யுகன்
உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் அதில் முதலில் களப்பலி ஆவது சிப்பாய்கள். தனி மனித பேராசை, ஆணவம், சாதி, மதம், இனம் இவற்றின் விளைவாகவே சாமான்ய மக்களின்மீது போர் திணிக்கப்படுகிறது. ஆண், பெண், குழந்தைகள், விலங்குகள், பறவைகள் என எல்லா உயிர்களையும் கொன்றழிக்கும் போர் தேவையா? இந்தக் கேள்வியைப் புராண காலம் தொடங்கி மன்னர்கள் ஆட்சியில் தொடர்ந்து, தற்போதுவரை நீடிக்கும் போர் முனைகளில் ஆண்டவர்களுக்காக மாண்டவர்கள் எழுப்புகின்றனர். இதுதான் அண்மையில் சென்னை, மியூசியம் அரங்கத்தில் நடந்த `சிப்பாய்கள்’ நாடகத்தின் கதை.
உலகம் முழுவதும் போர் மேகங்கள் விலகாத இந்தத் தருணத்தில் இப்படியொரு கதைக் களத்தை நாடகமாக்கியதற்கு இயக்குநர் செல்லா செல்லத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். போர்முனையில் இருப்பவர்கள் மட்டும்தான் சிப்பாய்களா? நயவஞ்சக அரசியல்வாதிகளுக்காக உயிர்ப்பலி ஆகும் தொண்டர்கள், நிழல் கதாநாயகனை நிஜமென்று நினைத்து உருகும் ரசிகர்கள்... எனச் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் கையறு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாமும் சிப்பாய்கள்தாம் என்பதைப் பளிச்சென்று புரியவைக்கிறது நாடகத்தின் தொனி.
`அரசன் சுக்ரீவனுக்கு அவருடைய மனைவி கிடைத்து விட்டாள். ராமனுக்கும் சீதை கிடைத்துவிட்டாள். ஆனால் எனக்கு வாழ்க்கை முடிந்துவிட்டது’ என்று ஒரு வானர வீரன் புலம்பும் காட்சி, போரின் கொடுமையை விளக்கும் ஒரு காட்சிப் பதம்! குடிமக்களை அழிப்பது, குழந்தைகளை, பெண்களைச் சித்திரவதைக்குள்ளாக்குவதை போர்க்குற்றங்கள் என வரையறுத்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை. ஆனால், போரே குற்றம்தான் என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கின்றன நாடகத்தின் காட்சிகள்.
இயக்குநர் செல்லா செல்லம். விவசாயத்தைப் பூர்விகமான தொழிலாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து, முதுநிலைப் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர். ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர். `செல்லம் கலாலயம்’ என்னும் பெயரில் நாடகக் குழுவைத் தொடங்கி நவீன நாடகங்களை அரங்கேற்றிவருகிறார்.
நாடகத்தின் தீவிரத்தை ஒளியும் அரங்க மேடை நிர்வாகமும் (கருணா பிரசாத், டாக்டர் பாஸ்கர்) துல்லியமாக ரசிகர்களுக்குக் கடத்தின. கதாபாத்திரத்தின் சூழலை, உணர்ச்சிப் போராட்டத்தை கெவின் புருனோவின் வயலின் இசையும் பிரதீப், அருண், லில்லியின் தாள ஒலிகளும் பார்வையாளர்களுக்கு வெகு நெருக்கமாகக் கொண்டு செல்ல உதவின.