ஆனந்த ஜோதி

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 100: தீண்டாய் தீண்டாய்

செய்திப்பிரிவு

கரு.ஆறுமுகத்தமிழன்

‘தீண்டாமை மனித நேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும்’; என்று இப்போதும் அரசு வெளியிடும் பாடப் புத்தகங்களில் அச்சடிக்கப்படுகிறது. தீண்டாமை கருதுவார் இன்னும் உளர் ஆதலால் அதன் எதிர்க் கருத்தை விதைக்க இது.

தீண்டாமையின் அடிப்படை தூய்மை உணர்ச்சி என்கிறார்கள். ஆகிக்கொள்க. காண்டல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தீண்டல் என்று நமக்கு வாய்த்திருக்கும் ஐந்து அறிவுப் புலன்களில் தீண்டல் ஒன்றல்லவா? தூய்மை கருதித் தீண்ட மறுத்தால் மெய்/தோல் என்னும் புலன் வழியாக வரவேண்டிய அறிவு வாராதுபோகும் அல்லவா?
மெய்யியலாளர் சுந்தர் சருக்கை ‘தீண்டாமை குறித்து உள்ளது உரைத்தல்’ (Sundar Sarukkai, “Phenomenology of Untouchability”, Economic & Political Weekly, Sep. 12, 2009) என்னும் தன் கட்டுரையில் மேற்கோள் காட்டிச் சில சொல்கிறார்: காண்டல், கேட்டல் போன்ற மற்ற புலன் உணர்ச்சிகள் இல்லாமல் நாம் வாழ்தல் இயலும்; ஆனால் தீண்டல் என்னும் புலன் உணர்ச்சி இல்லாமல் வாழ்வது இயலாது.

நமக்கு அறிவு ஊட்டும் செயலை மற்ற புலன் உணர்ச்சிகள் கைவிடும் காலத்தில்கூடத் தீண்டல் உணர்ச்சி நம்மைக் கைவிடாமல் கரையேற்றும். புதிதாய்ப் பிறக்கும் விலங்குக் கன்றுகளில் தாயினால் தீண்டப்படாதவை, நக்கப்படாதவற்றுக்குச் சாகும் வாய்ப்பு கூடுதல் என்கின்றன அறிவியல் ஆய்வுகள்.

தீண்ட மறுத்தால் தீண்டும் உணர்ச்சிமட்டுந்தான் கிட்டாமல் போகும் என்று கருத வேண்டாம்; சுவை உணர்ச்சியும் கிட்டாமல் போகும். தீண்டாமலே ஒன்றைக் காணலாம்; கேட்கலாம்; முகரலாம்; ஆனால் சுவைக்க முடியுமோ? நாக்குத் தீண்டாமல் சுவை ஏது? ஆகவே ஐம்புலன் உணர்ச்சிகளில் தீண்டலே உயர்ந்தது என்கிறான் அரிஸ்டாட்டில்.

ஒன்றுஅறி வதுவே உற்றுஅறி வதுவே;
இரண்டுஅறி வதுவே அதனொடு நாவே;
மூன்றுஅறி வதுவே அவற்றொடு மூக்கே;
நான்குஅறி வதுவே அவற்றொடு கண்ணே;
ஐந்துஅறி வதுவே அவற்றொடு செவியே;
ஆறுஅறி வதுவே அவற்றொடு மனனே;
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.
(தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல், 27)

எல்லா உயிர்களும் ஆறு அறிவுடையன அல்ல; ஓர் அறிவு தொடங்கி ஆறு அறிவுவரை உயிர் அறிவுகள் விரிகின்றன. உயிர் வாழ்வதற்கான குறைந்தகட்டத் தேவை தீண்டல் அறிவு. ஓர் உயிரின் முதல் அறிவும் தீண்டல் அறிவே. அதைமட்டுமே உடையவை ஓரறிவு உயிர்கள். தீண்டியும் சுவைத்தும் அறிவன ஈரறிவு உயிர்கள்; தீண்டல், சுவைத்தலொடு முகர்ந்தும் அறிவன மூவறிவு உயிர்கள்; இவை மூன்றொடு கண்டும் அறிவன நான்கறிவு உயிர்கள்; இவை நான்கோடு கேட்டும் அறிவன ஐந்தறிவு உயிர்கள்; இவை ஐந்தொடு மனம்கொண்டு பகுத்தும் அறிவன ஆறறிவு உயிர் என்று வகைப்படுத்துகிறார்கள் மெய்யறிஞர்கள்.

