வி. இக்னேஷியஸ்
“அன்புக்குரியவர்களே! நம் கடவுள் இரக்கம் நிறைந்தவர்! ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாய் இருப்பவர்!”
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலே முதல் அதிகாரம் மூன்றாம் வசனத்தில் புனித சின்னப்பர் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி விசுவாசிகளைத் தேற்றுகிறார்.
தனக்கு ஏற்பட்ட வேதனைகளையும் இடறல்களையும் பலவிதமான ஆபத்துகளையும் மரணத் தண்டனைக்கு ஏதுவான துன்பங்களையும் அவர் எடுத்துச் சொல்கிறார். “நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க முடிகிறது” என்று தன்னையே ஒரு சாட்சியாக முன் நிறுத்தி இந்த வார்த்தைகளை எழுதுகின்றார்.
புனித சின்னப்பர் கொரிந்து மக்களுக்கும் இன்னும் எத்தனை எத்தனையோ விதவிதமான மக்களுக்கும் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைப் போதித்து வந்தார். சிலுவையில் அறையுண்ட மெசியா! அவரே எல்லா ஞானத்துக்கும் ஊற்று என்பதை சொல்லிக் கொடுத்தார்.
இதைக் கேட்டவர்கள் எல்லோரும் உடனே மனம் திரும்பினார்கள் என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் கடவுளின் பக்கம் திரும்பினார்கள். இன்னும் சிலர் மிகுந்த காழ்ப்புணர்வோடு அவரைக் காட்டிக் கொடுத்தார்கள். அவரைப் பிடித்துக் கொடுத்து துரோகம் செய்தனர்.
புனித சின்னப்பருக்கு சிறைத் தண்டனையும் விதித்தார்கள். நாம் உயிர் பிழைப்போமோ என்ற சந்தேகம் கூட அவருக்கு வந்து விட்டது. இப்பேர்ப்பட்ட நேரத்தில்தான் அவர் தன்னுடைய அசைக்க முடியாத விசுவாசத்தைக் கருவியாகப் பயன்படுத்தினார்.
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாவது திருமுகம் நான்காவது அதிகாரத்தில், “நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்து போவதில்லை” என்று ஊக்கமாக, உருக்கமாக நமக்கு எழுதி வைத்திருக்கிறார். இதற்கு காரணம் அவர் சிந்தனையில் உள்ளத்தின் ஆழத்தில் அவர் வைத்திருந்த ஒரு அசைக்க முடியாத இறைப் பற்றுதான்.