சு.கோமதிவிநாயகம்
வேல் என்பது சக்தி வடிவானது. வேலை மட்டுமே மூலவராகக் கொண்டு கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் கோயிலில் வழிபாடு நடந்து வருகிறது. கோவில்பட்டியைச் சேர்ந்த வணிகர்கள் சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வணிகம் செய்து வந்தனர்.
அவர்களுக்கு கண்டி கதிர்காமரே இஷ்ட தெய்வமாக இருந்தது. வணிகர்கள் கதிர்காம முருகன் கோயிலில் உள்ள வேலை வழிபட்டு வந்தனர். வணிகம் முடிந்து ஊர் திரும்பும் நேரம் வந்தபோது, கதிர்காமத்து முருகா இனி எப்போதும் உன்னைக் காணும் வரம் வேண்டும் என மனமுருகி வேண்டினர்.
அப்போது அவர்களில் ஒருவர் கனவில் தோன்றிய முருகன், கதிர்காமத்தில் இருந்து பிடிமண் எடுத்துச் சென்று அங்குள்ள மலைக்குன்றில் மூலவராக, எனது வேலை வைத்து வழிபடு. உங்களின் கவலைகளை நான் அகற்றுவேன் என்று அருளினார்.
ஆச்சரியமும், ஆனந்தமும் கலந்த முகத்துடன் எழுந்த அந்த வணிகர், மற்றவர்களிடம் இதை கூற, அவர்களும் மகிழ்ச்சியுடன் பிடி மண் எடுத்துக்கொண்டு கோவில்பட்டி திரும்பினர். அவர்கள் கோவில் பட்டியில் உள்ள சொர்ணமலை கதிரேசன் மலையில் பிடி மண்ணை வைத்து, அங்கு செம்பினால் செய்யப்பட்ட வேலை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.
பின்னர் சிறிய அளவில் கோயில் எழுப்பினர். இத்திருக்கோயில் கோவில்பட்டி திருத்தலத்தின் தென்மேற்கு மூலையில் அமைய பெற்றுள்ளது. காலப்போக்கில் இங்கே ஆறடி உயரத்தில் ஐம்பொன்னாலான கதிர்வேல்முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணிக்க விநாயகர், தண்டாயுதபாணி, கால பைரவருக்குத் தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மூன்று கோபுரங்களும், இரு சாலைக்கோபுரங்களும் அமைக்கப்பட்டு, கடந்த 2006-ம் ஆண்டு பங்குனி 3-ம் தேதி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கதிர்வேல் முருகன் வேல் வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
சொர்ணமலை கதிரேசன் மலை கிரிவலப்பாதையில் ஒளி குகை என்றழைக்கப்படும் புலிக்குகை உள்ளது. சுற்றுலா வரும் பக்தர்கள் குகையையும் பார்வையிட தவறுவதில்லை.
வீரவேல் - காமம், வெற்றிவேல் - குரோதம், ஞானவேல் - லோபம், வைரவேல் - கோபம், சக்திவேல் - மதம், சந்தான வேல் - மாச்சரியம் என ஆறு வேல்களும் ஆறு கெட்ட குணங்களை அகற்றும். இந்த ஆறு வேலும் சேர்ந்து ஓரே வேலாக சொர்ணமலை கதிரேசன் முருகன் கோயிலில் ஆறு அடி உயரத்தில் குடிக்கொண்டள்ளது. இந்த வேலை வணங்கினால் ஆன்மாவுக்கு ஞான ஒளி தெரியும்.