டேவிட் பொன்னுசாமி
நவீன இந்திய சரித்திரத்தில் ஒரு பெண் என்ன சாதனைகளை நிகழ்த்த முடியும் என்பதற்கு பண்டித ரமாபாய் ஒரு சாட்சி. ஒரு வறிய குடும்பத்தில் பிறந்த ரமாபாய், கிறிஸ்துவின் அருளால் அனைத்தையும் பெற்றவர். ஏழைகளுக்கும் சுரண்டப்பட்ட மக்களுக்கும் ஆதரவாக எல்லாமுமாக ஆனவர். இந்தியாவின் மகத்தான மகள் என்று சரோஜினி நாயுடு அவரை அழைத்தார்.
மைசூரு மாவட்டத்தில் தெற்கு கனராவில் 1858-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி பிறந்தார். ஏழை நாடோடி வாழ்க்கையை வாழ்ந்த அவருடைய பெற்றோரால் அவரைப் படிக்க வைக்க இயலவில்லை. சாஸ்திரி லக்ஷ்மிபாய் என்ற சம்ஸ்கிருத அறிஞர், ரமாபாய்க்கு மொழியைப் போதித்தார். ரமாபாய் சம்ஸ்கிருதத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கினார். வாசிப்பில் ஆர்வம் கொண்ட அவர் ஹீப்ரூ, கிரேக்கம், ஆங்கிலத்தையும் கற்றார்.
தென்னிந்தியாவை உலுக்கிய பஞ்சம் 1876-ல் வந்தபோது வறுமையால் ரமாபாய் தனது பெற்றோரையும் சகோதரியையும் இழந்தார். ரமாபாயும் அவருடைய சகோதரனும் மட்டுமே மிஞ்சினார்கள். ஒருவழியாக கல்கத்தாவை வந்தடைந்தார். ரமாபாயின் சம்ஸ்கிருதப் புலமையை அறிந்த பிராமண அறிஞர்கள் அவருக்கு ‘பண்டிதர்’ பட்டத்தை வழங்கியதோடு, அவருடைய உரைகளுக்கும் ஏற்பாடு செய்தனர்.
ஏசுவின் குரல் கேட்டது
1880-ம் ஆண்டில் புனித லூக்காவின் நற்செய்திப் பிரசுரம் ஒன்று கிறிஸ்தவப் பிரார்த்தனைக் கூட்டத்தில் ரமாபாயிடம் தரப்பட்டது. அவருக்கு அந்த எழுத்துகள் பெரும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் அளித்தன. கிறிஸ்துவின் குரலை அவர் கேட்டார். இப்படியான சூழ்நிலையில் சமூக சீர்திருத்தக் கருத்துகளில் ஒத்தகருத்து கொண்ட சகிருதயரான பாபு பிபின் பிகாரிதாசைச் சந்தித்து திருமணம் செய்தார்.
பாபு பிபினின் வீட்டிலிருந்த புதிய ஏற்பாடு நூல் ரமாபாயிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரமாபாய்க்கும் பாபு பிபினுக்கும் மனோரமா என்ற பெண்குழந்தை பிறந்தாள். இந்நிலையில் கொள்ளை நோயாகத் தாக்கிய காலராவுக்கு தனது இனிய கணவரை ரமாபாய் பறிகொடுத்தார். துயரம் சூழ்ந்த நிலையில், சமூக நலத்துக்காக தனது வாழ்வை முற்றிலும் அர்ப்பணிப்பதற்குச் சித்தமானார்.
பெண்கள் மேம்பாடு, ஏழைகளுக்கு உதவி செய்வதற்கான சமூகப் பணிகளில் கல்வியின் அத்தியாவசியத்தை ரமாபாய் உணர்ந்தார். இந்நிலையில் தனது மகளை அழைத்துக் கொண்டு இங்கிலாந்துக்கு மேற்கல்வி படிக்கச் சென்றார். 1888-ல் இந்தியா திரும்பிய ரமா பாய்க்கு வேதாகமத்தின் மூலம் சில உண்மைகளை புனித ஆவி வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் அவரது கனவுகள் ஒவ்வொன்றாக நனவாகத் தொடங்கின. ஆதரவற்ற விதவைகள், தேவதாசிகளுக்கு ‘முக்தி மிஷன்’ என்னும் அமைப்பைத் தொடங்கினார். மும்பையில் ‘சாரதா சதனம்’ என்ற பெயரில் பெண்கள் கல்வி மையத்தை ஏற்படுத்தினார்.
1922-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி ரமாபாய் மறைந்தார். ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட துண்டறிக்கை வாயிலாக ஏசுவுக்கு அறிமுகமானார். வேதாகமத்தைப் படித்தபோது அவர் ஏசுவை அறிந்து கொண்டார். அவருடைய பாதத்தில் சரணடைந்து தனது சேவைகளைச் செய்யத் தொடங்கியபோது அவர் ஏசுவின் புத்திரியாக மாறினார்.