துயரங்கள், மகிழ்ச்சிகள், அடைதல்கள், இழப்புகள் வழியாக அடையும் புரிதல் உண்மையிலேயே பாதைகள் அற்றதுதான். அந்தப் புரிதலை அடைவதற்கு வெவ்வேறு மார்க்கங்களில் பயணித்தவர்களின் படைப்புகள் குறித்த அறிமுகம்தான் ‘ஆன்மா என்னும் புத்தகம்’.