ஆனந்த ஜோதி

உட்பொருள் அறிவோம் 40: இங்கே தொடர்வது எது?

செய்திப்பிரிவு

சிந்துகுமாரன்

சில கேள்விகள் காலங்காலமாக மனித மனத்தில் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. ஒவ்வொரு தலைமுறையும் இந்தக் கேள்விகள் குறித்துத் தொடர்ந்து சிந்தித்துக்கொண்டு வருகின்றன. மறுபிறவி உண்டா? வினைப்பயன் இருக்கிறதா? பிறவிகளில் ஏதேனும் தொடர்ச்சி இருக்கிறதா? இருக்கிறது என்றால் எது தொடர்கிறது?
இது பற்றிப் பல கருத்துக்களும் நம்பிக்கைகளும் தொடர்ந்து வந்திருக்கின்றன. நமக்குப் புரியாத பல நிகழ்வுகளுக்கு இந்த நம்பிக்கைகளைக் காரணமாகக் காட்டி வருகிறோம். நம் தவறுகளால் விளைந்த துன்பங்களுக்குக் கூட முன்ஜென்ம வினை என்று சொல்லிவிடுகிறோம்.

இதைப் பற்றிய தெளிவு நமக்குச் சிறிதும் இல்லை. நம் மனத்தில் இருக்கும் பல பொய்க்கருத்துக்களுக்கு இம்மாதிரியான நம்பிக்கைகளை ஆதாரமாகக் கூடக் காட்டுகிறோம். இது வாழ்க்கை பற்றிய ஆழமான புரிதலுக்குப் பெரும் தடையாக இருக்கின்றன.

மறுபுறம் பகுத்தறிவு இந்த விஷயங்களை ஆழமான விசாரணை ஏதுமில்லாமல் ஒரேயடியாக நிராகரித்துவிடுகிறது. காலம் காலமாக இருந்துவரும் மிகவும் ஆழமான நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அதனால் இதைப் புரிந்துகொள்வது மிகவும் சிக்கலாகப் போயிருக்கிறது. பல தலைமுறைகளாக இந்த நம்பிக்கைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுக் கெட்டிப்பட்டுப் போயிருக்கின்றன. அதனால் அடிப்படையான நம்பிக்கைகளை முதலில் விசாரணை செய்து பார்ப்போம்.

மறுபிறவி உண்டா

தனி நபர்கள் என்று எதுவும் உண்மையில் கிடையாது என்று ஞானியர் அனைவரும் மிகத் தெளிவாகத் தொடர்ந்து சொல்லிவந்திருக்கிறார்கள். ஒரு ஞானியிடம் ஒருவர், `மறுபிறவி உண்டா?` என்று கேட்டதற்கு அந்த ஞானி, `யாருக்கு?` என்று திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால் இந்தக் கருத்தை நாம் முக்கியத்துவம் கொடுத்துப் பார்ப்பதில்லை. ஆனால் அதே சமயம் ஏதோ ஒன்று மீண்டும் மீண்டும் தொடர்ந்து பிறவியெடுக்கிறது என்றும் ஞானியர் சொல்லியிருக்கிறார்கள்.

தனி நபர்கள் கிடையாது, ஆனால் ஏதோ ஒன்று பிறவியெடுக்கிறது, என்றால் இதை எவ்வாறு புரிந்துகொள்வது? இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றையொன்று மறுப்பதைப் போலிருக்கின்றனவே! பிரபஞ்சம் பற்றியும் வாழ்வனுபவத்தைப் பற்றியும் நாம் கொண்டுள்ள அடிப்படைக் கருத்துக்களையே கேள்விக்குட்படுத்தியாக வேண்டும். அப்போதுதான் இந்த விஷயங்களைப் பற்றிய தெளிவு வரமுடியும்.

