ஆனந்த ஜோதி

அகத்தைத் தேடி 09: தேடலில் கண்ட தீவு

செய்திப்பிரிவு

அவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாதிரிகள். ஜூல்ஸ் மஞ்ச்சான், ஹென்றி லெசாக்ஸ். அவர்கள் 1950-ல் மேற்கிலிருந்து தமிழகத்துக்கு வந்துசேர்ந்தனர். அவர்கள் பரம அரூப ஆனந்தாவாகவும் சுவாமி அபிஷேகானந்தாவாகவும் உருமாற்றம் பெற்றனர். காவிரிக் கரையோரம் குளித்தலை அருகில் தண்ணீர்ப்பள்ளி என்னுமிடத்தில் சச்சிதானந்த ஆசிரமத்தை நிறுவி அந்த வனப்பகுதிக்கு சாந்திவனம் என்னும் பெயரிட்டனர்.

இந்த இருவரில் அருள்தந்தை மஞ்ச்சானியை கிராம மக்கள் கீரைச்சாமியார் என்பார்களாம். மரக்கறியை விரும்பியுண்ணும் அவர், ரமணரிடம் தங்கியிருந்து அவரிடம் ஆன்மிக அனுபவம் பெற்றவர், 1957-ல் மறைந்தார். சுவாமி அபிஷேகானந்தா சாந்திவனத்தில் சிறிது காலம் தனிமைத் தவத்தில் ஈடுபட்டுவிட்டு இமாலயத்தில் துறவியாக தங்கிவிட்டார். இவரும் 1973-ல் மறைந்தார்.

மூன்றாவதாக வந்தவர் அருட்தந்தை பீட்கிரிப்பித்ஸ் (சுவாமி தயானந்தா). கிரிப்பித்ஸ், சிறுவனாக இருந்தபோது, மைதானத்தில் ஒரு மாலையில் நடந்துபோய்க் கொண்டிருந்தான். எங்கும் நிசப்தம். பறவைகளின் கூவல்கள். அவன் நின்று கொண்டிருந்த மரத்தின் பின்னாலிருந்து ஒரு நாரை நீண்ட கூவலுடன் பறந்தது. சூரிய வெளிச்சம் மறைந்தது. அந்தியின் மங்கல் எங்கும் படர்ந்தது. அவனுக்குள் ஒரு பரவசம். நின்ற இடத்திலேயே முழங்காலிட்டு தொழ வேண்டும் போல் உணர்வு. இறைவனின் சந்நிதியில் இருக்கும் உணர்வு அது. அண்ணாந்து பார்க்கத் துணிவில்லை. அந்திக் கருக்கலின் சல்லாத்துணி கடவுளின் முகத்தை மறைத்து விட்டதை அவனால் உணர முடிந்தது. அவனும் சாந்திவனத்தைத் தேடிவந்தான்.

பீட் கிரிப்பித்ஸ் என்ற தவத்திரு சுவாமி தயானந்தாவை முப்பது வருஷங்களுக்கு முன்னால் சந்தித்திருக்கிறேன். அண்மையில் மீண்டும் சாந்திவனத்திற்கு சென்றிருந்தேன். சுவாமி தயானந்தா காலமாகிவிட்ட செய்தியை அறிந்துகொண்டேன்.


சுவாமி தயானந்தா - டோரதிக்

தண்ணீர் தண்ணீர்

தண்ணீர்ப்பள்ளி என்ற பெயர் சூட்டப்பட்ட அந்த இடத்தில், ஒரு புறம் வீடுகளின் புறவாசலைத் தொட்டுக்கொண்டு ஓடும் வாய்க்கால்கள். வயலோரம் நீரோடைகள், குளங்கள், காவிரியின் பிரவாகம்.

அடர்வனத்துக்கு உள்ளே கைகாட்டுகிறது சாந்திவனம் பெயர்ப்பலகை . காவிரியைத் தொட்டுவந்த ஈரக்கைகளால் முகத்தை ஒற்றுகிறது காற்று.

