பதின்மூன்று வயதிலேயே கிறிஸ்துவின் போதனைகளைப் பரப்பத் தொடங்கிய ஜான் சங், சீனாவில் புஜியான் மாகாணத்தில் 1901-ல் பிறந்தவர். அவரது தந்தை மெத்தடிஸ்ட் திருச்சபையில் பாதிரியாராக இருந்தவர். தனது தகப்பனாரின் தாக்கத்தால் பிரார்த்தனைக் கூட்டத்தில் சிறுவயதிலிருந்தே உரைகளை ஆற்றத் தொடங்கிய ஜான், படிப்பிலும் சிறப்பாகத் திகழ்ந்தார்.
மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றபோது, அன்றாடம் வாசிக்கும் வேதாகமத்தையும் பிரார்த்தனைகளையும் மறந்தே போனார். வேதியியல் உதவிப் பேராசிரியராக சிறிது காலம் பணியாற்றிய அவர், தனது சிறுவயதில் ஏற்பட்ட கிறிஸ்துவின் மீதான நாட்டத்தை, யூனியன் தியாலஜிகல் செமினரியில் சேர்ந்து இறையியலைக் கற்றதன் மூலம் திரும்பக் கைப்பிடித்தார். அங்கு சர்வ சமயப் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தார்.
இந்தக் காலகட்டத்தில்தான் அவர் மிகுந்த ஆன்ம வேதனையையும் குற்றவுணர்வையும் அனுபவித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வாரம்தோறும் நடந்த நற்செய்திக் கூட்டங்களுக்கு ஜான் சங் செல்லத் தொடங்கினார். தான் செய்ய இருக்கும் திருச்சபைப் பணியின் 15 ஆண்டுகளை மூன்று கட்டங்களாகப் பிரித்துக்கொண்டார். தண்ணீர், கதவு, புறா, ரத்தம், கல்லறை என ஐந்து பருவங்களாகப் பிரித்தார்.
‘தண்ணீர்’ பருவத்தில் சீனாவுக்கு அவர் திரும்பி வந்தார். ‘கதவு’ பருவத்தில் சீனாவின் தேவாலயங்கள் அனைத்தும் அவருடைய போதனைகளுக்காகத் திறந்தன. ‘புறா’ பருவத்தில் அவரது போதனைகளைக் கேட்டவர்கள் மீது புனித ஆவி இறங்கி ஆசிர்வதித்த பருவமாகும். ‘ரத்த’ பருவத்தில் சீனாவின் மீது ஜப்பான் படையினர் ஆக்கிரமிப்பு செய்து ஒடுக்குமுறைகளைச் செய்த காலகட்டமாகும். ‘கல்லறை’ பருவத்தில் மருத்துவமனையில் ஜான் அடைபட்டு பல வாதைகளை அனுபவித்த காலகட்டமாகும்.
கர்த்தர் சிலுவையில் ஏற்றப்பட் போது, முள்மகுடம் சூட்டப்பட்டது போல, அவரை காசநோயும் பவுத்திரத் தொந்தரவும் சித்திரவதை செய்தது. “எனது உடல் அழுகி நாறுகிறது. ஆனால் எனது உதடுகள் நலமாகவே உள்ளன. என்னால் கடவுளின் மகிமையைக் கூற முடிகிறது” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
தனது 43 வயதில் மறைந்த ஜான் சங்-ன் கடைசிச் செய்தி இதுதான். ‘ஏன் அச்சப்பட வேண்டும். தேவனாகிய ஏசு வாசலில் நிற்கிறார். பயப்படுவதற்கு என்ன இருக்கிறது’
- டேவிட் பொன்னுசாமி