ஆனந்த ஜோதி

இறைத்தூதர் சரிதம் 17: அவர்கள் அல்லாவின் வழிநடப்பார்கள்

செய்திப்பிரிவு

சனியாஸ்னைன் கான்

தாயிஃப் நகரத்தில் ஏற்பட்ட கடுமையான அனுபவம் இறைத்தூதருக்கு வாழ்க்கையின் கடினமான தருணமாக அமைந்தது. ஆனால், ஒருமுறை இறைத்தூதரின் மனைவி ஆயிஷா, “ஓ, இறைத்தூதரே, உங்கள் வாழ்க்கையில் உஹத் அனுபவத்தைவிட கடினமான காலக்கட்டம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?” என்று கேட்டார்.

உஹத், மக்காவுக்கு அருகில் இருக்கும் இடம். அந்த இடத்தில்தான் மக்கா நகரவாசிகளுக்கும் இசுலாமியர்களுக்கான போர் நிகழ்ந்தது. இந்தப் போரில், இறைத்தூதரும், அவருடைய தோழர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

“மக்கா நகரவாசிகள் எனக்கு நிறைய இன்னல்களை உருவாக்கியிருக்கின்றனர். ஆனால், தாயிஃப் நகரத்தில் துயரத்துடன் திரும்பியதுதான் என் வாழ்க்கையில் கடினமான நாள்” என்று ஆயிஷாவிடம் சொன்னார் இறைத்தூதர். அன்று தாயிஃப் நகரத்திலிருந்து வெளியேறி குர்ன் அல் தாலிப் என்ற இடத்தை அடைந்தார் இறைத்தூதர்.

அப்போது அவர் தலைமீது நிழல் படியத் தொடங்கியதால் அவர் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தார். ஜிப்ரீல் என்ற இறைவனின் மலக்கு, அவரை அழைத்தது, “ஓ முஹம்மது, அல்லா உங்களுக்கு மக்கள் கொடுத்த பதிலைக் கேட்டுக்கொண்டிருந்தார். அல்லா, என்னுடன் மலைகளின் மலக்கை அனுப்பியிருக்கிறார். நீங்கள் என்னக் கட்டளையிடுகிறீர்களோ, அதை மலைகளின் மலக்கு நிறைவேற்றும்,” என்றது ஜிப்ரீல்.

அதற்குப் பிறகு, மலைகளின் மலக்கான மாலிக் அல்-ஜிபல் இறைத்தூதரின் முன் தோன்றினார். இறைத்தூதரை வணங்கிய மாலிக், “ஓ, முஹம்மது, என்னை உங்களிடம் அல்லா அனுப்பியிருக்கிறார். நான் மலைகளின் மலக்கு. எல்லா மலைகளும் என் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. நீங்கள் எனக்கு என்ன கட்டளையிடுவதாக இருந்தாலும், அதை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். என்னால், இந்த இரண்டு மலைகளையும் ஒன்றாகக் கொண்டுவந்து தாயிஃப் நகரத்தையே அழித்துவிட முடியும்,” என்றார்.

“வேண்டாம், அப்படி எதுவும் செய்யத் தேவையில்லை. அந்த மக்களின் வருங்காலத் தலைமுறையினர் மீது எனக்கு நம்பிக்கையிருக்கிறது. இப்போது அந்த நகரத்தில் வசிப்பவர்களைப் போன்று வருங்காலத் தலைமுறையினர் இருக்க மாட்டார்கள். அவர்கள் அல்லாவை நிச்சயம் வழிபடுவார்கள். அல்லாவின் வழிநடப்பார்கள்,” என்று உறுதியுடன் இறைத்தூதர் மாலிக்கிடம் தெரிவித்தார்.

- பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட்)

SCROLL FOR NEXT