தஞ்சாவூர்க்கவிராயர்
கல்வெட்டுகளிலும், ஸ்தூபிகளிலும் சிலா சாசனங்களிலும் வரையப் பட்டிருக்கும் புத்தரின் வரலாறு செவிவழிக் கதைகளாகவும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட கிரந்தங்களாகவும் நீண்டகாலம் உலவிவந்தது. அச்சிட்ட புத்தக வடிவில் புத்தப் பெருமானை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சர் எட்வின் ஆர்னால்டு என்ற ஆங்கில வரலாற்று ஆசிரியர் ஆவார். அவர் எழுதிய ஆசியஜோதி (Light of Asia) என்ற புத்தகம் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை ஒருவித காவியத்தன்மையோடு விவரித்த காரணத்தால் உலகின் கவனத்தைப் பரவலாக ஈர்த்தது. இதைத் தொடர்ந்து புத்தர் பற்றிய பல்வேறு கட்டுக்கதைகளும் அதிசயச் செய்திகளும் புத்தகங்களாக வெளிவரத் தொடங்கின.
கரைந்தது காவியபிம்பம்
புராணங்களில் இடம்பெற்றிருந்த புத்தர் நடத்தியதாகக் கூறப்படும் அற்புதங்கள், நம்பமுடியாத அதிசயச் செயல்கள். இவற்றை எல்லாம் விலக்கியும் விவாதித்தும் புத்தர் பற்றிய உண்மை வரலாற்றை எழுதும் பணியைத் தர்மானந்த கோசாம்பி தொடங்கிவைத்தார். புத்தரின் பிறப்பு, துறவறம், வாழ்க்கை, உபதேசம் குறித்த உண்மைச் செய்திகள் போதிசத்துவரை உலக மக்களுக்கு அருகில் கொண்டுவந்தன.
போதி சத்துவரின் இயற்பெயர் கோதமர் என்பதற்கு உறுதியான வரலாற்றுக் குறிப்பு உள்ளது. (சுத்த பிடகம்) சித்தார்த்தர் என்பது கவியின் கற்பனைப் பெயராகும். பமிக்குள் புதைந்து போன அசோகருடைய கல் தூண் ஒன்றில் போதிசத்துவர், லும்பினி என்னும் கிராமத்தில் பிறந்ததாகக் குறிப்பு உள்ளது. போதி சத்துவரின் தந்தை சுத்தோதனர் சக்கரவர்த்தியும் அல்ல; சாக்கியர்களின் குழுத் தலைவர் ஒரு நிலச்சுவான்தார் அளவு செல்வந்தர். ஒரு நிலச்சுவான்தார் அவ்வளவே.
புத்தர் ஏன் வீட்டைத் துறந்தார்? போதிசத்துவர் உய்யாவனம் (விளையாடும் சோலை) செல்லும் வழியில் முதல்முறையாக ஒரு முதியவன், நோயாளி, பிணம் ஆகியோரைக் கண்டு விரக்தியுற்று துறவு பூண முடிவு செய்ததாகக் கூறப்படுவதும் ஒரு கட்டுக்கதையே. போதிசத்துவர் தன் தந்தைக்கு உதவியாக வயல் வேலைக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றிருந்தார்.
இவருக்கு இந்தக் காட்சிகள் புதுமையாக இருந்திருக்க வாய்ப்பில்லை. தாம் ஏன் வீட்டைத் துறந்தேன் என்பதற்கு அர்த்ததண்டஸூக்தத்தில் புத்தபகவானே காரணம் கூறுகிறார். என்னைச் சுற்றியுள்ளோர் ஆயுதம் ஏந்தி சண்டை போட்டுக்கொண்டது. இல்லம் என்பது தொல்லையும் குப்பையுமான இடம் என்று தோன்றிவிட்டது. பிறப்பு, இறப்பு, நோய் ஆகியவற்றுக்கு காரணமான அதே போன்ற பொருள்கள் மீதுபற்றை ஒழிப்பது.
புத்தர் வீட்டிலிருந்து வெளியேறினாரா?
