ஆனந்த ஜோதி

81 ரத்தினங்கள் - 24: ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே

செய்திப்பிரிவு

விஷ்ணுவின் கையில் ஒளிரும் வலிமை மிகுந்த, உலகை காக்கும் ஆயுதம் சக்கரம் ஆகும். அதை மறைத்துக் கொள்ளும்படி வேண்டிய மகான் வசுதேவர்.

வசுதேவரும் தேவகியும் பெற்றெடுத்த ஒவ்வொரு குழந்தையையும் கம்சனிடம் கொடுத்த உத்தமர் வசுதேவர்.

தேவகி, கிருஷ்ணனை கர்ப்பத்தில் சுமந்தபோதே, தனது பக்தியால் அறிந்த பெருமை கொண்டவர் வசுதேவர். தேவகி கிருஷ்ணனைப் பெற்றெடுத்தபோது முதலில் பார்க்கும் பெருமை பெற்றவரும் அவரே. குழந்தையைப் பார்த்த வசுதேவர், ‘குழந்தாய், சங்கு சக்கர கதா பத்மம் கொண்ட இந்த சதுர்புஜ ரூபத்தை மறைத்துக் கொள்ளேன். கம்சன் பார்த்துவிட்டால் உனக்குக் கஷ்டம் கொடுத்துவிடுவான்.’ என்று வேண்டுகிறார். தந்தை சொல்கேட்டு கிருஷ்ணன் சாதாரணக் குழந்தையாக மாறி பித்ருவுக்கு அமைதியைத் தருகிறார்.

இறைவனுடைய காட்சி நமக்கு கிடைத்தால் போதும் என்று நினைக்காமல் இறைவனுக்குத் துன்பம் வந்துவிடுமே என்று வசுதேவர் அச்சமுற்றார். அவ்வாறு இறைவனுக்கு துன்பம் வருமே என்று தான் ஒருபோதும் நினைக்கவில்லையே, சுவாமி! என்கிறாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை ராமானுஜரிடத்தில்.

(ரகசியங்கள் தொடரும்)
- உஷாதேவி, தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

SCROLL FOR NEXT