என். கௌரி
ஓவியர் முல்லைராஜனின் படைப்புலகம் இறைச் சிற்பங்களின் ஓவியங்களால் நிறைந்திருக்கிறது. பல கோயில்களின் விநாயகர்கள், பாதாமி குடைவரைக் கோயில் நடராஜரின் சிவ தாண்டவம், சனி பகவான், லட்சுமி, துவார பாலகர்கள் என அவரது ஓவியக் காட்சி நடக்கும் அரங்கம் முழுக்க சிற்ப, ஓவியங்களின் தெய்விக மணம் கமழ்கிறது.
சென்னை தட்சிணசித்ராவில் ‘ஆர்ட் ஓஷன்’ என்ற ஓவியக் காட்சியில் ஓவியர்கள் முல்லைராஜன், ஆர். ராஜேந்திரனின் ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த ஓவியக் காட்சியில், முல்லைராஜனின் பதினெட்டு படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.
“திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் வீரவநல்லூர்தான் சொந்த ஊர். திருநெல்வேலியைச் சுற்றி நிறைய கோயில்கள் இருந்ததால், சிறுவயதிலிருந்தே கோயில் சிற்பங்களை வரைவதில் ஆர்வம் அதிகம். எந்தப் பயிற்சியும் இல்லாமலே விளையாட்டாக கோயில் சிற்பங்களை வரைவதில் எனக்கு ஈடுபாடு இருந்தது.
அதற்குப் பிறகு, சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படித்தபோது, இந்தியா முழுவதும் அமைந்துள்ள முக்கியமான கோயில்களுக்குச் சென்றேன்.
அப்போது, இறைச் சிற்பங்களை வரைவதில் மேலும் ஈடுபாடு அதிகரித்தது. உண்மையைச் சொல்லப்போனால், இறைச் சிற்பங்களை முழுமையாக வண்ணங்கள், கலைநுணுக்கங்களுடன் வரையத் தொடங்கிய பிறகுதான், இறை நம்பிக்கையின் ஆற்றலை உணர்ந்தேன்” என்கிறார் முல்லைராஜன்.
இந்த ஓவியக் காட்சியின் சிறப்பம்சமாக பாதாமி குடைவரைக் கோயில் சிவ தாண்டவத்தைத் தழுவி அவர் வரைந்திருக்கும் நடராஜர் சிற்பத்தின் ஓவியம் திகழ்கிறது. “பதினாறு கைகளுடன் நடராஜர் சிற்பத்தை வரைந்தது முற்றிலும் சக்திவாய்ந்த அனுபவமாக இருந்தது.
ஒரு கட்டத்தில், எனக்குள் நடராஜரின் ஆற்றல் இருப்பதை உணர்ந்தேன். நடராஜர் ஆற்றலின் மறுஉருவம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் நடராஜரின் இந்த ஆற்றல் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஓவியம் உதவியது,” என்கிறார் அவர்.
நடராஜரைப் போலவே அவர் வரைந்திருக்கும் சனி பகவானின் சிற்பமும் தனித்துவத்துடன் விளங்குகிறது. “பொதுவாக, சனி பகவான் என்றாலே ஒருவித பயம் அனைவரையும் தொற்றிக்கொள்ளும். அந்த பயத்தைப் போக்குவதற்காகவே இந்த ஓவியத்தை வரைந்தேன்.
சனி பகவான் நல்லது செய்யும்போது நிறைய நல்லது செய்வார். அதே மாதிரி, கஷ்டத்தைக் கொடுக்கும்போது அதை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் கொடுப்பார் என்பதை உணர்த்தும் விதத்தில் அவருடைய ஓவியத்தை வரைந்தேன்” என்கிறார் முல்லைராஜன்.
விநாயகரைப் படைப்பாற்றலின் அதிசிறந்த வடிவம் என்று சொல்லும் அவர், “வண்ணங்கள், வடிவங்கள் என விநாயகரை வரைவதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. படைப்பாற்றல், கற்பனை இரண்டும்தான் அவரை வரைவதற்கான அளவுகோல்கள்” என்கிறார். இந்த ஓவியக் காட்சியில், முல்லைராஜன் வரைந்த ஏழு விநாயகர்களின் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. தட்சிண சித்ராவில் இந்த ஓவியக் காட்சி நவம்பர் 10 வரை நடைபெறுகிறது.