‘யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின்’ என்று ஆப்தர் மொழியைப் பெரியவாள் மேற்கோள் காட்டி உணவிடுவதில் வித்தியாஸம் பாராட்டவே கூடாது என்பார். கேரளத்தில் செருக்குன்னம் என்னும் தலத்திலுள்ள அன்னபூரணி ஆலயத்தில் ஸேவார்த்திகளுக்கெல்லாம் அன்னம் படைத்த பிறகு, இரவில் அவ்வழியே செல்லும் திருடர்களுக்காக என்றே ஒரு மரத்தில் சோற்றுப்பட்டை கட்டிவைக்கும் வழக்கமிருப்பதாகப் பல உரைகளில் உவமையுடன் கூறியிருக்கிறார்.
எதிரெதிர்க் கட்சிகளான பாண்டவப்படை, கௌரவப்படை இரண்டுக்குமே உதியன் சேரலாதன் என்ற சேர மன்னன் உணவு அனுப்பிப் பெருஞ்சோற்றுச் சேரலாதன் என்றே பெயரெடுத்ததாகச் சங்க இலக்கியங்களில் காண்கிறதென்று வெகுவாக ரசித்துக் கூறுவார்.
சிவபெருமானுக்கு வேடன் கண்ணப்பன் படையல் இட்டான். ராமபிரானுக்கு வேடன் குகன் அமுது செய்வித்தான். நம் மஹா பெரியவரோ வேடர்களுக்குத் தாமே விருந்திட்டிருக்கிறார். ஸ்ரீ சைலக் காட்டில் வாழும் செஞ்சுக்கள் என்ற வேடர்களுக்குத்தான்.
போக்குவரத்து வசதிகள் மிகக் குறைவாக இருந்த 1934-ல் பெரியவாள் தம் பரிவாரத்துடன் நிர்மாநுஷ்யமான சைல அடவிகளில் சென்று கொண்டிருந்தார். ஓரிடத்தில் செஞ்சுக் கோஷ்டியினர் எதிர்ப்பட்டனர். மடத்தினரை எதிரிகளாகவே கருதி முதலில் அவர்கள் வில்லையும் அம்பையும் சித்தம் செய்து கொண்டனர்.
ஆனால், அன்பின் மூர்த்தமான ஆசார்யப் பெருமானின் திவ்விய தேஜோமயமான தோற்றத்தைக் கண்டவுடன் அடியோடு மனம் மாறி அடிபணிந்தனர். இந்தக் கலியிலும் அன்புக்கும் தவத்துக்கும் உள்ள சக்தியை எடுத்தியம்பிய அசாதாரணமான சம்பவம்!
1924-ம் ஆண்டு காவிரியும் கொள்ளிடமும் ஒன்றுசேர்ந்து விடுமாறு திருவையாற்றுப் பகுதியில் பெருவெள்ளம் புரண்டது. அப்போது சுமார் பதினைந்து நாட்களுக்கு ஸ்ரீமடத்தின் ஆதரவில் வண்டி வண்டியாக உணவு சமைத்து ஆயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு அனுப்பப்பட்டது.
மடத்தின் தேவைகளைக் குறைத்துக் கொண்டு அந்த ஏழை மக்களுக்காக உக்கிராணத்தைக் காலி செய்தார், காவிரியுடன் போட்டி போட்டுக்கொண்டு கருணை வெள்ளம் பெருக்கிய மடாதிபர்.‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று நிதரிசனமாக உணர்ந்த பல்லாயிரம் ஏழையர் ஒரு பக்ஷ காலம் தங்களுக்கு பக்ஷமாக உணவிட்ட மகானைத் தெய்வமாகவே போற்றி வழிபட்டனர்.
மஹா பெரியவாள் விருந்து
ரா. கணபதி
வித்யுத் பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ. 200/-
தொடர்புக்கு :
044- 22654210