தன் இருப்பைத் தான் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றால்கூடத் தீண்டித்தானே உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது? கனவா நனவா என்று கிள்ளிப் பார்த்துக்கொள்வதில்லையா?

அவ்வாறாயின் தீண்டப்படாதது என்று ஏதேனும் ஒன்று இருக்க முடியுமா? பார்க்கத்தக்கவை அனைத்துமே தீண்டி உணரத்தக்கவை. எனில் தீண்டப்படாதது எது? பார்க்கவும் கேட்கவும் முகரவும் சுவைக்கவும்படாதது எதுவோ அதுவே தீண்டவும்படாதது. அதைக் கடவுள் என்க. யாரும் தீண்டாச் சிவம்.

ஆறுஆறு அகன்று தனைஅறிந் தான்அவன்
ஈறுஆகி யாவினும் யாவும் தனில்எய்த
வேறாய் வெளிபுக்கு வீடுஉற்றான் அம்மருள்
தேறாத் தெளிவுஉற்றுத் தீண்டாச் சிவம்ஆமே. (திருமந்திரம் 2345)

உயிர்களின் அவதிக்குக் காரணம் அறியாமை. அறியாமை நீங்க அறிவு வேண்டும்; அறிவு வேண்டுமானால் அறியும் புலன்கள் வேண்டும்; அறியும் புலன்கள் வேண்டுமானால் அவற்றுக்குப் பாத்திரமாக உடல் வேண்டும்; உண்மை, பொய்மைகளை வேறுபடுத்தி அறிவதற்கு ஓர் உலகம் வேண்டும் என்பதால் முப்பத்தாறு படிநிலைகளில் உலகம் தோற்றுவிக்கப்பட்டு உயிர்கள் அதனுள் செலுத்தப்படுகின்றன. உடம்புக்குள்ளும் உலகத்துக்குள்ளும் வந்துவிட்ட உயிர் அவற்றிலேயே திளைத்து, மயங்கித் தன்னை இழந்துவிடாமல், அவற்றிலிருந்து தன்னை வேறுபடுத்தி அறியவேண்டும். அறியவேண்டியது அவற்றை அல்ல, தன்னைத்தான் என்று உணரவேண்டும். தன்னை அறிந்தால் அறியாமை மயக்கம் நீங்கும்;

தெளிவு வரும். தெளிவு வந்துவிட்டால் அறிவதற்கான புலன்கள், அவற்றைத் தாங்கும் உடம்புகள், அவற்றைத் தாங்கும் உலகம் இவற்றின் தேவை அற்றுப்போகும். உயிர் இவற்றிலிருந்து நீங்கும்போது, அது தீண்டா உயிர் ஆகிறது. உடம்பில்லாத உயிர் யாரையும் தீண்டாது, யாராலும் தீண்டவும்படாது—தீண்டாச் சிவம்போல. சிவத்தைத் தீண்டினார் யார்? சிவத்தால் தீண்டப்பட்டார் யார்?
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். (குறள் 1106)
தீண்டும்போதெல்லாம் உயிர் தளிர்க்கிறது; இவள் தோள்கள் சாவா மருந்தான அமுதத்தால் ஆனவை போலிருக்கிறது என்பது வள்ளுவச் சொல்.
தீண்டாமை மனித நேயமற்ற செயலும் பெருங்குற்றமும் ஆகும் என்பதோடு, தீண்டாமை அறிவு மறுப்பும் விடுதலை மறுப்பும் ஆகும். தீண்டாமை உயிரைக் கருக்கும்; தீண்டலோ உயிரைப் பெருக்கும்.

(உயிர் பெருகட்டும்) கட்டுரையாளர்,
தொடர்புக்கு : arumugatamilan@gmail.com

SCROLL FOR NEXT