ஆனந்த ஜோதி

81 ரத்தினங்கள் 25: ஆயனாய் வளர்த்தேனோ யசோதையைப் போலே

செய்திப்பிரிவு

கண்ணன் பிறந்தது சிறையில்; வளர்ந்தது ஆயர் சேரியில்; பெற்ற பெருமை மட்டுமே தேவகிக்கு; வளர்த்த பெருமையும் அடைந்த ஆனந்தமும் எல்லாம் யசோதைக்கே உரியது.

கண்ணனை வளர்த்து மார்போடணைத்து பாலூட்டி, சீராட்டி எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்து பட்டாடை உடுத்தி மயில்பீலி அணிவித்து பொன் ஆபரணங்கள் பூட்டி அலங்காரம் செய்து அவனது துடுக்குதனமான விளையாட்டு லீலைகளை ரசித்து ரசித்து அனுபவிக்கும் யோகம் பெற்றவள் யசோதைதான்.

கண்ணனைப் பிடித்து குளிக்க வைக்கவே பெரும் பாடுபடுவாள். நப்பின்னை கேலி செய்வாள் வந்து குளித்துவிடு என்று நீராட்டுவாள்.

நாம் கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு திரும்புகையில் நமக்கு பிரசாதம் நம் கையில் வழங்கப்படும். அந்த இறைவனை நாம் வீட்டில் வைத்தால் எவ்வளவு சிரத்தையோடு படையலிட்டு வணங்க வேண்டும். இறைவனை வீட்டில் வைத்து வளர்க்கும் யசோதை, அவன் கொடுக்கும் சிரமங்களையும் அதிகமாக அனுபவித்தாள். ஒவ்வொரு தாய்க்கும் தன் குழந்தை சுகம் தானே.

பால், தயிர், வெண்ணெய் என்று ஆயர்களின் வீட்டில் விளையாடி தயிர், பானை, வெண்ணெய் பானைகளை உடைத்து உடம்பெல்லாம் பூசிக்கொண்டு தயிர் முடை நாற்றம் வீச ஆடு, மாடுகளை மேய்த்து ஆயர் சிறுவர்களுடன் சேர்ந்து எல்லா குறும்புகளையும் செய்து கொண்டு வளர்ந்தான் கண்ணன் என்ற பரப்பிரம்மம்.

பூதனை, சகடாசூரன், கபித்தாசூரன், பகாசூரன் போன்ற அசுரர்கள் கண்ணனை மாய்க்க வரும்போதெல்லாம் யசோதா கவலைப்பட்டாள்.

கிருஷ்ணன், தன் குலத்து மக்களைக் காக்க வேண்டும் என்று கோவர்த்தன மலையை பெரும் மழைக்கு குடையாகத் தாங்கினான். நஞ்சுமிகுந்த காளிங்கனை யமுனையாற்றில் அடக்கினான்.

யசோதையைப் போல கிருஷ்ணனை எனது இல்லத்தில் வைத்து வளர்க்கவில்லையே சுவாமி என்று புலம்புகிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)
- உஷாதேவி, தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

SCROLL FOR NEXT