இசை, எழுத்து, ஆய்வு என பல ஆளுமைகளைக் கொண்ட கர்னாடக இசைப் பாடகர் மும்பையைச் சேர்ந்த டாக்டர் வசுமதி பத்ரிநாதன். தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்ற வசுமதி, பிரெஞ்சு மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இந்திய இசை வடிவங்கள் குறித்து ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உலகின் பல பகுதிகளிலிருந்து வெளிவரும் இதழ்களில் எழுதியிருப்பவர் இவர். `ஏசியன் ஏஜ் நியூஸ்’ நாளிதழில் இவர் எழுதும் இசைப் பத்திகள் புகழ்பெற்றவை.
அமெரிக்க நாட்டின் புகழ்பெற்ற ஃபுல்பிரைட் நிதியுதவி அந்நாட்டில் அவருடைய இசைப் பணிகளுக்காக கிடைத்துள்ளது. அண்மையில் வசுமதி செய்திருக்கும் பணி, பிரெஞ்சு மொழி பேசும் மக்களுக்கும் தமிழை ஆண்ட ஆண்டாளை அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ஆண்டாளின் திருப்பாவையை வசுமதி பிரெஞ்சில் மொழி பெயர்த்திருக்கிறார். ‘Le Tiruppavai ou Le chant matinal de Margali’ என்னும் இந்த நூலை பாரிசின் எடிசன்ஸ் பான்யன் பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
உலகளாவிய பெருமை
“ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள் பன்னிரு ஆழ்வார்களில் ஒரேயொரு பெண். பக்தியின் மேன்மை, கற்பனை, இலக்கியச் செறிவு போன்ற பலவற்றிலும் ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள் தன்னிகரில்லாதவை. அவற்றின் பெருமையை உலகறியச் செய்யும் ஒரு சிறிய முயற்சியாகவே இந்தப் பாடல்களை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தேன்” என்கிறார் வசுமதி.
இதையொட்டி மும்பை அலையான்ஸ் ஃபிரான்ஸைஸ் பிரெஞ்சில் இந்த நூலின் கவிதைகளைப் படிக்கும் நிகழ்வையும், தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மூன்று மொழி சார்ந்த அறிஞர்கள் இடம்பெற்ற குழு விவாதத்தையும் நடத்தியது. மும்பைக்கான பிரெஞ்சு தூதரகத்தின் அதிகாரி சோனியா பார்பரி நூலை அறிமுகப்படுத்தி, ஆண்டாளின் பெருமைகளை பிரெஞ்சில் பேசியது நிகழ்ச்சியை நெகிழ்வாக்கியது.
பிரெஞ்சில் ஆண்டாளின் திருப்பாவை நூலைக் காண்பதற்கான லிங்க்: https://bit.ly/2FsiT9W