சனியாஸ்னைன் கான்
இறைத்தூதர் மதினாவுக்குக் குடிபெயர்வதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தாயிஃப் நகரத்துக்குச் சென்றிருந்தார். தாயிஃப் நகரத்திலிருந்து மக்காவுக்குத் திரும்பும் வழியில் நக்லா என்ற இடத்தில் அவர் தங்கினார்.
மக்காவுக்கு மீண்டும் திரும்புவதைப் பற்றி இறைத்தூதர் கவலைகொண்டார். தாயிஃப் நகரத்தில் இறைத்தூதர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பற்றி மக்காவில் வசிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்தக் காரணத்தால், அவர்கள் இன்னும் கடுமையாகத் தன்னை எதிர்ப்பார்கள் என்று நினைத்தார் இறைத்தூதர்.
நக்லாவில் தான் அமர்ந்திருந்த இடத்தில் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார் அவர். இறைத்தூதர் குர்ஆனை ஓதத்தொடங்கியபோது, அந்த வழியாக ஒரு ஜின் கூட்டம் சென்றது. இறைத்தூதர் ஓதிய குர்ஆனை அவை நின்று மிகவும் கவனமுடன் கேட்டன.
அந்த ஜின் கூட்டம், தங்கள் சுற்றத்தாரிடம் குர்ஆனின் செய்தியைப் பரப்ப ஆரம்பித்தன. இந்த நிகழ்ச்சி இறைத்தூதருக்குத் தெரியாமலேயே நடைபெற்றது.
பிறகு, குர்ஆன் வெளிப்பாட்டின் மூலம் என்ன நடந்தது என்பதை இறைத்தூதர் தெரிந்துகொண்டார்.
“ஒரு ஜின் கூட்டம் குர் ஆனைக் கேட்டது எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அவை சொன்னது –‘நல்வழியைக் காட்டும் அற்புதமான செய்தியை நாங்கள் கேட்டோம். அதனால், அதை நாங்கள் நம்பினோம். நாங்கள் எங்கள் இறைவனை யாருடனும் இணைவைக்க மாட்டோம். எங்கள் இறைவனின் மாட்சிமையை ஏற்றிப்புகழ்வோம்.”’
- பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்,’ குட்வர்ட்.)