தஞ்சாவூர்க்கவிராயர்
மகான்கள் என்றாலே எந்தச் செயலிலும் ஈடுபடாமல் தனி இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்பவர்கள் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எத்தனையோ ஆன்மிகப் பெரியவர்கள் மக்களோடு மக்களாக நடமாடியிருக்கிறார்கள். நாம் மிகச் சிறிய விஷயங்கள் என்று அலட்சியப்படுத்தும் அன்றாடப் பணிகளைச் செம்மையுடன் செய்து, அவையும் ஆன்மிகச் செயற்பாடுகளே என்று உணர்த்தியிருக்கிறார்கள். உபதேசங்களை விடுத்து ஏழைகளுக்கும் உதவி தேவைப்படு கிறவர்களுக்கும் தங்களின் உடல் உழைப்பை நல்கியிருக்கிறார்கள்.
பகவான் ரமணர் ஆசிரமச் சமையலறைக்கு வந்து சமையல் வேலை செய்யும் பெண்களுக்கு காய்கறி முதலியன நறுக்கிக் கொடுத்து உதவுவது உண்டு. அப்பளமும் இட்டுத் தருவார். “என்ன ஸ்வாமி லெளகீக காரியங்களில் இறங்கி விட்டீர்கள் போலிருக்கே” என்று அன்பர் ஒருவர் கேட்டதற்கு இறைவன் மீது அப்பளப்பாட்டு என்று ஒரு பாடலையே பாடிவிட்டார் பகவான்.
கண்ணனோ இவன்
கும்பகோணத்தையடுத்த குடமுருட்டி ஆற்றின் கரையில் உள்ள நாகரசம் பேட்டை என்ற சிற்றூரில் வாழ்ந்த மகான் காரைச் சித்தர். இதுபோன்ற உதவிகளைச் செய்து ஏழை எளிய மக்களின் மனதில் இடம்பிடித்தார். பெற்றோர் இட்டபெயர் ராகவையங்கார். இவரோ பூணூலைத் துறந்து மதச்சின்னங்கள் ஏதுமின்றி வேட்டியும் வெற்றுடம்பும் முண்டாசுமாக ஒரு குடியானவரைப் போலக் காட்சியளித்தார். கையில் எப்போதும் ஒரு கம்பு இருக்கும்.
கட்டுமஸ்தான உடம்பு, தண்டாலும், குஸ்தியும், சிலம்பும் பயின்று முறுக்கேறிய கைகால்கள்; பயில்வானைப் போன்ற தோற்றத் துடன் கிராமத்தில் சுற்றித் திரிந்த அந்த இளைஞன் யாரும் கேட்காமலே பிறருக்கு உதவ ஒடோடி வருவான்.அப்போதெல்லாம் அவனது அகன்ற பெரிய கண்களில் சுடர்விடும். தெய்விக ஒளியைக் கண்டு நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய் என்று பாரதி பாடிய ‘கண்ணன் என் சேவகன்’ பாட்டில் வரும் கண்ணனோ இவன் என்று ஊரார் வியந்தனர்.
ஒருமுறை நண்பர்களோடு வண்டி கட்டிக்கொண்டு பக்கத்து ஊர் திருவிழாவுக்குப் பயணம் சென்றபோது, போகிற வழியில் சவரத்தொழில் செய்யும் ஒருவர் தன்வீட்டு தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்கு கஷ்டப்படுவதைப் பார்த்தார். சட்டென்று வண்டியிலிருந்து குதித்து நீங்கள் போய்வாருங்கள் எனக்கு இங்கே வேலை இருக்கிறது என்று கூறிவிட்டார். தென்னை மரத்தில் விடுவிடுவென்று ஏறி தேங்காய் பறித்துப் போட ஆரம்பித்துவிட்டார். ஏழைக் குடியான மக்களுக்கு விறகு வெட்டிக்கொடுப்பார். குடிசை கட்டுவதற்கு உதவுவார். வயல் வேலைகள் செய்வார்.
