“கௌஷிகி சக்ரவர்த்தி அரங்கத்தின் உள்ளே `மேக் மல்ஹார்’ ராகம் பாடினால், அரங்கத்துக்கு வெளியே மழை பொழியும்” என்று அவரின் இசை நிகழ்ச்சியை குறித்துப் பெருமையாக பாராட்டுவார்கள் ரசிகர்கள். அப்படிப்பட்ட கௌஷிகியின் இசை நிகழ்ச்சி அண்மையில் நடந்தது.
மார்கழி இசை விழாவுக்கு முன்னோட்டமாக நவம்பரிலேயே இசையின் பன்முகங்களும் வெளிப்படும் இசை நிகழ்ச்சிகள், இந்தியாவின் கலாச்சார தலைநகரான சென்னையில் தொடங்கிவிட்டன. அண்மையில் மியூசிக் அகாடமியில் இந்துஸ்தானி, மேற்கத்திய கலைஞர்கள் பங்கேற்ற கிழக்கும் மேற்கும் சந்திக்கும் இசை நிகழ்ச்சி நடந்தது.
புகழ்பெற்ற இந்துஸ்தானி வாய்ப்பாட்டு கலைஞர் கெளஷிகி சக்ரவர்த்தி, ராகேஷ் செளராஷியா (புல்லாங்குழல்), புர்பயேன் சாட்டர்ஜி (சிதார்), பசல் குரோஷி (தபேலா), ஜினோ பேங்க்ஸ் (டிரம்ஸ்), சங்கீத் ஹல்திபுர் (பியானோ), ரிக்ராஜ் நாதோன் (கிட்டார்) ஆகியோர் வழியாக இந்துஸ்தானி இசையும் மேற்கத்திய இசையும் சங்கமமாகின.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய கலை, கலாசாரத்தை பறைசாற்றும் கலைகளுக்கு எச்.சி.எல். தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருகிறது. இதுவரை மியூசிக் அகாடமியுடன் இணைந்து 13 ஆண்டுகளாக கர்னாடக சங்கீத நிகழ்வுகளை நடத்தி வந்த எச்.சி.எல். முதல்முறையாக இந்துஸ்தானி இசையையும் மேற்கத்திய இசை வடிவத்தையும் இணைக்கும் இசை நிகழ்ச்சியை நடத்தி ரசிகர்களிடம் இருந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது” என்றார் எச்.சி.எல். கார்ப்ப ரேஷன், சிவநாடார் அறக்கட்ட ளையின் முதன்மை செயலாக்க அலுவலர் சுந்தர் மகாலிங்கம்.
வளரும் கலைஞர்கள் குறிப்பாக நடனக் கலைஞர்கள், வாய்ப்பாட்டு கலைஞர்கள், இசைக் கருவிகளை மீட்டு வோரின் திறன்களை வெளிக் கொணரும் வகையில் எச்.சி.எல். மேடை அமைத்துத் தருவது கலை உலகத்துக்கு பெரும் வரவு.
- வா.ரவிக்குமார்