உஷாதேவி
சின்னஞ்சிறு அணில்களும் ராமனுக்கு கைங்கரியம் செய்து பெருமை பெற்றன. தொண்டரடிப் பொடியாழ்வார் அருளிச் செய்த திருமாலையில் குரங்குகள் மலையை நூக்கக்குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடி. தரங்கநீர் அடைக்கலுற்ற சலமிலா அணிலும் போலேன்.
- என்று குறிப்பிட்டுள்ளார்.
ராமர் இலங்கை சென்று சீதையை மீட்க, குரங்குப் பட்டாளம் அனுமன் தலைமையில் பாலம் அமைத்தன. ஆஞ்சநேயர் ராம என கல்லில் எழுதி கொடுக்க அனைத்து கற்களும் பாலமாக மிதந்தன. மலை போன்ற கற்களைக் கொண்டு குரங்குகள் பாலம் அமைப்பதைப் பார்த்த அணில்களும் கடலில் சென்று குளித்து பின்னர் மணலில் புரண்டு வந்து கற்களின் இடையில் மணலை உதறி மீண்டும் கடலில் குளித்து மணலில் புரண்டு பாலத்தில் மணலை உதிர்த்து ராமர் பாலம் கட்டுவதற்கு உதவின.
இதனை கண்ட ராமர், ஒரு அணிலை தூக்கி தன் விரல்களால் வருடினார் அந்த வரிகளே அனைத்து அணில்களின் முதுகிலும் மூன்று கோடுகளாகப் பதிந்தன. அணில்கள் கடலில் குளித்தால் தண்ணீர் குறைந்து சமுத்திரம் வற்றிப் போகும் என நினைத்தன.
கற்பாலத்தில் ராமனின் கால் பதித்தால் உருத்துமே எனவும் மணலை பாதங்களுக்கு மெத்தென்று இருக்கக் கொட்டின. இது ராமர் மேல் உள்ள அளவு கடந்த அன்பையும் அவற்றின் பக்தியையும் எடுத்துக்காட்டுகிறது. அணில்கள் போல் இறைவனுக்காக நான் உதவவில்லையே சுவாமி என்று வருந்துகிறாள் நம் திருக்கோளுர் பெண் பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர்,
தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com