ஆனந்த ஜோதி

இறைத்தூதர் சரிதம் 14: நபிகள் சந்தித்த சோதனைக்காலம்

செய்திப்பிரிவு

சனியாஸ்னைன் கான்

ஊருக்கு வெளியே கூடாரங்களில் வாழ்ந்துகொண்டிருந்த இறைத்தூதரின் குடும்பமும், இன்னும் சில இஸ்லாமியக் குடும்பங்களும் மக்காவிலுள்ள அவர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் வீடுகளெல்லாம் சிதிலமடைந்த நிலையில் இருந்தன. குரைஷ் இனத்தவரின் புறக்கணிப்பால் உடல்ரீதியான தண்டனை மட்டுமல்லாமல் பொருளாதார இழப்பையும் இறைத்தூதரின் குடும்பம் சந்திக்க நேர்ந்தது. இறைத்தூதரைப் பின்பற்றி வெளியேறிய இஸ்லாமியர்களும் அதே நிலைமையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்களின் தொழில்கள் அழிக்கப்பட்டிருந்தன. மீண்டும் தங்களுக்கான வாழ்வாதாரத்தை மறுகட்டுமானம் செய்வது, அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.

இந்த நேரத்தில், இறைத்தூதரின் சித்தப்பா அபூ தாலிப் நோய்வாய்ப்பட்டார். அவர் புறக்கணிப்புக் காலம் முடிந்து மக்காவுக்குத் திரும்பிய சில காலத்திலேயே காலமானார். கதீஜாவின் உடல்நிலையும் மோசமானது. புறக்கணிப்புக் காலத்தில் அவர் கடும்துன்பத்தை அனுபவித்தார். கிடைத்த சிறிதளவு உணவை அவர் சாப்பிடாமல் குழந்தைகளுக்கும் கணவருக்கும் அளித்துவந்தார். அதனால், மக்காவுக்குத் திரும்பியவுடன் அவரும் நோய்வாய்ப்பட்டார். அபூ தாலிப் இறந்த சில நாட்களுக்குப் பிறகு, கதீஜாவும் மரணமடைந்தார்.

துக்க ஆண்டு

இறைத்தூதருக்கு உறுதுணையாக இருந்த அந்த இருவரும் ஒரே நேரத்தில் இந்த உலகத்தை விட்டுச் சென்றனர். அவர்களுடைய இழப்பு இறைத்தூதரைக் கடுமையாகப் பாதித்தது. அவர் அந்த ஆண்டை ‘துக்க ஆண்டு’ என்று அறிவித்தார். அதற்குப் பிறகு, இறைத்தூதர் எப்போதும் கதீஜாவை அன்புடனும் வாஞ்சையுடனும் நினைவுகூர்ந்தார். கதீஜாவின் வாழ்க்கை இஸ்லாமிய பெண்களுக்குப் பெரும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக அமைந்தது. அவரின் வாழ்க்கைக் கதை, அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது. கதீஜாவின் தியாகமும் அர்ப்பணிப்பும் என்றென்றும் நினைவுக்கூரத் தக்கவை.

அபூ தாலிப் இறப்புக்குப்பின், குரைஷ் இனத்தவரின் தாக்குதல் இறைத்தூதர் மீது இரண்டு மடங்கு அதிகரித்தது. அபூ தாலிப் இறந்துவிட்டதால், பனு ஹாஷிம் குழுவின் தலைவராக அபூ லஹப் நியமிக்கப்பட்டார். அவர் இறைத்தூதரை எப்போதுமே எதிரியாகத்தான் நினைத்துவந்தார். அதனால், இறைத்தூதர் மீண்டும் ஒரு கடினமானக் காலத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

- பயணம் தொடரும்
தமிழில்: என். கௌரி
(நன்றி: ‘பெஸ்ட் லவ்டு புரோஃபெட் முஹம்மது ஸ்டோரீஸ்’ குட்வர்ட்)

SCROLL FOR NEXT