சாந்திவனம் சச்சிதானந்த ஆசிரமத்தின் முகப்புக்கோபுரம் இந்து கோயில் கட்டிட அமைப்பை நினைவூட்டுகிறது. மரங்கள் சூழ்ந்த சாந்திவனத்தில் ஆங்காங்கே குடில்கள். எங்கு பார்த்தாலும் நிழல் கம்பளங்கள். திண்ணைகள், தென்னை ஒலை வேய்ந்த குடில். தேநீர் குடில், நடுவில் மேடையில் தேநீர்க் கெட்டில், சர்க்கரைக் கிண்ணம், குவளைகள்.

எங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரரின் கையில் விரித்த வாழை இலை. அதில் அழகாக வெட்டிவைத்த தேங்காய்க் கீற்றுகள். யாரும் பேசுவதில்லை, பேசத் தோன்றவில்லை. ஆனாலும் எங்கு பார்த்தாலும் அமைதி என்று எழுதிய பலகைகள். மதிய உணவின்போதும் மெளனமாய் உண்ணுங்கள் என்ற குறிப்பு.

குடில் நறுவிசாக இருந்தது. நண்பருக்கும் எனக்கும் கொசுவலை கட்டிய இரண்டு கட்டில்கள். சுத்தமான குளியல் அறை. ஆசிரமத்தின் நியமத்தை விவரிக்கும் அச்சிட்ட குறிப்பு.

மயில்கள் அங்குமிங்கும் நடை பயில்கின்றன. சத்தம்போட்டு அகவுகின்றன. தியான மண்டபத்தில் காயத்ரி மந்திரம், அனைத்து மதப் பிரார்த்தனைப் பாடல்கள், பைபிளின் வாசகங்கள், கிறிஸ்துவ கீதங்கள். மூலஸ்தான இருட்டுக்குள் கற்பூர ஆரத்தி பளிச்சிடும் ஏசுநாதரின் திருவுருவம். அதிகாலை எனில் சந்தனம். மதியம் குங்குமம். மாலை விபூதி, பிரசாதம்.

சச்சிதானந்த ஆசிரமம் பிரார்த்தனையோடு நிற்காமல் அருகில் உள்ள கிராமத்து ஏழைகளுக்கு வீடு கட்டித்தருவது, முதியோர் இல்லம் நடத்துவது, குழந்தைகளுக்கு பால் வழங்குவது, என்று அன்புகாட்டி அரவணைக்கிறது.

ஆசிரமத்தின் காப்பாளராகப் பொறுப்பு வகிக்கும் அருள்தந்தை டோரதிக் (வயது 34) சொல்கிறார். “இங்கே வர எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை. ஆத்திகர் வரலாம். நாத்திகரும் வரலாம். நாங்கள் மனம் மாற்றுகிறோம்” என்கிறார்.

இரண்டு எட்டு வைத்தால் அகண்ட காவிரி. அமைதியாக கம்பீரமாக நகர்கிறாள். நதி நகர்கிறதா? படுத்திருக்கிறதா? அசைவின்மையின் நகர்தலில் ஒரு பெரும் தியான நீர்ப்பரப்பாக காட்சி தருகிறாள் காவிரி.

பார்வையாளர் பதிவேட்டில் ஒரு ஜெர்மானியர் செய்திருந்த பதிவு “நான் என்னோடு இருந்தேன் ஒரு வாரம்”

பிரான்ஸிலிருந்து வந்தவர் எழுதியது இது.

“எங்கேயோ தேடி அலைந்து கடைசியாக இதோ என் அமைதித்தீவு”

என் காலிக்கோப்பையில் அமைதி நிரம்பி வழியலாயிற்று.

(தேடல் தொடரும்....)
- தஞ்சாவூர்க்கவிராயர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com

SCROLL FOR NEXT