புத்தர் வீட்டிலிருந்து யாருக்கும் அறியாது வெளியேறியதாகக் கூறப்படுவதும் ஒரு பொய்யான கூற்றே. மனைவி, மகளை விட்டு மாடியிலிருந்து நள்ளிரவில் இறங்கி சன்னன் என்ற சாரதியை எழுப்பி கந்தகம் என்ற குதிரைமீது பயணித்து அநோமா என்ற ஆற்றங்கரையில் தனது அணிகலன்களைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வாளினால் தனது கேசத்தை மழித்துக்கொண்டு துறவியானார். அவர் பிரிவைத் தாங்காமல் கந்தகம் என்ற அந்தக் குதிரை இறந்தது.
சன்னன், அணிகலன்களுடன் கபிலவஸ்துவுக்குப் போனான். இதுவும் கதையே. புத்தபிரானே தாம் வீட்டைவிட்டு வெளியேறிய கதையை அரியபரியேஸன சூத்தத்தில் கூறுகிறார்.
“நான் துறவியாக என் தாய் தந்தையர் அனுமதி கொடுக்கவில்லை. அவர்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள். நான் அவர்களின் முன்னாலேயே தலையை முண்டனம் செய்துகொண்டு துவராடைகளால் உடலை மூடியபடி வீட்டிலிருந்து வெளியேறினேன்.”
போதி சத்துவரின் புரட்சி முடிவு
கடுமையான ராஜயோகம், ஹடயோகப் பயிற்சிக்கு பிறகு போதிசத்துவர் ஒரு முடிவுக்குவந்தார். தவம்செய்வது அறவே பயனற்றது. அது இல்லாமலே முக்திபெற இயலும்.
ராகுலனுக்கு உபதேசம்
தனது மகன் ராகுலனுக்கு புத்தபிரான் கூறிய அறிவுரைகள் மனித குலத்துக்கே பொதுவானவை.
நலம்வாய்ந்த நண்பர்களுடன் பழகு. அதிக இரைச்சல் இல்லாத தனிமையான இடத்தை உன் உறைவிடமாகக் கொள். மிதமான உணவைப் புசி. துவராடை, உணவு, மருந்து, இருப்பிடம் ஆகியவற்றில் அவா கொள்ளாதே. உடலைச் சார்ந்த நினைவு கொள். வைராக்கியம் நிறைந்தவனாக இரு.காமத்தை விலக்கு. அகந்தையை விடு. அமைதிகொள்.
சங்கம் சரணம்
புத்தபிரான் தர்மத்துக்கு தந்த அதே அளவு பெருமையை சங்கத்துக்கும் தந்தார். யேசு கிறிஸ்து வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே நீங்களெல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் இளைப்பாறுதல் தருவேன் என்றார். கண்ணபிரான் எல்லாத் தர்மங்களையும் விடுத்து என்னையே சரணடை. உன்னைப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன் என்றார்.
புத்தபிரானோ நீங்கள் புத்த தர்மத்தை சரண் அடையுங்கள். சொந்த உழைப்பால் உலகோர் துயரம் களையுங்கள். ஆண்கள், பெண்கள் எல்லோரும் ஒரே சங்கமாய் ஆகி அதில் புகலடையுங்கள் என்றார்.
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
இதுவே புத்தரின் மந்திரம். பவுத்தத்தின் பறை முழக்கம்.
இறுதி அறிவுரை
பகவான் புத்தர் தனது முதன்மைச்சீடர் ஆனந்தனிடம் கூறிய இறுதி அறிவுரை உய்த்து உணரத்தக்கது. “பிட்சு சங்கத்தின் தலைவனாகத் தன்னை எண்ணுபவனே இறுதிச் செய்தியைக் கூற முடியும். நான் சங்கத்தின் தலைவன் அல்ல. ஆகவே இறுதிச் செய்தியாக நான் சொல்ல ஒன்றுமில்லை. ஆனந்தா இனி உங்களையே சார்ந்து இருங்கள். தருமத்தைத் தீவு ஆக்கிக் கொள்ளுங்கள். ஆன்மாவைத் தீவாக்கிக்கொள்ளுங்கள். தருமத்தைப் புகல் அடையுங்கள்”
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com