முதலில் நாம் யாரும் இல்லாவிட்டாலும் கூடப் பிரபஞ்சம் இருக்கும் என்று நம்புகிறோம். பிரபஞ்சமோ அல்லது ஒரு சிறு பொருளோ கூட யாருடைய பிரக்ஞையிலோதான் இருக்க முடியும். யாருமே பார்க்காத பொருள் என்று எதுவும் இல்லை. ஒரு கல் இருக்கிறது என்றால் அது யாரோ ஒருவருடைய உணர்வுநிலையில் ஒரு கணமாவது இருக்கவேண்டும். அப்போதுதான் அதற்கு ‘இருப்பு’ (Existence) உண்டு. காலமும் இடமும் பிரக்ஞையில்தான் இருக்கின்றன. காலமும் இடமும் இல்லாமல் இருப்பு கிடையாது; பிரபஞ்சம் கிடையாது.

நான் உணர்வு

மனிதஜீவனுக்கும் பிரபஞ்சத்துக்கும் மூன்று தளங்கள் இருப்பதாகப் பார்க்கலாம்: உடல், மனம், உயிருணர்வு இம்மூன்றும்தான். மனித உடல் - சொல்லப்போனால் அனைத்து ஜீவன்களின் உடல்களும் - பௌதிகப் பிரபஞ்சத்தின் அங்கம்தான். அனைத்து மனங்களும் பிரபஞ்ச மனத்தின் அம்சங்களே. மனிதனுக்குச் சுயவுணர்வு இருக்கிறது. அதனால் மனம் இருக்கிறது. மிருகங்களுக்கும் மற்ற ஜந்துக்களுக்கும் மனம் இயல்பூக்கங்களாக(Instincts)ச் செயல்படுகிறது. மனிதனிடம் உயிருணர்வு, அறிவுணர்வாக(Awareness) இயங்குகிறது.

தனிமனித ஜீவனுக்குள் மனமும் ‘நான்’ என்ற சுயவுணர்வும் இருப்பது போலவே, முழுப் பிரபஞ்சத்துக்கும் பௌதிகப் பிரபஞ்சம் உடலாக இருக்கிறது. பிரபஞ்சத்துக்கும் நினைவு இருக்கிறது. ஒரு மனிதக் குழந்தை பிறக்கும்போதே மனிதனாக இயங்குவதற்கான நினைவுக்கூறுகளுடன்தான் பிறக்கிறது. பிரபஞ்ச நினைவு பிரபஞ்சப் பெருமனத்தில் இருக்கிறது. நமக்கு ‘நான்’ என்னும் உயிருணர்வு இருப்பது போல் பிரபஞ்சத்துக்கு ‘நான்’ உணர்வு இருக்கிறது. பிரபஞ்சப் பிரக்ஞையாக அது இருந்து இயங்குகிறது.

பிரபஞ்சம் ஒவ்வொரு கணமும் நம்மைப் போலவே அனுபவம் கொள்கிறது. அதன் பெருமனத்தில் அனுபவம் நினைவாகப் பதிவு கொள்கிறது. பிரபஞ்ச ‘நான்’, பரிணாம இயக்கத்துக்கு வெளியே காலம்-இடமற்று நிலைத்திருந்தாலும் பிரபஞ்ச மனமும் பௌதிகப் பிரபஞ்சமும் பரிணாம இயக்கத்தினுள்தான் அடங்குகின்றன.
பெருமனம் மெல்ல தனக்குத் தானே விழித்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. தன்னை ‘நான்’ என்று அது உணரத் தொடங்கியிருக்கிறது.

இதுதான் பரிணாம வளர்ச்சி. தனிமனித மனங்களில் படிவங்கள்(Patterns) இருப்பது போலவே பெருமனத்திலும் இருக்கின்றன. உண்மையில் சொல்லப் போனால் பெருமனத்தின் படிவங்களைத்தான் தனிமனிதப் பிரக்ஞையில் நாம் அனுபவம் கொள்கிறோம். அதாவது பெருமனத்தின் படிவங்கள், தனி மனிதர்கள் என்ற உருவத்தில் வெளிப்படுகின்றன.

(அடுத்த வாரம் தொடர்வோம்)
கட்டுரையாளர்,
தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com

SCROLL FOR NEXT