ஆனந்த ஜோதி

முல்லா கதைகள்: எனக்குத்தான் தெரியும்

செய்திப்பிரிவு

முல்லாவின் மாமியார் ஆற்றில் விழுந்துவிட்டதாக ஊர்க்காரர்கள் அவரிடம் ஓடிவந்து தெரிவித்தனர். ‘வேகமாக நீரோட்டம் இருப்பதால், அவர் கடலுக்கு அடித்துச்செல்லப்படலாம்’ என்று ஊர்க்காரர்கள் கத்தினர்.

ஒரு நொடிக் கூடத் தயங்காமல் ஆற்றில் குதித்த முல்லா, எதிர்ப் புறமாக நீச்சலடிக்கத் தொடங்கினார்.‘இல்லை! இங்கிருந்து ஆற்றின் ஓட்டத்தில்தான் அவர் அடித்துச்செல்லப்பட்டிருப்பார்,’ என்றனர் ஊர்மக்கள்.
‘இங்கே பாருங்கள்! என் மனைவியின் தாயாரைப் பற்றி எனக்குத் தெரியும். எல்லோரும் நீரோட்டத்தில் செல்வார்கள் என்றால், அவர் அதற்கு எதிராகத் தான் போவார்’ என்றார் முல்லா.

சூடான சூப்

முல்லாவின் மீது மிகக் கோபமாக இருந்தார் அவருடைய மனைவி. அதனால், அவருக்குச் சுடச் சுட சூப்பைக் கொடுத்து அவர் வாயைப் புண்ணாக்க நினைத்தார். ஆனால், சூப்பைத் தயாரித்து கொண்டுவந்து மேசைமீது வைத்தவுடன் தனது திட்டத்தையே மறந்து, ஒரு கரண்டியை எடுத்து குடித்துவிட்டார் முல்லாவின் மனைவி. சூடு தாங்காமல் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. ஆனால், அப்போதும் தன் திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை.

‘ஏன் அழுது கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார் முல்லா.
‘பாவம், என் தாயார், இறப்பதற்குச் சற்றுமுன் இதுபோன்றதொரு சூப்பைத்தான் அவர் குடித்தார். அந்த ஞாபகம் என்னை அழவைத்துவிட்டது’ என்றார் அவர் மனைவி. முல்லா, சூப்பை எடுத்துக் குடித்தார்.

அவருக்கும் வாயெல்லாம் வெந்துபோனது. அவர் கண்களிலிருந்தும் உடனடியாகக் கண்ணீர் வரத் தொடங்கியது.
‘நீங்கள் அழுகிறீர்களா, என்ன?’ என்று கேட்டார் முல்லாவின் மனைவி.

‘ஆமாம், உன்னை உயிருடன் விட்டுவிட்டு, பாவம், உன் தாயார் இறந்துபோய்விட்டாரே என்று நினைத்து அழுகிறேன்’ என்றார் முல்லா.

- யாழினி

SCROLL FOR NEXT