இளம் இசைக் கலைஞர்களுக்கும் நாட்டியக் கலைஞர்களுக்கும் மேடை அளித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் அமைப்பு ‘மெட்ராஸ் சவுண்ட்ஸ்’. இந்த அமைப்பு சார்பாக அண்மையில் ‘வாண்டரிங் ஆர்டிஸ்ட்’ அரங்கில் ரஞ்ஜனி சிவக்குமாரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஷ்ரத்தா ரவீந்திரனின் வயலினும் வினீத்தின் மிருதங்கமும் ரஞ்ஜனியின் பாட்டுக்குத் துணையாக மெல்லிசையை வழங்கியது.
மார்கழி மாதம் முழுவதும் பல்வேறு அரங்கங்களில் இசை நிகழ்ச்சிகள் நடந்தாலும், பாரதியாரின் பாடல்களை மட்டுமே கொண்டு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது சிறப்பு. நாட்டை ராகத்தில் ‘மலரின் மேவு திருவே’ பாடலைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கியதே தெய்விகமான தொடக்கமாக அமைந்திருந்தது.
நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பாகப் பாடப்படும் பாடல்களுக்குப் பொருத்தமான அபிநயங்களையும் நாட்டியத்தையும் அத்தனை சிறிய அரங்கத்தில் மிகவும் நளினமாக வெளிப்படுத்தினார் இளம் நடனமணியான சுபஸ்ரீ சசிதரன். ‘நின்னையே ரதியென்று’ பாட்டும் பரதமுமாக அரங்கேறிய விதம், அரங்கில் இருந்த குறைவான ரசிகர்களுக்கும் நிறைவான திருப்தியை அளித்தது.
வெறுமனே பாடல்களைப் பாடிச் செல்லாமல் கவி பாரதியாரின் கற்பனையில் அத்தகைய பாடல்கள் உருக்கொண்டதற்குப் புராணங்களும், அவருக்கு முன்பிருந்த படைப்பாளிகளின் படைப்புகளும் எத்தகைய செல்வாக்கைச் செலுத்தியிருக்கும் என்பதையும் விளக்கி ரஞ்ஜனி பாடிய விதம் ஒரு கருத்தரங்கத்தின் விஷய ஞானத்துடன் ஓர் இன்னிசை நிகழ்ச்சியைப் பார்த்த நிறைவை அளித்தது.