ஆனந்த ஜோதி

தமிழில் ஆதித்ய ஹிருதயம்

செய்திப்பிரிவு

ஆதித்ய ஹ்ருதயம் படித்தால் தோஷம் விலகும். புண்ணியம் சேரும் என்று வலியுறுத்துவோர் மத்தியில், அறிவியல்பூர்வமாக விளக்கியிருப்பது புதுமையான முயற்சியாக உள்ளது. ஆன்மிகத்தையும் அறிவியலையும் ஒரு தராசில் ஏற்றிச் சமநிலைப்படுத்தும் ஆசிரியரின் முயற்சி மிகச் சிலருடையது. இந்நூலைப் படிப்போர் சூரியனை நன்றியுணர்வோடு தொழுபவராகவும் முன்னோரையும் இயற்கையையும் ஆராதிப்பவராகவும் அமைவர்.

ஒவ்வொரு சொல்லையும் பொருள் விளக்கி, ஒவ்வொரு கதையொடு தொடர்புபடுத்துவதன் மூலம், அச்சொல் நம் நினைவில் தங்கிவிடுகிறது. தொல்காப்பியர், திருவள்ளுவர், கம்பர், ஔவையார், பாரதியார் மற்றும் பாரதிதாசன் கவிதைகளை ஆங்காங்கே எடுத்துக்காட்டுவது இவ்விரிவுரையின் மற்றுமொரு அழகு. பொருத்தமான வண்ணப்படங்கள் மேலும் அழகூட்டுவன. அகத்திய முனிவரைத் தமிழுலகம் கொண்டாட மறந்ததைக் கூறும் ஆசிரியர், தாம் ஏற்றிக் கொண்டாடத் தவறவில்லை.

இந்நூலில் வரும் கதைகள் மந்திரத்தின் பொருளை எளிமையாக விளக்குவதோடு மட்டுமல்லாமல் உள்ளூர ஓர் உணர்ச்சியை நம்முள் இட்டுச் செல்கிறது என்பதில் ஆசிரியரின் முயற்சிக்கு வெற்றி எனலாம். எல்லா மந்திரங்களும் விஷ்ணு, லலிதா சகஸ்ரநாமத்தோடு ஒப்புநோக்கிப் பொருள் கூறியுள்ள சிறந்த ஆய்வாக அமைந்துள்ளது.

- கவிஞர். இரா. நக்கீரன்

SCROLL FOR NEXT