ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
29.10.2019 முதல் 13.11.2020 வரை
நிகழும் விகாரி வருடம், ஐப்பசி மாதம் 11-ம் தேதி திங்கள் கிழமை,(விடிந்தால் செவ்வாய்) 28/29.10.2019 சுக்ல பட்சத்து பிரதமை திதி, கீழ்நோக்குள்ள விசாகம் நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், பவம் நாமகரணம், நேந்திரம், ஜுவனம் மறைந்த மந்தயோகத்தில் சந்திரன் ஓரையில் பஞ்சபட்சியில் காகம் துயில் பயிலும் நேரத்திலும், தட்சணாயனப் புண்ணிய காலத்தில் வர்ஷருதுவில், அதிகாலை 3 மணி 40 நிமிடத்திற்கு சூரிய உதயம் நாழிகை 54.09க்கு கன்னி லக்னத்தில், நவாம்சத்தில் கும்ப லக்னத்தில் தங்கத்துக்கும், தலைமைக்கும் உரிய கிரகமான வியாழன் எனும் குருபகவான் ஸ்திர வீடான விருச்சிகத்திலிருந்து தன் சொந்த வீடான தனுசில் சென்று அமர்கிறார். 28.3.2020 முதல் 01.06.2020 வரை அதிசாரமாகவும், 2.6.2020 முதல் 6.7.2020 வரை வக்கிரமாகவும் நீசவீடான மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.
குருபகவானின் இந்தப் பெயர்ச்சியில் நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். பாகிஸ்தான்- சீன எல்லைகள் பலப்படுத்தப்படும். கல்வித்துறை நவீனமாகும். ஆள்மாறாட்டம் செய்யமுடியாதபடி நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வுகளுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும்.
போர்தளவீடான தனுசில் குரு அமர்வதால் இந்தியா அதி நவீன ஆயுதங்களைத் தயாரிக்கும். சாமியார்கள், ஆன்மிகவாதிகள் பாதிப்படைவார்கள். தேசத்தைப் பாதித்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவிற்கு வரும். அமைச்சர்கள், சாமியார்கள் வழக்குகளில் சிக்குவார்கள். ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் போராடுவார்கள். அரசு ஊழியர்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் வரும்.
ஏப்ரல், மே, ஜுன் மாதங்களில் தங்கம் விலை குறையும். உலகமெங்கும் பொருளாதார மந்தநிலை (Recession) அதிகரிக்கும். 2020-ல் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் அடி வாங்கும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறை அதிக லாபம் ஈட்டும். கச்சா எண்ணெய் விலை அதிகமாகும்.
சர்வதேசச் சந்தையில் பெட்ரோல் விலை உயரும். இந்தியாவில் கோவா, குஜராத், பம்பாய் பகுதிகளில் வியாபாரம் பாதிக்கும். வடக்கு, கிழக்கு ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளில் நில நடுக்கம் வரும். ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதி, அருணாசலப்பிரதேசம், அஸ்ஸாம் பகுதிகளில் கலவரம் வெடிக்கும். வடகொரியா, மங்கோலியா, கனடா, பாகிஸ்தானில் கலவரம் பரவும். தமிழ்நாட்டில் சத்தியமங்கலம், ஈரோடு, கடலூர் உளுந்தூர் பேட்டை பகுதிகள் பாதிக்கும்.
கடக ராசி வாசகர்களே
பகைவருக்கும் உதவும் பரந்த மனசுக்குச் சொந்தக்காரர்களே! உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து கொஞ்சம் பணப்புழக்கத்தையும், ஓரளவு வசதி வாய்ப்புகளையும் தந்த குருபகவான் இப்போது 29.10.2019 முதல் 13.11.2020 வரை ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன் தருவார். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதிகம் போராட வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. உடல் நலத்தில் அதிகம் அக்கறை தேவை.
குருபகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். இழுபறியான வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்குச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்குள் சந்தேகம் தீர்ந்து நிம்மதி பிறக்கும். தாம்பத்யம் இனிக்கும். குரு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலை கிடைக்கும்.
அறக்கட்டளை, சங்கம் தொடங்குவீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். வீடு, கட்டிட வேலைக்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகளையெல்லாம் கட்டுப்படுத்துவீர்கள். பிள்ளைகளுக்கு வெளிநாட்டு வேலை, வரன் அமையும். போகாமலிருந்த குலதெய்வக் கோயிலுக்கு இப்பொழுது சென்று வருவீர்கள்.
29.10.2019 முதல் 31.12.2019 வரையிலான காலகட்டத்தில் குருபகவான் மூலம் நட்சத்திரத்துக்குச் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். 1.1.2020 முதல் 5.3.2020 வரை, 31.7.2020 முதல் 18.10.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழிச் சொத்துக்கள் கைக்கு வரும். உங்களால் வளர்ச்சியடைந்தவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், லேப்டாப், செல்போன், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குருபகவான் உத்திராடம் 1-ம் பாதம் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. 28.03.2020 முதல் 6.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7- ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்ரமாகியும் அமர்வதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப் போன அரசு காரியங்கள் விரைந்து முடியும். 07.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலக்கட்டத்தில் உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் வீண் அலைச்சல், தர்மசங்கடமான சூழ்நிலைகள், தாயாருக்கு தைராய்டு, முதுகுத் தண்டில் வலி வந்துப் போகும். வீட்டில் குடி நீர் குழாய், கழிவு நீர் குழாய் அடைப்பு ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்யலாம். தொழிலில் போட்டிகள் அதிகரிக்கத்தான் செய்யும். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிக சம்பளத்துடன் கூடிய பதவி தேடி வரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வெளிநாட்டுத்தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும்.இந்த குரு மாற்றம் முதல் பாதியில் உங்களை அலைகழித்தாலும் இரண்டாவது பாதியில் வெற்றியைத் தரும்.
பரிகாரம்
கோயம்புத்தூர் மேட்டுப்பாளையத்தையடுத்து துடியலூரில் அருள்பாலிக்கும் அருள்மிகு கவைய காளியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். கோதுமை தானம் கொடுங்கள். குடும்பப் பிரச்சினை தீரும்.