ஆனந்த ஜோதி

ஆன்மிக நூலகம்: கருணையின் வெளிப்பாடு

செய்திப்பிரிவு

புத்தமதக் குடும்பத்திலிருந்து ஒருமுறை குரு டோஷியை இரவு விருந்துக்கு அழைத்திருந்தனர். அந்தக் குடும்பத்தின் தலைவர் ஒரு தட்டு நிறைய புல்லை அடுக்கிவைத்து அதை குரு டோஷியின் முன் வைத்தார். குரு டோஷி தன்னுடைய கைமுட்டிகள் இரண்டையும் தனது நெற்றியில் வைத்து, கட்டை விரல்களை உயர்த்தி, ஒரு மாட்டுடைய கொம்புகளைப் போலக் காட்டினார்.

அவர் அவ்வாறு காட்டியபிறகு அவருக்கு நல்ல இரவு உணவு பரிமாறப்பட்டது. பின்னர் ஒரு நாள் ஒரு சகதுறவி, குரு டோஷியிடம் அவருடைய வினோதச் சைகையின் பொருளைக் கேட்டார். “அவலோகிதேஸ்வரா போதிசத்வா” என்றார் குரு டோஷி.

அக்காலங்களில் ஜென் துறவிகள், ஒருவருக்கொருவர் தங்களுடைய ஜென் அனுபவத்தைச் சோதித்துக் கொள்வதற்காக, சவால்கள் விட்டுக்கொள்வது வழக்கமாக இருந்தது. உணவுக்குப் பதிலாக குரு டோஷிக்கு ஒரு தட்டு நிறைய அந்தக் குடும்பத் தலைவர் புல் அளித்ததன் நோக்கம் இதுவே. குரு டோஷியும் அதற்கு இணையாகக் கோபப்படாமல், கேள்விகள் கேட்காமல், விளக்கங்கள் அளிக்காமல், ஒரு மாடு போல நடித்துக் காட்டினார்.

நான் மாடாக இருந்திருந்தால் இந்தப் புல்லை உண்டிருப்பேன் என்று பொருள்பட. இப்பொழுது அந்தக் குடும்பத் தலைவருக்கு நல்ல உணவை குரு டோஷிக்கு அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை, ஏனெனில் அவர் விட்ட சவாலை குரு எளிதில் வென்றுவிட்டார். பின்னர், ஒரு சக துறவி கேட்டும் குரு டோஷி இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. அவர் சொன்னதெல்லாம், “அவலோகிதேஸ்வரா போதிசத்வா” (புத்தபிரானின் கருணையின் வெளிப்பாடு) என்பதுதான். புத்தம் சரணம்!

ஜென் பாடங்கள்
தொகுப்பு : யோமே எம். குபாஸ்
தமிழாக்கம் : ந. முரளிதரன்
கண்ணதாசன் பதிப்பகம் தொடர்புக்கு: 044- 2433 2682 விலை : ரூ. 180/-

பரந்தாமனின் அவதாரங்கள்

இந்த நூலில் ஆசிரியர் சி. மணி, பரந்தாமனின் அவதாரங்களை மரபுக்கவிதையில் வடிக்க ஆவலுற்றுப் படைத்திருக்கிறார். தமிழில் எண்ணிலடங்காத புத்தகங்கள் பரந்தாமனைப் பற்றியும் அவன் லீலைகளைப் பற்றியும் ஏற்கெனவே வெளிவந்திருந்த போதும் தமிழ்மேல் கொண்ட பற்றினாலும் தமிழ் மென்மேலும் வளர்ந்து இன்றைய நாளையத் தலைமுறைகளையும் சேரவேண்டும் என்ற உந்துதலாலும் மரபுக் கவிதையில் எளிய நடையில் தந்திருக்கிறார். மற்ற அவதாரங்களையும் வெளியிடுவதில் மிகுந்த அக்கறையுடனும் முனைப்புடனும் பணியாற்றி வருகிறார்.

திருமாலின் நரசிம்ம, வாமன அவதாரங்கள்
சி. மணி
மணிமேகலைப் பிரசுரம்
தொடர்புக்கு : 044 - 24346082
விலை : ரூ. 140/-

SCROLL FOR NEXT