ஆனந்த ஜோதி

ஆங்கிலப் புத்தாண்டு 2020 பொதுப் பலன்: கடகம்

செய்திப்பிரிவு

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

கடக ராசி வாசகர்களே

கள்ளம் கபடமற்ற பேச்சால் கவர்பவர்களே! உங்களுக்கு 8-ம் ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். அவ்வப்போது பணப்பற்றாக்குறையும் வரும். என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களையெல்லாம் வெளியில் சொல்லி ஆறுதல் தேட வேண்டாம்.

26.12.2020 வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டிலேயே பலம் பெற்று நீடிப்பதால் பிரச்சினைகள் எதுவானாலும் அவற்றை யெல்லாம் சமாளிக்கக்கூடிய மனோபலம் உங்களுக்குக் கிடைக்கும். முடங்கியிருந்த நீங்கள், இனி முன்னேற்றப்பாதையை நோக்கி பயணிப்பீர்கள். கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். வீண் சந்தேகம் விலகும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.11.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் பழி, ஏமாற்றம், அலைச்சல், படபடப்பு, வேலைச்சுமை, செரிமானக் கோளாறு என வந்து நீங்கும். உள்மனத்தில் ஒருவிதப் போராட்டம் எழும்பும். பூர்விகச் சொத்து சம்பந்தமாக வழக்குகளைத் தவிருங்கள். என்னதான் திட்டமிட்டுச் செயல்பட்டாலும் அந்தக் காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்துதான் முடிக்க வேண்டி வரும். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிப்பீர்கள். தங்க ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களைக் கவனமாகக் கையாளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். ஆனால், நவம்பர் 13-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நுழைவதால் திடீர்த் திருப்பங்கள் உண்டாகும். சோர்ந்து கிடந்த நீங்கள் உற்சாகமாவீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். பாதியிலேயே நின்றுபோன வேலைகள் முழுமையடையும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனிக் கோலாகலமாக நடக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம், ஈகோ சார்ந்த பிரச்சினைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும்.

வருடம் பிறக்கும்போது 6-ம் வீட்டில் கேதுவும், 12-ம் வீட்டில் ராகுவும் அமர்ந்திருப்பதால் வெளிநாட்டுப் பயணம், வேற்று மதத்தினரால் உதவி எல்லாம் உண்டு. பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார் என்பதை உணருவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். செப்டம்பர் மாதம் முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் கேதுவும், 11-ம் வீட்டில் ராகுவும் நுழைவதால் உங்களின் செயல்களில் தெளிவு பிறக்கும். எதையும் முதல் முயற்சியில் முடித்துவிட வேண்டுமென்பதில் கவனமாக இருப்பீர்கள்.

பிள்ளைகளால் கொஞ்சம் அலைச்சல் வந்துபோகும். ஆன்மிகவாதிகள், சித்தர்களின் ஆசி கிட்டும். இளைய சகோதரர் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார். அரசாங்க வேலைகளில் வெற்றியுண்டு. 05.5.2020 முதல் 19.6.2020 வரை உள்ள காலகட்டத்தில் செவ்வாய் 8-ம் வீட்டில் மறைவதால் இக்காலக்கட்டத்தில் சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்பு, ஏமாற்றங்கள் வந்து நீங்கும். இந்தப் புத்தாண்டு அதிரடி முன்னேற்றங்களையும், செல் வாக்கையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

புற்றுடன் அருள்பாலிக்கும் அம்மன் கோவிலிலுள்ள அம்பாளைத் திங்கள்கிழமைகளில் ராகுகாலத்தில் எலுமிச்சை பழம் தந்து வணங்குங்கள். தயிர்ச்சோறு கொடுங்கள். நிம்மதி பெருகும்.

SCROLL FOR NEXT