யுகன்
சாதி, மதம், இனம் வித்தியாசமில்லாமல் எல்லா உயிர்களுக்கும் ஆன்மிக வெளிச்சத்தைப் பாய்ச்சுவது திருமூலரின் திருமந்திரம். கடந்த முப்பது ஆண்டுகளாக திருமந்திரத்தில் பொதிந்துள்ள அருள் நெறிகளை ஆன்மிகக் கருத்துகளை எல்லாரும் பயன்பெறும் வகையில் அருளாளர்களைக் கொண்டு பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகளை நடத்திவருகின்றது திருவாசக - திருமந்திர அறக்கட்டளை, சண்முகசுந்தரம் கல்வி அறக்கட்டளை. இந்தாண்டு திருமந்திர மாநாடு சென்னை, மயிலாப்பூரிலிருக்கும் கோகலே சாஸ்திரி இன்ஸ்டிடியூட் அரங்கில் அண்மையில் நடந்தது.
திருமந்திர இன்னிசை, திருவைந்தெழுத்து ஓதுதல் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, அதோமுக தரிசனம், சிவநிந்தை, குருநிந்தை, மாகேசுர நிந்தை, திருமந்திரத்தில் வாழ்வியல் போன்ற தலைப்புகளில் நெறியாளர்கள் பலர் சொற்பொழிவாற்றினார்கள்.
இரண்டு நாள் மாநாட்டின் நிறைவுப் பேருரையை சிவ.மாதவன் வழங்கினார். தாயைவிட சிறந்த குரு எவருமில்லை. எல்லாவற்றையும் துறந்த பட்டினத்தார், தாயை துறக்கவில்லை. ஆதிசங்கரர் தாயை துறக்கவில்லை.
தாயும் தந்தையுமே மிகச் சிறந்த குரு. பெரியபுராணம் சொல்லும் செய்தி - இறைவன் மட்டும் போற்றுதலுக்கு உரியவன் அல்ல, சிவனடியார்களும் போற்றுதலுக்கு உரியவர்களே என்பதை பல்வேறு உதாரணங்களுடன் தன்னுடைய சொற்பொழிவில் விளக்கினார் `குருநிந்தை’ எனும் தலைப்பில் பேசிய அருணை பாலறாவாயன்.
திருமந்திர மாநாடு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இந்து தமிழ் `ஆனந்த ஜோதி’ இதழில் கரு.ஆறுமுகத்தமிழன் எழுதும் `உயிர் வளர்க்கும் திருமந்திரம்’ முதல்நூல் நூல் வெளியிடப்பட்டது. புரிசை நடராசன் நூலை அறிமுகம் செய்து பேச, நூலாசிரியர் ஆறுமுகத்தமிழன் ஏற்புரை வழங்கினார்.