ஆசார சீலரான தந்தைக்கு மகனின் போக்கு கட்டோடு பிடிக்கவில்லை. குடும்பத்தாரின் கண்டிப்பை அடுத்து, பனிரெண்டு வயதில் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டான். ஞானத் தேடல் தொடங்கிவிட்டது. இமயமலைவரை சென்றான். பிறகு தெற்கே திரும்பி திருப்பதி மலைக்காட்டுக்குள் ஓராண்டு அலைந்து திரிந்தான். தேடலே குறிக்கோளாய் கொண்டு விட்டபின் திசைகள் எதற்கு?
ஊர்சுற்றும் ஆவல்
மீண்டும் நாகரசம் பேட்டைக்கு வந்த பையனுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இரு குழந்தைகள் பிறந்தும் ஆன்மிகத் தேடல் அவரை விடவில்லை. பழையபடி ஊர் சுற்றும் பைத்தியம் பிடித்துக் கொண்டது. இம்முறை மலேயா, இலங்கை முதலிய நாடுகளில் அலைந்து திரிந்துவிட்டு இந்தியா திரும்பினார். சிறிது காலம் காந்தி அடிகளின் வார்தா ஆசிரமத்தில் தங்கினார். அங்கும் இருப்புக் கொள்ளவில்லை.
கடைசியாக இமைய மலையில் லக்ஷ்மண் ஜ்வாலா என்ற இடத்தில் தனது குருவைக் கண்டடைந்தார். அவரிடம் தீட்சைபெற்றார்.சித்தராக ஊர் திரும்பினார். அவரிடம் தென்பட்ட மாற்றங்களைக் கண்டு காரைச் சித்தர் என்று அவரை வணங்கலாயினர். காரைச் சித்தரிடம் பெரிதும் மனம் பறிகொடுத்த உள்ளூர் மிராசுதார்அவருக்கு தன் சொத்து முழுவதையும் எழுதிவைத்துவிட்டுக் காலமானார். காரைச் சித்தரோஅந்த சொத்துக்களை மிராசுதாரரின் வாரிசுகளுக்கே திரும்பக் கொடுத்துவிட்டார்.
குடமுருட்டி ஆற்றங்கரையில் ஆயிரக்கால் மண்டபம்போல் பிரம்மாண்ட ஆலமரம். வானத்தை மறைக்கும் கிளைகள், மரத்தின் கீழ் மணல்மேடு.சுற்றிலும் படுகை, வாய்க்கால், வயற்காடு. ஆலமரம் தவிரஅந்த வெட்டவெளியில் வேறு மரம் இல்லை. உள்ளுணர்வின் உந்தலால் ஆல மரத்தடியில் புதைந்திருந்த ஆஞ்சநேயர் சிலையை மீட்டு அனுமனுக்கு தினம்தோறும் அமுது படைத்த பாகசாலை கட்டினார் காரைச்சித்தர். சாந்த சொரூபியாய் ஆலமரத்தடியில் வீற்றிருக்கும் அனுமன் என்பதால் அப்பகுதிக்கு சாந்தவெளி என்றே அழைக்கப்பட லாயிற்று.
காரைச் சித்தரின் ‘கனகவைப்பு’ என்ற பாடல் தொகுப்பில் “எத்தனைதான் இருந்தாலும் என்னே என்னே! இருக்குமிடம் இருப்பிடமாய் இல்லை என்றால்” என்ற வரி மின்னுகிறது. காரைச் சித்தர் சாந்தவெளியையே இருப்பிடமாய்க் கொண்டார். ஆம் இருக்குமிடத்தை இருப்பிடமாய் மாற்றிக்கொண்டவர் காரைச் சித்தர். அதனால்தான் 46 வயதில் அவர் மறைந்துவிட்டாலும், இன்னும் அவர் அங்கு இருப்பதாகவே எண்ணி மக்கள் வழிபடுகின்றனர்.
(தேடல் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com