ஆனந்த ஜோதி

கலையும் தெய்வீகமும் இணைந்த அற்புதம்

செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலத்தில் சிற்பங்களுக்குப் பெயர் பெற்ற பேளூர், ஹலபேடு ஆலயங்கள் இருக்குமிடத்துக்குச் சற்றுத் தள்ளி பெலவாடியில் வீரநாராயணர் ஆலயம் அமைந்துள்ளது. பெலவாடியை அந்தக் காலத்தில் ஏகசக்கர நகரம் என்றும் அழைத்ததுண்டு. வீரநாராயண சுவாமி கோயில் ஹொய்சள மன்னர்களால் எழுப்பப்பட்டது. இந்த ஆலயத்தை பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுப்பியவர் இரண்டாம் வீரவல்லாளர்.

எளிமையான வீடுகள் வரிசையாக இருக்கும் தெருவிலிருந்து உயரத்தில் ஐந்து படிக்கட்டுகளில் ஏறும் வரை ஆலயம் மிக எளிமையாகவே தோற்றம் தருகிறது. நுழைவாயிலில் நம்மை வரவேற்கும் அழகிய யானை சிலைகளைத் தாண்டி நுழையும்போதுதான் பிரம்மாண்டம் தொடங்குகிறது.

மூன்று விமானங்கள்

த்ரிகூட பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்துக்கு மூன்று விமானங்கள்; அதாவது மூன்று கருவறைகள். ஒவ்வொன்றிலும் ஒருவித திருமாலின் வடிவம்.

கூரைப்பகுதி சாய்வாகக் கட்டப்பட்டிருக்கிறது. யானைகளின்மீது ஹொய்சாளர்களுக்குத் தனிப் பிரியம் என்கிற அளவுக்கு அங்கே, இங்கே என்று பல யானை உருவங்கள் காட்சிதருகின்றன.

பழைய கருவறை என்பது நுழைந்தவுடன் நேரே இருப்பது. அங்கு ஒரு திறந்த மண்டபமும், மூடப்பட்ட மண்டபமும் காணப்படுகின்றன. அவற்றை அடைவதற்கு இருபுறமும் உள்ள பளபளவென்ற தூண்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

கோயில் அர்ச்சகர் ஆலயத்தின் பெருமைகளை அடுக்கினார். ‘’பேலூர், ஹலபேடு ஆலயங்களின் சிற்பங்களைப் பற்றி மக்கள் அதிகமாக அறிந்திருக்கிறார்கள். ஆனால் மிக நேர்த்தியான முக்கிய மூர்த்திகளும், தட்டையாக அல்லாத அற்புதக் கோபுரங்களும் பெலவாடியில்தான் அமைந்துள்ளன’’ என்றார்.

ஹொய்சளர்களின் சிற்பங்களில் ஒரு தனித்துவத்தை உணர்ந்திருக்கிறேன். முக்கிய உருவம் பெரிதாகவும், துணைப் பாத்திரங்கள் மிகச் சிறிதாகவும் அமைந்திருக்கும். பெலவாடி ஆலயச் சிற்பங்களும் அப்படித்தான்.

வீரநாராயணர் வெகு கம்பீரமாக காட்சி தருகிறார். கண்களிலும் வீரம் தெறிக்கிறது. நான்கு கரம் கொண்டவராக, தாமரை ஒன்றின்மீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். எட்டடி உயரம் அந்தச் சிற்பத்தின் கம்பீரத்தை அதிகமாக்குகிறது. அந்த சாளக்கிராமத்தைச் சுற்றிலும் கருடன், காளிங்க நர்த்தனம் ஆடும் கண்ணன் உருவங்கள் காட்சியளிக்கின்றன. கீழே அதே கல்லில் சிறிய அளவில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் காட்சியளிக்கின்றனர்.

“ஒவ்வொரு வருடமும் மார்ச் 28 அன்று ஏழு வாசல்களையும் கடந்து பெருமாளின்மீது சூரியக் கதிர்கள் படும். அது ஓர் அற்புதக் காட்சி. அவ்வளவு நேர்த்தியாக ஆலயத்தை எழுப்பியிருக்கிறார்கள்’’ என்றார் அர்ச்சகர்.

ஹொய்சளர்களின் காலத்திலேயே, இதே வளாகத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்டுள்ளன இரண்டு சந்நிதிகள். அவற்றைக் கடந்துதான் வீரநாராயணர் சுவாமியின் சந்நிதியை அடைய முடியும். நுழையும்போது இடதுபுறம் இருப்பது வேணுகோபால் சுவாமி, வலதுபுறம் இருப்பது யோக நரசிம்மர் சுவாமி.

ஏழடி உயரத்தில் யோக நரசிம்மர்

ஏழடி உயரத்தில் அமர்ந்த வடிவத்தில் காட்சி தருகிறார் யோக நரசிம்மர். கையில் சங்கும் சக்கரமும் தரித்திருக்கிறார். இரு புறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் இங்கும் காட்சியளிக்கின்றனர். முக்கிய உருவத்தின் தலைக்கு மேற்புறத்தில் உள்ள அரை வளைவுப் பகுதியை சிற்பக் கலையில் பிரபாவதி என்பார்கள். யோக நரசிம்மரைச் சுற்றியுள்ள பிரபாவதியில் திருமாலின் பத்து அவதாரங்களும் காட்சியளித்து வியக்க வைக்கின்றன.

அடுத்ததாக வேணுகோபாலனின் சந்நிதியை அடைகிறோம். தொல்லியல் துறையால் ‘இந்தியாவின் மிக அழகான மூலவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்று அர்ச்சகர் கூறியதை முழுமனத்தோடு வழிமொழியத் தோன்றுகிறது. இதுவும் எட்டடியில் அமைந்துள்ள சாளக்கிராமம்.

இடது பாதத்தின் முன்புறமாக வலது பாதத்தை வைத்தபடி, மரம் ஒன்றில் சாய்ந்தபடி கண்ணன் புல்லாங்குழல் ஊதும் காட்சி ஒரு பரவச அனுபவத்தைத் தருகிறது. கோகுலத்தையும் பிருந்தாவனத்தையும் நம் கண்முன்னே கொண்டு வருகின்றன. சிரவண குமாரர்கள் கைகூப்பியபடி நிற்கிறார்கள். கோபியர்கள் கண்ணனின் குழல் ஒலியில் தங்களை மறந்த நிலையில் காணப்படுகிறார்கள். தன் கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவின் முகத்தில்கூட கண்ணனின் குழல் ஒலியைக் கேட்ட மாய நிலை. ஆயர் சிறுவர்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். வேணுகோபாலனின் இருபுறமும் ராதையும் ருக்மணியும் காட்சி தருகிறார்கள்.

பக்தியும் கலையும் இணையும் மாயம் பெலவாடி ஆலயம்.

- ஜி.எஸ்.எஸ்.

SCROLL FOR NEXT