ஒரு நாள், போதிதர்மர் தெருவில் நடந்துசென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கிளி அவரை அழைத்தது. அந்தக் கிளி அவரிடம் பேசியது:
“மனம் மேற்கிலிருந்து வருகிறது
மனம் மேற்கிலிருந்து வருகிறது
இந்தக் கூண்டிலிருந்து தப்பிப்பதற்கான வழியை அன்புகூர்ந்து சொல்லுங்கள்”
‘நான் மக்களைக் காப்பாற்றுவதற்காக இங்கே வந்தேன். ஆனால், அது நடக்கவில்லை. குறைந்தபட்சம் இந்தக் கிளியையாவது காப்பாற்றுகிறேன்’ என்று நினைத்தார் போதிதர்மர்.
கூண்டிலிருந்து வெளியே வர
இரண்டு கால்களை சேர்த்துவைத்துக் கொள்
கண்களை இறுக்கமாக மூடு
அதுதான் கூண்டிலிருந்து வெளியேறும் வழி.
கிளிக்குப் புரிந்துவிட்டது. அது இறந்ததுபோல் நடித்தது. கால்களை சேர்த்து, கண்களை இறுக்க மூடிக்கொண்டது. அசையவே இல்லை. மூச்சும்விடவில்லை. கிளியின் சொந்தக்காரர், கிளியைப் பார்த்தவுடன் எடுத்துப் பார்த்தார். கிளியை வலதுபுறமும், இடதுபுறமும் அசைத்துப் பார்த்தார். அது இறந்துவிட்டது என்று நம்பினார். ஆனால், அதன் உடல் மட்டும் சூடாக இருந்தது. அது மூச்சுவிடவில்லை.
அதனால், கிளியின் சொந்தகாரர் தன் கைகளை விரித்தார். அந்தக் கணத்தில் கிளி எழுந்துகொண்டது. அது உடனடியாகப் பறந்துசென்று கூண்டைவிட்டு தப்பித்தது. தியானம் செய்பவர் உலகத்தின்முன் இறந்துபோய்விட்டது போல் நடிக்கிறார். மரியாதை, செல்வம், பணி, உயர்வு என எதன் பின்னாலும் அவர் ஓடுவதில்லை. தன் வாழ்க்கையை அனுபவித்து அவர் வாழ்கிறார்.
- கனி