சிந்துகுமாரன்
புராணக் கதைகள் எல்லாமே பிரக்ஞையின் ஆழ்தள இயக்கம் பற்றிய உண்மைகளைப் பேசுகின்றன. அந்த உண்மைகளை எதிர்காலச் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் சாதனமாகத்தான் இந்தக் கதைகள் இருக்கின்றன.
வாலியைக் கொன்று தன்னைக் காப்பாற்றினால் வானரக் கூட்டம் முழுவதும் சீதையைக் கண்டுபிடிக்கும் விஷயத்தில் ராமனுக்கு உதவும் என்று சுக்ரீவன் வாக்களித்தான். ஆனால், வாலியைக் கொல்வதில் ஒரு பெரும் இடைஞ்சல் இருந்தது.
வாலிக்கு எதிராக யார் போய்ச் சண்டைக்கு நின்றாலும் அவர்களின் பலத்தில் பாதி வாலிக்குப் போய்ச் சேர்ந்துவிடும். அப்படி ஒரு வரம் அவனுக்கிருந்தது. வாலி, தன்னளவிலேயே மிகப் பெரும் பலசாலி. ராவணன் வாலியிடம் மாட்டிக்கொண்டு பட்ட அவஸ்தை புராணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ராமன் மறைந்திருந்து வாலியைக் கொல்ல வேண்டியிருந்தது. கதைப்படி ராமனுக்கு ஒரு நியாயம் இருந்தால் வாலிக்கு அவனுடைய நியாயம் இருந்தது. உயிர் போவதற்கு முன் இதைப் பற்றி ராமனிடமே அவன் வாதாடுகிறான். இது சரியா இல்லையா என்பது பற்றிப் பல விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.
இந்தக் கதைக்குப் பின்னால் வேறு ஆழமான பொருள் பொதிந்திருக்க முடியுமா என்ற கேள்வியைக் கேட்டுப் பார்ப்போம்.
தன்னை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களுடைய வலிமையில் பாதி வாலிக்குப் போய்விடும் என்ற கருத்துக்குப் பின்னால் என்ன அர்த்தம் இருக்க முடியும்?
இதேபோல் மனித மனத்தில் என்ன நடக்கிறது? மனித மனம் பல தளங்கள் கொண்டது. மேல்தளங்கள் மட்டுமே தனிமனிதன் சார்ந்தது. தனியொரு மனிதனாக வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகள், அவ்வாறு வாழ்வதற்குத் தேவையான தகவல்கள் எல்லாம் அங்கேதான் இருக்கின்றன.
மனிதகுலத்துக்குப் பொதுவான நினைவுகள்
ஆழ்தளங்கள் அனைத்து மனிதகுலத்துக்கும் பொதுவானவை. பிரக்ஞையில் எல்லாமே படிவங்களாக (Patterns) இருந்து இயங்குகின்றன. நினைவுப் படிவங்கள் மேல்மனத்தளங்களில் இயக்கம் கொண்டிருக்கின்றன. ஆழ்தளங்களில் இருந்து இயங்கும் படிவங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தனிமனித மனத்தின் சக்தியைவிடப் பல மடங்கு வலிமையானவை அவை. சில சந்தர்ப்பங்களில் இந்தப் படிவங்கள் தனிமனத்தில் பெரும் வேதனையை எழுப்புகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தத் தனிமனம் எவ்வளவோ முயல்கிறது; ஆனால் எப்போதுமே தோற்றுப் போகிறது.
இந்தப் படிவங்கள் அடிப்படையில் சுயப்பிரக்ஞை இல்லாதவை. இவை நனவிலி மனத்தின் இருளிலிருந்து இயங்குகின்றன. மேல்தளங்களும் ஆழ்தளங்களும் ஒரே அடிப்படைக் கட்டமைப்பில்தான் இயங்குகின்றன. அதனால், இந்தப் படிவங்களைக் கட்டுப்படுத்தத் தனிமனம் பயன்படுத்தும் சக்தியை இந்தப் படிவங்களே உறிஞ்சிக் கொண்டுவிடுகின்றன. தனிமனம் அதனிடம் தோற்றுப் போவது மட்டுமில்லாமல், இந்தப் படிவங்களின் சக்தியும் வலிமையும் மேலும் அதிகமாகிவிடுகின்றன. அடுத்தமுறை இவற்றைக் கட்டுப்படுத்த இன்னும் அதிகமான சக்தி தேவைப்படுகிறது. அதையும் இவை கிரகித்துக்கொண்டுவிடுகின்றன. அதனால் இதற்கு முடிவே இல்லாமல் போகிறது. அப்போது இதிலிருந்து விடுபடுவதற்கு என்னதான் வழி?
பார்வைக்குப் புலப்படாதது
இந்த அமைப்புக்கு வெளியே விரிந்திருக்கும் ‘நான்’ என்னும் அறிவுணர்வில் கவனத்தை நிலைப்படுத்துவது ஒன்றுதான் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு. மனத்தால் உள்ளீடும் உருவமும் இல்லாத எதையும் பார்க்க முடியாது. உயிருணர்வு உள்ளீடற்றது; அதனால் உருவமும் இல்லாதது. அந்தக் காரணத்தால் மனத்தின் பார்வையிலிருந்து இது மறைந்தே இருக்கிறது.
புலன்களையும் மனத்தையும் பொறுத்தவரையில் உயிருணர்வு மறைந்திருக்கும் மறைபொருள். பார்வைக்குப் புலப்படாதது; மனத்தால் கிரகிக்க முடியாதது. மனமும் புலன்களும் இணைந்து உருவாக்கும் ‘உலகம்’ என்னும் அனுபவத்தைத்தான் ‘மாயை’ என்று சொல்கிறார்கள். மாயை உயிருணர்வை, சுத்தப்பிரக்ஞையை(Pure Consciousness) மறைக்கிறது; இந்த மறைபொருள் புரியும்போது மாயை மறைந்துபோகிறது.
மாயை மறைக்க மறையும் மறைபொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறைய வல்லார்க்குக்
காயமும் இல்லை கருத்தில்லைதானே
- என்கிறார் திருமூலர்.
சுத்தப்பிரக்ஞை வெளிப் படும்போது, உடலும் உடல் சார்ந்த புலன்களும், மனமும் மனம் சார்ந்த கருத்துகளும் அனுபவத்தின் பின்னணிக்குப் போய்விடுகின்றன, அறிவுணர்வின் கவனம்கொண்டு, அந்த வெளிச்சத்தில் படிவங்களைப் பார்க்கும்போது, படிவங்களில் பொதிந்திருக்கும் சக்தியை அறிவுணர்வு கிரகித்துகொண்டு விடுகிறது. மறைந்திருக்கும் அந்தத் தத்துவத்தின் துணைகொண்டுதான், நம் முயற்சியின் வலிமையைத் தான் கிரகித்துக்கொண்டுவிடும் ஆழ்மனப் படிவங்களின் பிடியிலிருந்து நம்மை நாம் விடுவித்துக்கொள்ள முடியும். இந்த உண்மையைத்தான் வாலியின் வதம் குறிக்கிறது.
வாலி ஆழ்மனப்படிவங்களின் அடையாளம். புலப்படாமல் மறைந்திருக்கும் ‘நான்’ என்னும் ஆன்ம சக்தியைத்தான் ராமன் என்னும் தத்துவம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
(அறிவோம்…)
கட்டுரையாளர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com